search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fasting"

    • கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது.
    • தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வை குறைக்க கோரி சென்னையில் அக்டோபா் 16 -ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளாது.

    இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு மற்றும் நாடா இல்லா தறி நெசவாளா் சங்கத்தின் (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் அண்டை மாநிலங்களுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சோலாா் உள்பட மின் கட்டணங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    ஆனால், இங்கு எங்களது சொந்த கட்டடங்களின் மேல் சோலாா் அமைத்து பயன்படுத்தவும் கட்டணம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது. தற்போது மின் கட்டண உயா்வால் தொழில்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு கோரிக்கையில் கொமதேக., பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கேட்ட கேள்விக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தொழில் துறைக்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.ஏற்கெனவே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதையே மீண்டும் சட்டப் பேரவையில் அமைச்சா் அறிவித்துள்ளாா்.

    எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தொழில் துறையினரைப் பாதுகாக்க வேண்டும். அதுவரை தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் போராட்டங்கள் தொடரும்.

    இந்நிலையில் அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அக்டோபா் 16 -ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும். இதில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    • புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி.
    • திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

    புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காரணம் இல்லாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள். மனக்கவலைகளுக்கு ஆளாவார்கள், அலுவலகங்களில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்குக் காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும்.

    என்னதான் நாம் இந்த ஜென்மத்தில் இறைவனை மனதார தியானித்து நல்லனவற்றையே பேசி, செய்து வந்தாலும் நமக்கு காரணம் இல்லாமல் ஏன் குழப்பங்களும் கஷ்டங்களும் வருகின்றன? அதற்கு காரணம் முன்வினைப்பயன். அதை சீராக்குவதுதான் அஜா ஏகாதசி விரதம்.

    இதற்கு ஆதாரமாக புராணக் கதை இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த கதைதான்.

    அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இழந்து, அரசப் பதவியை இழந்து காட்டில் கஷ்டப்பட்டான். அது மட்டுமா? காசுக்காக மனைவியை அடிமையாக விற்றான். கடுகாட்டில் பிணங்களை எரித்துப் பிழைத்தான்.

    அந்த சூழ்நிலையில் கவுதம முனிவர் அவனைச் சந்தித்தார். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை பரீட்சிக்கிறார் என்றாலும் அவனது இந்த துன்பங்களுக்குக் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே. அவைதான் விசுவாமித்திர முனிவருக்கு இத்தகைய எண்ணங்களை உருவாக்கின என்று ஞான திருஷ்டியில் அறிந்தார்.

    அரிச்சந்திரனை அழைத்து புரட்டாசி மாதத்தில் வரும் அஜா ஏகாதசி விரதத்தைப் பற்றி விவரித்தார். `மன்னனே நீ இந்த விரதத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நன்மை கிடைக்கும்' என்றார்.

    அரிச்சந்திரனும் 9 ஆண்டுகள் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை அனுசரித்தான். அதன் பலனாக விசுவாமித்திரர் வைத்த பரீட்சையில் வென்றான். அது மட்டுமா? அவனுக்கு மும்மூர்த்திகளின் தரிசனமும் கிடைத்தது. மீண்டும் நாட்டை பெற்றதோடு உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்தான்.

    நமது முன்ஜென்ம பாவங்களை நீக்கி இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக்கூடியது அஜா ஏகாதசி விரதம். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதையும் அனுசரிக்க வேண்டும். திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

    குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் மூடி அமர்ந்து பெருமாளை தியானித்து என் முன் ஜென்ம தகாத வினைப் பலன்களை அழிப்பாய் ஐயனே என்று வேண்ட வேண்டும். இரவில் விஷ்ணு புராணத்தை படிக்கலாம். நாம ஜபம் செய்யலாம். மறுநாள் காலை நீராடி பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தி பின்னர் உணவு உண்ண வேண்டும். அப்படி செய்தால் முன்ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.

    • கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

     பல்லடம்:

    கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணம் ரூ.380ஆக இருந்ததை 550 உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும், பீக் ஹவர் நேர கட்டணம் மற்றும் சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம்பேட்டை பகுதியில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 25-ந்தேதி ஒருநாள் மட்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த கட்ட போராட்டமாக நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளிப்பது எனவும், தொடர்ந்து 16-ந்தேதி அன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் எனவும் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் அஸ்வத் முருகேசன் தெரிவித்தார்.

    • சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
    • போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

     அவிநாசி

    அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

    இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.

    இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • ஆந்திரா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி ராஜமுந்திரியில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினரால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதியில் சுற்றுச்சாலை சீரமைப்பு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாக சிஐடி போலீசார் சேர்த்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் லோகேஷ் மனு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவை விசாரித்த ஆந்திர கோர்ட்டு லோகேஷை கைது செய்யக்கூடாது வேண்டுமானால் 41 ஏ பிரிவின் கீழ் அவருக்கு நோட்டீஸ் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையடுத்து டெல்லி அசோகா சாலையில் உள்ள தெலுங்கு தேசம் எம்.பி கல்லா ஜெயதேவி வீட்டில் இருந்த லோகேஷிடம் சிஐடி அதிகாரிகள் நேற்று மாலை நோட்டீஸ் வழங்கினார்.

    அதில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணிக்கு சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

    • ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும்.
    • ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

    ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது இரண்டையும் மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும். இதில் உங்களுக்கு பிடித்த எல்லா வகை உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய அன்றாட கலோரி தேவைக்குள் இருந்தால் போதுமானது. அதேசமயம் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

    இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்கள் செய்யும் மிகமுக்கியமான தவறு என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு 8-12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தானே என்று ஏதோவொரு வேளையில் சாப்பிடுவது, 12 மணி நேரம் விரதம் இருப்பது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தைப் பின்பற்றுவார்கள். அது மிகவும் தவறு.

    இன்டர்மிட்டண்ட் டயட்டில் விரதத்தை பின்பற்ற உணவு முறை இருக்கிறது. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு டயட் விண்டோவை பின்பற்றக் கூடாது. உதாரணத்துக்கு 16 மணிநேரத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால் 16 மணி நேர விரதமும் 8 மணி நேரம் உணவு நேரமாகவும் இருக்க வேண்டும். இதுதான் இன்டர்மிட்டண்ட் விரதத்தின் முதல் படி.

    இதற்குமுன் நீங்கள் எந்தவித டயட்டையும் பின்பற்றியதே இல்லை. புதிதாக முயற்சி செய்கிறீர்கள் என்றால் எடுத்தவுடனே இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழைவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதனால் எடுத்தவுடனே தீவிரமான டயட்டுக்குள் நுழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி செய்தால் சில நாட்களிலேயே அதில் இருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.

    புதிதாக டயட்டுக்குள் வர நினைப்பவர்கள் முதல் வாரத்தில் 12 -12 மணி நேர் என்று தொடங்கி அப்படியே படிப்படியாக அதை 16-௮ விண்டோவுக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு கடினமாக இருக்காது.

    எந்த டயட்டை பின்பற்றினாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக இன்டர்மிட்டண்ட் டயட்டில் நீண்ட நேரம் விரதம் இருக்க வேண்டியிருக்கும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதனால் வழக்கமாக குடிக்கும் தண்ணீரின் அளவைக் காட்டிலும் இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழையும்போது அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இன்டர்மிட்டண்ட் டயட்டை பொருத்தவரையில் இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்கிற நேரக்கட்டுப்பாடு தான் இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பிடித்த உணவுகளை சாப்பிடலாம். அதனாலேயே நிறைய பேர் நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் கலோரிகள் அதிகமாகுமே தவிர பலன் கிடையாது.

    அதனால் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் எவ்வளவு ஊட்டச்சத்து அடர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு நல்லது. அதனால் காய்கறிகள், பழங்கள், புரதங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கும்படியான உணவுகளைத் தேர்வு செய்வது நல்லது.

    விரதத்தை தொடங்கியதும் அதற்கு உங்களுடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை டயட்டில் உங்களுக்கு ஏதேனும் அசவுகரியங்கள் ஏற்பட்டால், குறிப்பாக தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வு, அதிகப்படியான பசி ஆகியவை இருந்தால் உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதற்கு ஏற்றபடி உங்களுடைய டயட் முறையில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

    இன்டர்மிட்டண்ட் டயட்டை பொருத்தவரையில் உங்களுடைய விரத நேரமும் சரி, உணவு எடுக்கும் நேரங்களும் ஒரே சீராக இருப்பது நல்லது. எட்டு மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதற்காக ஒவ்வொரு நாள் காலை உணவும் ஒவ்வொரு வேளையில் சாப்பிடுவது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். அப்படி செய்யும்போது உடல் அதிகமாக குழம்பிவிடும்.

