என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Dead"

    • மாணவர்கள் இறந்த பகுதியில் கடந்த மாதம்தான் உள்ளூரை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.
    • குட்டி யானை ஒன்றும் தண்ணீரில் மூழ்கி இறந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து மூணாறு செல்லும் வழியில் வலியபாறக்குட்டி ஆறு உள்ளது.

    இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் சுற்றுலா வருவது வழக்கம். இதுபோல மாங்குளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 30 பேர் சுற்றுலா சென்றனர்.

    அவர்களில் சிலர் வலியகுட்டி ஆற்றில் குளித்தனர். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திடீரென ஆற்றில் மூழ்கி அலறினர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

    என்றாலும் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி மயங்கினர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 3 மாணவர்களும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவர்கள் இறந்த பகுதியில் கடந்த மாதம்தான் உள்ளூரை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுபோல குட்டி யானை ஒன்றும் இதே பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தது.

    இந்த பகுதியில் ஆற்றுக்குள் ஆழமான குழிகள் இருப்பதாகவும், இதில் தெரியாமல் இறங்கி விடுவோர் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் நடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

    இங்கு சுற்றுலா வருவோர் இந்த குழிகள் பற்றி தெரியாமல் அதில் இறங்கி உயிரை இழப்பதாகவும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
    • விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 4 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    பள்ளி பஸ் உன்ஹானி கிராமத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே கிராம மக்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மரத்தில் மோதியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.

    விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கி உள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
    • விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    வடக்கு மத்திய நைஜீரியாவில் நேற்று காலை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு மாடி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிளாட்டு மாநிலத்தின் புசா புஜி பகுதியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    இந்த கோர விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 132 மாணவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 22 மாணவர்கள் உயரிழந்துள்ளனர். 

    விபத்து குறித்து, நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் கூறுகையில்," விபத்து ஏற்பட்ட உடனே சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    உடனடி மருத்துவ கவனிப்பை உறுதி செய்வதற்காக, ஆவணங்கள் அல்லது கட்டணம் இல்லாமல் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக, பிளாக் மாநில தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.

    பள்ளியின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அருகே பள்ளி அமைந்துள்ளதே விபத்து ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற 12க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. அங்கு, கட்டிடங்கள் இடிந்து விழுவது சகஜமாக உள்ளது.

    கட்டிட பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தத் தவறியதாலும், மோசமான பராமரிப்பு காரணமாகவும் இதுபோன்ற பேரழிவுகமக ஏற்படுவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
    • விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் ராகுல் (வயது 20). இவர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

    இதேபோல் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் பூந்தமிழன் (20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரும், ராகுலும் நண்பர்கள் ஆவர். இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர். மாணவர் பூந்தமிழன் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால் அவரை அங்கு இறக்கி விடுவதற்காக மோட்டார்சைக்கிளை ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி ஓட்டினார்கள்.

    திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் நல்லாம்பாளையம் ரேசன் கடை அருகில் சாலையில் இருவரும் சென்றபோது மோட்டார்சைக்கிளும், திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரத்தை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மாணவர்கள் ராகுல், பூந்தமிழன் இருவரும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். மேலும் இது பற்றி போலீசார், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதை பார்க்கும்போது நெஞ்சை கரைய வைத்தது.

    மாணவர்கள் பலியானதை தொடர்ந்து அவர்கள் படித்த கல்லூரி சோகத்தில் மூழ்கியது.

    • மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
    • சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    அவனியாபுரம்:

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.

    மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

    ×