search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது 55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜகுமாரன்(29) என்ற மகனும், வளர்மதி(28) என்ற மகளும் உள்ளனர்.

    வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜகுமாரன் திருச்சி சாஸ்திரி ரோட்டில் ஒரு நகைகடையில் வேலை செய்து வருகிறார். லிங்கம் தினமும் வியாபாரத்திற்காக மார்க்கெட் சென்று பழங்கள் வாங்கி வருவது வழக்கம்.

    நேற்று இவர் வழக்கம்போல பழங்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட் நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்த லிங்கம் மற்றும் அவரது மகன் ராஜகுமாரன் ஆகியோர் கொடிமலரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலசந்தர், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட கொடிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    மகன் ராஜகுமாரனே தாய் கொடிமலரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ராஜகுமாரன் தனது தந்தை வழி உறவினர் மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் தனது உறவினர் மகளைதான் திருமணம் செய்யவேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ராஜகுமாரன் கடந்த 6-ந்தேதி விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ராஜகுமாரன் வீடு திரும்பினார்.

    வீட்டுக்கு வந்தபிறகு தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு கொடிமலரிடம் வற்புறுத்தினார். அதற்கு கொடிமலர் பிடிவாதமாக மறுவிட்டார். இது ராஜகுமாரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று அதிகாலை லிங்கம் கடைக்கு சென்ற நிலையில் கொடிமலருக்கும், ராஜகுமாரனுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் கத்தியால் கொடிமலரை குத்தி கொலை செய்தார்.

    பின்னர் யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் மகள் ஜெய்ஸ்ரீ (வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கில பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஜெய்ஸ்ரீ ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கிஷோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார்.

    கடந்த 20-ந்தேதி கிஷோரும், ஜெய்ஸ்ரீயும் நண்பரின் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெய்ஸ்ரீ திடீரென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஜெய்ஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைதான கிஷோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் ஜெய்ஸ்ரீயும், கடந்த 5 வருடமாக காதலித்து வந்தோம். ஜெய்ஸ்ரீ பள்ளியில் படிக்கும்போது அவரை நான் விரும்பினேன். இந்த நிலையில் ஜெய்ஸ்ரீ திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அதற்கு நான் 'நீ கல்லூரி படிப்பை முடி, நானும் ஒரு வேலை தேடிக்கொள்கிறேன். வேலை கிடைத்ததும் திருமணம் செய்கிறேன்' என்றேன். அதை ஜெய்ஸ்ரீ ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே எங்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.

    இதற்காக அவள் தற்கொலை செய்வாள் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும். ஆனால், ஜெயஸ்ரீக்கோ பின் தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் காயம் ஏற்படவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
    • விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெய்ப்பூர்:

    மத்தியபிரதேச மாநிலம் கில்சிபூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று விட்டு 10 பேர் கொண்ட குழுவினர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 2.40 மணியளவில் அந்த வேன் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    இதில் 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.

    விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
    • ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ்( 39). இவரது மனைவி அனிதா (39). இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று நடைபெறும் தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீடான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார்.
    • பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 31). இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனி மலேசியாவிற்கு வேலைக்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த அவர், அவ்வப்போது தனது மகளின் கையை பிளேடால் வெட்டியும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்து அவரிடம் பணம் கேட்டுள்ளார்.

    வீடியோவில் தன் குழந்தை படும் துயரத்தை கண்டு வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். மேலும், அவர் இதுகுறித்து மலேசியாவில் இருந்து அதிராம்பட்டினத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறினார். பின்னர், போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்து குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர், பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை சொந்த ஊருக்கு வரவைப்பதற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மனைவியை சொந்த ஊருக்கு வரவழைக்க தான் பெற்ற குழந்தையை துன்புறுத்தி வீடியோவாக எடுத்த இந்த கொடூர தந்தையின் செயல் அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 38). இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு அந்தோஸ் (9), மித்ரா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளது. அந்தோணிராஜ் கூலி வேலை செய்து வருகிறார்.