    8 மணி நேரத்துக்குள் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் திட்டமிட்டு பின்பற்றுவது இன்டர்மிட்டண்ட் டயட்டில் மிக முக்கியம். இன்டர்மிட்டண்ட் விரதத்தை பின்பற்றினால் போதும் உடலில் எல்லா வித நல்ல மாற்றங்களும் நடந்து விடும் என்று மற்ற எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் இருப்பது தவறு.

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிக அவசியம். தினசரி உடற்பயிற்சி, ஜங்க் உணவுகளை தவிர்த்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மிக முக்கியம்.

    • ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்டுள்ளபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

    கௌரவத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    செயலாளார் வெங்கடேசன், பொருளாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயலாளர் கோத ண்டபாணி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    உண்ணாவிரதத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் நடந்தன.

    இதில் நிர்வாகி புகழேந்தி, பொறுப்பாளர்கள் சுதா, சத்தியா, பிரபாவதி, மஞ்சுளா, கலையரசி, தனச்செல்வி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை , அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

    • போராட்டக்காரர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை
    • ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தேயிலை விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தற்போது 8-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று நடந்த போ ராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மேல்பிக்கட்டி ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், கீழ் பிக்கட்டி ஊர் தலைவர் அண்ணாதுரை, கட்டபெட்டு ஊர் தலைவர் மடியாகவுடர், மல்லிகொரெ ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், ஒன்னோரெ ஊர் தலைவர் கிருஷ்ணா கவுடர், மஞ்சிதா ஊர் தலைவர் சண்முகா கவுடர், பேரட்டி ஊர் தலைவர் காந்தி கவுடர் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் மேல்பிக்கட்டி, கீழ்பிக்கட்டி, கட்டபெட்டு, மல்லிகொரெ, ஒன்னோரெ, மஞ்சிதா, பேரட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைத்து கிராம மக்களும் படுகர் இன மக்களின் குல தெய்வ மான ஹெத்தையம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்கள் நட்டக்கல் போராட்ட பந்தலுக்கு வந்தனர்.

    அப்போது குன்னூர் போலீஸ் டி.எஸ்.பி குமார் போராட்ட களத்துக்கு வந்து நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினார் இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் தேயிலை விவசாயிகள், இலை பறிக்க செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    மதுரை

    திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப் பட்டது. தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடை பெற்று, டெண்டர் கோரப் பட்டது. தற்போது பழைய நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கூட, மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது. அதில் கப்பலூர் டோல்கேட்டையும் அகற்ற தமிழக அரசு வலியு றுத்த வேண்டும்.

    திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பாராமுகம் தான் காட்டப் பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும், நிதியும் வரவில்லை.

    திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் பணி, புதிய பஸ்நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதியை பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பு
    • தமிழக முதல்அமைச்சர் நேரடியாக தலையிடும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு

    கோவை,

    தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன்ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலைகட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதனை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமை ப்பு ஒன்எறை உருவாக்கி உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் நடந்தது.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்ட த்தில்நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே தமிழக முதல் அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். அது வரை தொடர்போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

    • தேயிலை இலைகளை காதில் தொங்க விட்டு நூதன போராட்டம்
    • ஊட்டியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரதம் நடக்கிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கோத்தகிரியில் நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு தற்போது 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று 5-ம்நாள் போராட்டம் நடந்தது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெத்தளா ஊர்தலைவர் கிருஷ்ணன், ஆரூர் தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நரிகிரி சந்திரன் ஆகிபோர் தொடங்கி வைத்தனர்.

    5-வது நாள் உண்ணா விரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேயிலை தழைகளை காதில் மாட்டிக் கொண்டும், கைகளை ஏந்தியும் போராட்ட பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

    ஊட்டி பகுதியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நரிகிரி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×