search icon
என் மலர்tooltip icon

    ஈரான்

    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
    • வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதி உள்பட 12 பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனாலும் அதை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தடுத்தது.

    ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து தாக்குதலை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது.

    மத்திய ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

    ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும் ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்தின. இஸ்ரேல் தாக்குதலையடுத்து ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு உள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    முக்கிய நகரங்களான இஸ்பஹான், ஷிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தாக்கு தலையடுத்து பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

    ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்பஹானில் ஒரு பெரிய ராணுவ விமான தளம், யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப்பகுதியான நடான்ஸ் நகரம் உள்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் உள்ளன.

    இதற்கிடையே இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்பஹானில் மூன்று டிரோன்கள் வாகனத்தில் காணப்பட்டதாகவும், அவற்றை நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரித்திருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

    • லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர்.
    • 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த தளபதிகள் அந்தஸ்திலான 3 முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்தது. ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இவற்றில், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது.

    தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காசாவை இஸ்ரேல் தாக்கியது. பணய கைதிகளாக உள்ள தன்னுடைய நாட்டின் குடிமக்களை மீட்கும் பணியை தொடர்ந்தது. இந்நிலையில், லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர். இதில், மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படைகளின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவுகளின் தளபதி முகமது உசைன் ஷாஹவுரி கொல்லப்பட்டார்.

    அவர், லெபனானின் மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் இருந்து கொண்டு இஸ்ரேல் நிலப்பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதேபோன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவை சேர்ந்த மஹ்மூத் இப்ராகிம் பத்லல்லா என்பவரும் கொல்லப்பட்டார்.

    லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில், லெபனானின் எயின் ஈபெல் பகுதியில் கடலோர பிரிவை சேர்ந்த தளபதியான இஸ்மாயில் யூசெப் பாஜ் என்பவர் கொல்லப்பட்டார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

    • இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் என ஈரான் சிறைப்பிடித்துள்ளது.
    • சிறைப்பிடித்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர்.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் இரண்டு முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் பயங்கர கோபம் அடைந்தது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. தெரிவித்ததுபோல் நேற்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    முன்னதாக ஓர்முஸ் ஜலசந்தியில் போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவத்தின் கப்பற்படை வீரர்கள் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பினோ, பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள்.

    இவர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அமிர்-அப்டோலாஹியன் உடன் டெலிபோன் மூலம் பேசினார்.

    அப்போது சிறைப்பிடித்து வைத்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    "சிறைப்பிடித்துள்ள கப்பல் தொடர்பான விவரங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு விரைவில் அனுமதிப்போம்" என ஈரான் மந்திரி தெரிவித்தார்.

    அப்போது இந்தியர்கள் குறித்து ஜெய்சங்கர் தனது கவலையை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஈரானிடம் உதவி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    • வான்வழித் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம்.

    சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வான்வழித் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, "இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இந்த தருணத்தில் ஈரானுக்கான என்னுடைய செய்தி, போர் வேண்டாம் என்பதுதான்.

    இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்றார்.

    ஏற்கனவே இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையே போரால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் இருந்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல்- ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

    இதையடுத்து இஸ்ரேல், ஈரானுக்கு மறுஉத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதேபோல் பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹஸ்புல்லா அங்கிருந்து வடக்கு இஸ்ரே லுக்குள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.

    • சிரியாவின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
    • இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரித்தது.

    டெஹ்ரான்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது. இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மெட்டா-வின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இயங்கி வருகின்றன
    • கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்

    உலகெங்கும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில், அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்கள் முன்னணியில் உள்ளன.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தங்கள் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடைய இவற்றை பயன்படுத்துகின்றனர்.

    மெட்டா எனும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்த 2 தளங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.

    ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் "விபிஎன்" (VPN) மூலம் பயன்படுத்துகின்றனர்.

    இந்நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் "அயதுல்லா அலி கமேனி" (Ayatollah Ali Khamenei) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை, கடந்த மாதம், மெட்டா நீக்கியது.


    இதற்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    தற்போது இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் (Hossein Amir-Abdollahian) தெரிவித்ததாவது:

    கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

    கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி.

    கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரசாரங்கள் செய்கின்றன.

    ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.

    தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாஷா அமினி ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் தாக்கியதால் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் 2022-ல் ஈரானில் போராட்டம் வெடித்தது.