    அந்தோணிராஜின் குழந்தை அந்தோஸ் அருகில் உள்ள மார்க்கெட் கமிட்டி திடலில் சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்தோணிராஜ், ஏன் உங்களுக்குள் சண்டை போட்டுகொள்கிறீர்கள் என சமாதானம் செய்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த சந்தோஷ், நீ யாருடா என ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் அந்தோணிராஜின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதில், காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை, மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் அதன் டிரைவர் சாதுர்யமாக நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நின்ற நிலையில், 3-வதாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதற்கு பின்னால் வந்த 4-வது காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து முதலில் நின்ற கார் மீது, 2-வதாக நின்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் 4 காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த புதுவை மாநிலம் மணமேட்டை சேர்ந்த பூவரசன், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டை சேர்ந்த கதிரேசன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கோகுல்ராஜ், அஜய், சரத்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பீலகி படதின்னி கிராமத்தை சேர்ந்தவர் யங்கப்பா (50). இவரது மனைவி யல்லவ்வா (45). இவர்களுக்கு புந்தலிகா (22) என்ற மகனும், நாகவ்வா (20) என்ற மகளும் உள்ளனர். நாகவ்வாவுக்கு அசோக் (24) என்பவருடன் திருமணமாகி விட்டது. யங்கப்பாவிற்கு சொந்தமான வயல், ஹொன்யாலா கிராஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் வயலில் வேலை முடிந்ததும், வயலில் இருந்து யங்கப்பா உள்பட 5 பேரும் வெளியே வந்து சாலையோரம் நின்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.

    தகவல் அறிந்த பீலகி போலீசார் அங்கு சென்றனர். கவிழ்ந்த லாரி கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டது. இதில் லாரியின் அடியில் சிக்கிய 5 பேரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி ஓட்டுநர் காயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
    • விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 4 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    பள்ளி பஸ் உன்ஹானி கிராமத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே கிராம மக்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மரத்தில் மோதியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.

    விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கி உள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் சென்று இருந்தார்.

    அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று அதிகாலை தளவாய்புரத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு விருதுநகர் வந்தனர். அங்கு பங்குனி பொங்கலையொட்டி திருவிழா நடந்து வரும் பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கனகவேல் மகன் மணி ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் காலை 6.30 மணிக்கு கார் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அதே சமயம் வழியில் உள்ள எஸ்.பி.நத்தம் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி பின்னால் வைத்திருந்த பழக்கூடையுடன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டி வந்த மணி, இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது.

    அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்புக் கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. காலை நேரம் என்பதால் காரில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தை ஆகியோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்தில் கார் சிக்கியதும் அதில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். விபத்தை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்த கோர விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (வயது 55), காரில் பயணம் செய்த கனகவேல் (62), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி (58), கனகவேலின் மருமகள் நாகஜோதி (28), நாகஜோதியின் குழந்தை சிவா ஆத்மிகா (8) ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டும், காருக்குள் சிக்கி உடல் நசுங்கியும் பலியானார்கள்.

    மேலும் காரில் இருந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவாஸ்ரீ ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளிக்குடி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இன்று மதியம் மற்றொரு குழந்தையான சிவாஸ்ரீயும் பலியானது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆனது.

    விபத்தில் பலியான குழந்தைகள் சிவாஆத்மிகாவும், சிவாஸ்ரீயும் இரட்டை குழந்தைகள் ஆவர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய மணிகண்டன் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார்.

    • காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒடிசாவிற்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.30 மணி அளவில் லாரி திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள முக்கன்பாலம் என்ற இடத்தில் செல்லும்போது அங்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதை கவனிக்காமல் லாரியை ஓட்டிச்சென்றதால் தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இந்த தீப்பெட்டிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

    நேரம் செல்லச்செல்ல தீ கொளுந்து விட்டு எரிந்ததால் இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உதவியாளர் என இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

    காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×