search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "imprisonment"

    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
    • ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும்.

    சென்னை:

    நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

    இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்
    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்

    குஜராத் மாநில கேடா (Kheda) மாவட்டத்தில் மடர் தாலுக்காவில் உள்ளது உந்தேலா கிராமம்.

    உந்தேலாவில் கடந்த 2022 அக்டோபர் அன்று குஜராத்தின் பிரபலமான நவராத்திரி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொருட்கள் சேதம், கல்லெறிதல் உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது.

    உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர்.

    மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் 6 பேரை தேடி கைது செய்தனர். அவர்களை மீண்டும் மோதல் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்து அங்குள்ளவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு மின்சார கம்பத்தில் கட்டி வைத்து ஒரு கம்பால் அடித்தனர்.

    காவலர்கள் அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    பாதிக்கப்பட்ட அந்த 6 பேரும் தங்களை அடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் அளிக்க முன் வந்த இழப்பீட்டையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

    இச்செயலுக்காக காவல்துறையினர் பாதிப்புக்குள்ளான 6 பேரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஃபேயா மற்றும் கீதா கோபி தமது தீர்ப்பை அறிவித்தனர்.

    அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    நடந்தது ஒரு மனிதாபிமானமற்ற செயல். காவல் ஆய்வாளர் பர்மர், துணை ஆய்வாளர் குமாவத், தலைமை கான்ஸ்டபிள் லக்ஷ்மண்சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராஜுபாய் தாபி ஆகியோர் குற்றவாளிகளே. அந்த 4 காவல்துறையினரும் 14 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த தவறினால் மேலும் 3 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    தீர்ப்பை அளித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது.

    காவல்துறையினரின் அத்துமீறலுக்கு இந்த தண்டனை போதுமானதல்ல என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சூர்யா ( வயது 21). இவர் இன்ஸ்டா கிராம் மூலம் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். இதில் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அந்த மாணவியை சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருச்சிக்கு வரும்படி அழைத்துள்ளார். கடந்த 13.9.2021ம் ஆண்டு மாணவி வீட்டிற்கு தெரியாமல் திருச்சி சென்றுள்ளார். திருச்சி பஸ் நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்த சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார் . மாணவியின் பெற்றோர் மூலனூர் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள சூர்யாவிற்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
    • இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அந்தப் பகுதியில் சேகோ பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்.

    வயதான பெற்றோர்

    கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கனிமொழி அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன் நாமகிரிப்பேட்டை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    கள்ளக்காதலன்

    இதில் கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர்.

    தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • கோவில் நகை- உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோவில்களில் உண்டியல் உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், டி.எஸ்.பி.ரூபன்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் வட்டத்தூர், கொண்டசமுத்திரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடியது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சேத்தியா த்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி.ரூபன்குமாரின் தனிப்படை போலீசார் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாபு, கோபி, ஏட்டுகள் மணிகண்டன், சங்கர், ரஜினி, விஜயகுமார், புகழ் ஆகிய குழுவினர் அடங்கிய போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்மணி ராஜா (37) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வட்டத்தூர், கொண்ட சமுத்திரம், பாளையங்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவில் நகைகள், உண்டியலை உடைத்து பணம் திருடியதாக அவர் ஒப்புகொண்டார். அவரிடமிருந்து ரூ.8லட்சம் மதிப்புள்ள 15½ பவுன் கோவில் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் கண்மணி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    • ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    விபசார புகார்

    ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ஏற்காடு பக்கோடா பாயிண்ட் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்ததில் மூன்று இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டனர்.

    2 பேர் கைது

    மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் டி.எஸ்.பி. அமல அட்மின் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேலும் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு டி.எஸ்பி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    இந்த ரிசார்ட்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஏற்காட்டை சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் அந்த ரிசார்ட் மேலாளர் ரகுநாத் (20) ஆகியோைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேரையும் சேலம் கோர்ட் வளாக த்தில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    எச்சரிக்கை

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டி.எஸ்.பி. அமல அட்மின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

    • இதே காரணத்திற்காக கடந்த வருடம் மஹ்சா அமினி, அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்
    • அதிகாரிகள் தாக்கியதில் அர்மிடாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்

    மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 1 வருடத்திற்கு முன் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் இள வயது பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக  அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்றது. உலகளவில் பெண் உரிமை ஆர்வலர்கள் ஈரான் அரசின் பழமைவாத கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் (subway) தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது உடையை கண்டு, அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க பெண் அதிகாரிகள் அர்மிடா ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டி அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்களால் அர்மிடா விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அச்சிறுமி மயக்கமடைந்து 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி டெஹ்ரானின் ஃபாஹர் (Fajr) மருத்துவமனையில் கடும் பாதுகாப்புக்கிடையே சிகிச்சை பெற்று வருகிறாள்.

    அச்சிறுமி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அச்சிறுமியின் நண்பர்கள் இதனை மறுத்தனர். மத கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அச்சிறுமி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால் மயங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டை போல் போராட்டம் வெடிப்பதை தடுக்க ஈரான் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

    • வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி சந்தைப் பேட்டை அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு சம்பவத்தன்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.

    செல்போன் பறிப்பு

    அதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் சம்பந்தப்பட்ட நபர் சொன்ன இடத்திற்கு சென்ற போது அங்கு இருளில் மறைந்திருந்த மேலும் 2 பேர் ஒன்று சேர்ந்து வாலிபரை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    படுகாயம் அடைந்த வாலிபர் அவ்வழியாக வந்த வாகனத்தில் உதவி கேட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணை யில் வாலிபரை தாக்கி, அவரிடமிருந்து நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (22), திருச்சி, காந்தி பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (21) மேலும் 17வயது சிறுவன் ஆகியோர் என்பதும் அவர்களில் 17 வயது சிறுவன் தான் வாலிபரை செல்போனில் பேசி வரவழைத்து நகை, செல்போனை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் லோன் விஷயமாக கேட்டுள்ளனர்.
    • அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.