    இசை மற்றும் பாடலில் சிறந்த விளங்குபவர்களுக்கு உலகின் உயரிய விருதான கிராமிய விருது வழங்கி கவுரவிக்கப்படும். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்த விழாவில் ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் கிராமிய விருது வென்றார். அவருக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் மாஷா அமினியின் உயிரழப்பால் 2022-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக அவரது பாடல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் நீதிமன்றம் அவருக்கு 3.8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    ஈரான் அரசின் நடைமுறைக்கு எதிரான பிரசாரம் மற்றும் மக்கள் போராட்டத்தை ஊக்கப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் முறையான வருத்தம் தெரிவிக்காததால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இரண்டு ஆண்டுகள் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் குற்றம் தொடர்பாக பாடல் உருவாக்க வேண்டும் எனவும், அவர்களின் குற்றம் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    ஈரான் அரசு ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டத்தை கொண்டு வந்தது. மாஷா அமினி என்ற பெண்மணி ஹிஜாப் முறையாக அணியவில்லை என பொலீசார் கைது செய்தனர். போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில போராட்டம் வெடித்தது. இதற்கு ஆதரவாக பாடல் உருவாக்கியதால் பாடகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹிஜாப் முறைப்படி அணியாத பெண்களை கைது செய்வதுதான் அவர்களுடைய பணியாகும்.

    • ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடக்கும் சம்பவம் அரிதானது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர் ஒருவர் மூன்று பேரை சுட்டுக்கொலை செய்தார்.

    ஈரானில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதில் அவனுடைய தந்தை உள்ளிட்ட 12 உறவினர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் உள்ள மத்திய மாகாணம் கெர்மன். இங்குள்ள பர்யாப் கவுன்ட்டியில் உள்ள புறநகரின் கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனை காரணமாக, நடந்த சண்டையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உறவினர்கள் மற்றும் தந்தை ஆகியோரை வெறித்தனமாக சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளனர்.

    ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்வது மிகவும் அரிதானது. அங்கே வேட்டையாடுவதற்கு மட்டும் மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.

    இரண்டு வருடத்திற்கு முன்னதாக அரசு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று முறை கொலை செய்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

    • இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என ஈரான் அறிவித்தது.
    • விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

    சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எக்காரணம் கொண்டும் இதை நீட்டிக்க முடியாது.

    வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.

    சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.

    அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெறவேண்டும்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது.
    • ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழப்பு.

    ஈரானின் தென்கிழக்கு பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இதே பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    "இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சரவன் நகரை அடுத்த சிர்கான் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து நடைபெற்றது," என ஈரானை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை பயங்கரவாத அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே பயங்கர மோதல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
    • ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.

    தெஹ்ரான்:

    ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.

    தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் ராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இரு நாடுகளுக்கு இடையே, நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    • 2016ல் ஈரான் நீதிமன்றம், நர்கெசுக்கு 16 வருட சிறை தண்டனை வழங்கியது
    • தண்டனை முடிந்தாலும், மொபைல் போன் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று, ஈரான்.

    ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், 51 வயதாகும் நர்கெஸ் மொகமதி (Narges Mohammadi).

    பல வருடங்களாக ஈரான் நாட்டில், பெண் உரிமைகளுக்காக போராடி வந்த பவுதிக பட்டதாரியான நர்கெஸ், ஆடை கட்டுப்பாடு, மரண தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    2016 மே மாதம், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், தேச விரோத குற்றத்திற்காக 16 வருட சிறை தண்டனை வழங்கியது.

    இடையே 2020ல் சில மாதங்கள் விடுதலை செய்து அனுப்பிய அந்நாட்டு அரசாங்கம், 2021ல் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், சிறையிலிருந்த நர்கெசுக்கு பெண்களுக்கான அடக்குமுறையை எதிர்த்து போராடி வருவதற்கும், மனித உரிமை மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்து பிரசாரம் செய்து வருவதற்கும் புகழ் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    நார்வே தலைநகர் ஓஸ்லோ நகரில், நர்கெசின் மகன் மற்றும் மகள் தாயாரின் சார்பில் பரிசினை பெற்றனர்.

    ஆனால், ஈரான் வெளியுறவு துறை, இந்த முடிவை கண்டனம் செய்திருந்தது.

    இந்நிலையில், சுமார் 12 வருடங்களை சிறையிலேயே கழித்த நர்கெஸ் மொகமதிக்கு, ஈரான், மேலும் 15 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சிறை தண்டனை காலம் முடிந்தாலும், அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வெளியே 2 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த தண்டனை காலம் முடிவடைந்ததும், மேலும் 2 வருடங்களுக்கு நர்கெஸ் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதும், மொபைல் போன் வைத்திருப்பதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

    விசாரணையின் போது அவர் நேரில் வரவழைக்கப்படாமல், அவர் இல்லாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 13 முறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டவர், நர்கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கும் மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ×