search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED raid"

    • ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதி பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள்.
    • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது.

    INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு CBI நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டல் விடுக்கிறார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை 6 சம்மன்களை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன .டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

    • செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

    தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
    • செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
    • செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், 'மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும்' என வாதாடினார்.

    அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ், 'வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதாடினார்.

    இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

    செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது நீதிமன்ற காவலை 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
    • இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது

    சென்னை:

    பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபராக உள்ளவர் பீட்டர். இவர் சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார்.

    முறைகேடாக பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் பீட்டர் வீட்டில் நேற்று காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடந்தது. பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    தொழில் அதிபர் பீட்டர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை பற்றிய விவரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.

    இந்த சோதனையின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் மந்திரி ஜோதிபிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்தச் சென்றது. அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பாக சென்றது.

    தகவலறிந்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதிகாரிகள் சோதனை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தை தாக்கினர். இதில் அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் சோதனை நடத்த முடியாமல் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரசின் உள்ளூர் தலைவர்களால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்வது தேசத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
    • அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.

    இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர்.
    • தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம், உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனையைத் தொடர்ந்து 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்த சம்மனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில் திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு 2 கார்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் சென்று ரத்தினம் உள்ளாரா? என கேட்டனர். அவர் நேற்று இரவு வெளியூர் சென்று விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோதனையை முன்னிட்டு அவரது வீட்டுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டனர். ஏற்கனவே அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நடந்த சோதனை 3 நாட்கள் வரை நீடித்த நிலையில் தற்போது எத்தனை நாட்கள் சோதனை தொடரும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    • இந்த மாத இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
    • கடந்த செப்டம்பர் மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஒப்பந்தப் பணியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்நிலையில், ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.

    இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் குவாரியை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் இவர் எடுத்துள்ள குவாரி மற்றும் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையிட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக பெருநாவலூர் குவாரியில் இன்று அமலாக்கத்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதித்த 4 ஆயிரத்து 400 கனமீட்டர் அளவு வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. யில் இருந்து தொழில்நுட்ப குழுவினரையும் அமலாக்கதுறையினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் நவீன கருவிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதை கணக்கிட்டனர்.

    இதேபோல அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிலுப்பனூர் மணல் குவாரி, சேந்தமங்கலம் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளிலும் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்லப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர்.
    • மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்ற அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை சோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியதால், டிரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் ரத்து செய்து திரும்பினர்.

    இந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். இவற்றை டிரோன் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று சோதனை நடத்த முடியாமல் போன மருவூர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் குவாரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 மணல் குவாரிகளிலும் சோதனை நடந்து வருகிறது. இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    ×