    உடுமலை:

    உடுமலை தாலுகா மசக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது54).விவசாயம் செய்து வருகிறார்.இவர் தனது குடும்ப நண்பரான உடுமலையில் வசித்து வரும் சரஸ்வதி என்பவரிடம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி அசல் பத்திரத்தை பெற்றுச் சென்று உள்ளார். அதைத் தொடர்ந்து சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் லோன் விஷயமாக கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் வங்கியில் கொடுத்தாகிவிட்டது .விரைவில் லோன் கிடைத்துவிடும் என்று தெரிவித்து உள்ளார். அதன் பின்பு எந்த தகவலும் இல்லை. இந்த சூழலில் திடீரென சரஸ்வதியின் பெயருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் பெரியசாமி வாங்கிய கடனுக்கு சரஸ்வதி ஜாமின் கையெழுத்து இட்டுள்ளதாகவும் நிலுவை கடனை செலுத்துமாறும் தெரிவித்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, ராணி ஆகியோர் பெரியசாமியிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் நான் வாங்கிய கடனை கட்டி உங்கள் பத்திரத்தை மீட்டு கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார். ஆனால் காலம் கடந்தும் அவர் சொன்னபடி பத்திரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து ராணியும் சரஸ்வதியும் பெரியசாமியிடம் உடனடியாக பத்திரத்தை மீட்டுத் தருமாறு கேட்டு உள்ளனர். அதற்கு அவர் ராணியையும் சரஸ்வதியையும் மிரட்டி அனுப்பி விட்டதாக தெரிகிறது. இது குறித்து ராணி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அந்த வழக்கு உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். விசாரணை முடிந்த நிலையில் மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி தீர்ப்பளித்தார். கையெழுத்தை மோசடி செய்து கடன் பெற்ற குற்றத்திற்காக பெரியசாமிக்கு 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும்,ரூ 5 ஆயிரம் அபராதமும்,கட்ட தவறினால் 6 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார்.
    • மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே கரியக்கோயில் அடுத்த வேலம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செவத்தான். இவருடைய மகன் மணி (28).

    அரசு வேலை

    பட்டதாரியான இவரை ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுள்ளார். மேலும் இதற்காக ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ஓராண்டு கடந்தும் வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த மணி தனது பணத்தை திருப்பிக்

    கொடுக்குமாறு சதீஸ்குமாரி டம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே மணிக்கும், அவருடைய பெரியப்பா மகனான ராமச்சந்திரன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருப்பதை அறி0ந்த சதீஸ்குமார் இவ ருடன் கூட்டு சேர்ந்து மணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நண்பரான சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் சதீஸ்குமார் வரவழைத்துள்ளார்.

    அரிவாள் வெட்டு

    திட்டமிட்டபடி நேற்று முன்தினம் சதீஸ்குமார் தனது காரில் வேலம்பட்டு கிராமத்திலுள்ள மணியின் வீட்டிற்கு சென்னை வாலி

    பரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணியை சென்னை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.

    மணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாயார் கரியாள் என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காரை விரட்டி பிடித்தனர்

    மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் சதீஸ்குமார் சென்ற காரை விரட்டிப் பிடித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் தப்பியோடி தலைமறைவானார். பிடிபட்ட சதீஸ்குமாரை கரியக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    இவரிடம் விசாரணை நடத்திய கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், சதீஸ்குமாரையும் அவருடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக மணியின் சகோதரர் ராமச்சந்திரன் என்பவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சென்னை வாலிபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

    • குடியிருப்பின் மையப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்
    • சகோதரியின் மொபைலில் அச்சிறுமி உடனடியாக படமெடுத்தார்

    அமெரிக்காவின் தென்கிழக்கின் ஓரத்தில் உள்ளது புளோரிடா மாநிலம்.

    இம்மாநிலத்தில் உள்ள ஆர்லேண்டோ பகுதியில் சமர்செட் அபார்ட்மென்ட்ஸ் எனும் பெரும் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மையப்பகுதியில் திறந்தவெளியில் உள்ள பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.

    இங்குள்ள ஒரு வீட்டில் தனது பாட்டியின் பராமரிப்புக்காக கார்லோஸ் ரிவெரா லூசியானோ எனும் 46 வயது ஆண் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கண்ணாடி கதவின் வழியாக ஒரு 5 வயது சிறுமி தென்பட்டிருக்கிறாள். அவளை பார்த்து லூசியானோ, காற்றில் முத்தங்களை பறக்க விட்டார். பிறகு தன் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் செய்கைகளிலும் ஈடுபட்டார்.

    இச்செயலை அச்சிறுமி தனது சகோதரியின் மொபைல் போனில் கார்லோசிற்கு தெரியாமல் புத்திசாலித்தனமாக உடனடியாக வீடியோ படம் பிடித்தார். இந்த வீடியோவை கண்ட அச்சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்து, உடனே அமெரிக்காவில் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், அந்த வீடியோவை கண்டு அதில் உள்ள கார்லோசின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், அவர்கள் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து பெற்றோர்களிடமும் விழிப்புணர்வுக்காக இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    இக்குற்றச்சாட்டை மறுத்த கார்லோஸ் தன்னிடமும் இது குறித்த வீடியோ உள்ளதாக கூறினார். ஆனால், அவரால் காவலர்களிடம் எந்த வீடியோவும் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

    அந்த 5-வயது சிறுமியின் புத்திசாலித்தனத்தை அங்குள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ×