search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand quarry"

    • ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.
    • நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    தமிழகத்தில் மணல் விற்பனையை அரசின் நீர்வளத்துறை நேரடியாக செய்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மணல் விற்பனையை செய்கிறது.

    ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000-க்கும் மணலை யார்டுக்கும் கொண்டு வந்து ஒப்பந்ததாரர் வழங்க ரூ.1680 என மொத்தம் ரூ.2680 வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு மணல் விற்பனையில் தவறுகள் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12-ந் தேதி சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதனால் கடந்த ஒரு மாதமாக மணல் விற்பனை முழுமையாக நடைபெறவில்லை. ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை. யார்டுகளில் உள்ள மணல் மட்டும் மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.

    இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதுவரையில் ஆற்று மணல் எடுக்கப்பட்ட அளவு விவரம், விற்பனை செய்த அளவு, அதற்கான பில் போன்றவற்றை அதிகாரிகள் அவரிடம் கேட்டனர். அம லாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர்.

    • புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்,

    பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனை சந்தித்து இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமாபதி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவிந்தநாட்டு ஊராட்சி புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிக ளுக்கு அனுமதி வழங்கப்ப ட்டு, ஆன்லைன் மூலம் மணல்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது கோவிந்த நாட்டுசேரி ஊராட்சியில் அமைந்தி ருக்கும் புத்தூர் அரசு மணல் குவாரியில், மாட்டு வண்டி வைத்திரு ப்பவர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள் கூறும் போது, இங்கு இருக்கும் ஏழை எளிய நலிவுற்ற மாட்டு வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், கும்பகோணம் மற்றும் திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன் கருதி புத்தூரில் அமைந்துள்ள மணல் குவாரியில் மாற்றி வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.

    இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் குவாரியை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் இவர் எடுத்துள்ள குவாரி மற்றும் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையிட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக பெருநாவலூர் குவாரியில் இன்று அமலாக்கத்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதித்த 4 ஆயிரத்து 400 கனமீட்டர் அளவு வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. யில் இருந்து தொழில்நுட்ப குழுவினரையும் அமலாக்கதுறையினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் நவீன கருவிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதை கணக்கிட்டனர்.

    இதேபோல அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிலுப்பனூர் மணல் குவாரி, சேந்தமங்கலம் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளிலும் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்லப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • புதிய மணல் குவாரிகளால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்
    • தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகளை பொதுப்பணித்துறையே நடத்தும் வகையில் அனுமதி கொடுத்துள்ளோம். எந்தெந்த இடங்களில் எவ்வளவு மணல் எடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுத்துள்ளோம். 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூரில் மழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் மூலம் கடலில் காவிரி நீர் கலக்கும் வழித்தடத்தில் அதிக அளவு மணல் திட்டுகள் இருந்ததால் முகத்துவாரங்களில் மழைநீர் கலக்கும் இடங்களில் சிக்கல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் தண்ணீர் தடையின்றி கடலுக்கு செல்லும்.அதே வேளையில் மணல் அள்ளும் பணிகளை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.பெங்களூர் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் மாசு, அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பெங்களூரில் 36 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டுமென உத்தரவு விட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இது சம்பந்தமாக கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழுமையாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடுக்கப்படும் பட்சத்தில் தென்பெண்ணை ஆறு முற்றிலும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டரிடம், பா.ம.க. வினர் கோரிக்கை மனு
    • பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க.செயலாளர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வட தமிழ்நாட்டு மக்களின் வேளாண்மைக்கும் குடிநீர் உள்பட அன்றாட பயன்பாட்டுக்கும் உயிர் ஆதாரமாக பாலாறு இருந்து வருகிறது.

    கோடிக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நிலங்களும்,பொது மக்களும் பாலாற்றின் நிலத்தடி நீரை நம்பிய வாழ்கின்றனர்.

    இந்நிலையில் மக்களிடம் கருத்து கேட்காமல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.

    அரசு மணல் குவாரி சம்பந்தப்பட்ட அரசு போர்டுகளை எசையனூர் கிராமத்தில் பாலாற்றங்கரையில் வைத்துள்ளனர்.

    பாலாற்றில் மீண்டும் மணல் குவாரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது.

    எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பது எதிர்த்து பா.ம.க சார்பில் கடந்த மாதம் 25ம் தேதி எசையனூர் கிராமத்தில் பாலாற்றில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீர் வளத்தை காத்து இயற்கை வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது.
    • வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆறு பூர்வீக பாசனபகுதிஆகும். பல ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்று தண்ணீரைகொண்டு முப்போக விவசாயம் செய்துஉள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் பல ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கடும் வறட்சியும் கண்டு உள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

    மானாமதுரை வைகை ஆற்று பகுதிக்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. காசியில் கங்கை நதி எப்படி உள்ளதோ அதேபோல் மேற்கில் இருந்து பாய்ந்து வரும் வைகை ஆறு வடக்கு தெற்கு பகுதியாக செல்லும் அமைப்பு மானாமதுரை வைகை ஆற்றுக்கு உள்ளது.

    இதேபோல் பல நூறுஆண்டுகாலமாக மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் வைகைஆற்று கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். அங்கு வரும் பக்தர்கள் ஆறு வறண்டு தண்ணீர் இல்லாமல் இருப்பதைகண்டு மணம் வருந்தி செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி கடந்த 2 ஆண்டுகாலமாக வற்றாத ஜீவநதியாக மானாமதுரை வைகை ஆறு பாய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மானாமதுரையை சுற்றி ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவகைளும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதைத் தொடர்ந்து விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது. கூடுதல் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமித்துத்து நிலத்தடி நீரை அதிகபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    வைகைஆறுமுழுவதும் நாணல் செடி, சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். ஆற்றில் இருந்து கால்வாய்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள மதகுகளை புதுபிக்க வேண்டும். வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    வற்றாத ஜீவநதியாக செல்லும் கங்கை நதிக்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் வகையில் வேகவதி எனும் வைகை நதிக்கும் ஆரத்தி எடுத்தும், புஷ்கரணி விழா நடத்தியும் வைகை நதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    • கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
    • மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.வாகைக்குளம் பகுதியில் கிருதுமால் நதி ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நிலையில் கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அர்ச்சுனன் மாவட்ட கலெட்கருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். ஜே.சி.பி. எந்திரம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி மணல் குவாரி தொடங்கியது. இதில் 18,074 லாரிகளில் மணல் எடுக்க பொதுப் பணித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல், சுற்றுசூழல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் ஊத்துக்கோட்டை, அனந்தேதி, போந்தவாக்கம், நந்திமங்கலம், பேரிட்டிவாக்கம், கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம் உட்பட 10 கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த பயிர்கள் கருகின. இதனை கண்டித்தும், மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தியும் பொது மக்கள் கடை அடைப்பு, உண்ணாவிரதம், மறியல் போன்ற தொடர் போராட்டம் நடத்தினர். மேலும் மணல் குவாரி மூடவேண்டும் என்று கோரி பொது மக்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரபட்டது.

    இது குறித்து மணல் குவாரியை ஆய்வு செய்ய கோர்ட் தொழில்நுட்ப குழுவை அமைத்தது. குழுவினர் ஆய்வு செய்து விதிகள் மீறப்பட்டுள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ததால் மணல் குவாரி மூடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரணி அற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்கப்பட்டது. மழை பொய்த்து போய் ஆரணி ஆறு முழுவதுமாக வற்றிவிட்ட நிலையில் மீண்டும் மணல் குவாரி தொடங்கி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து 10 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், “ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உறுதி அளித்தார்.

    குடியாத்தம் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தையொட்டி உள்ள பாலாற்றில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க மணல் குவாரி அமைக்கப்பட்டது.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெகு தூரத்தில் இருந்தும் மாட்டுவண்டிகள் வர தொடங்கின. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்கின்றனர்.

    இதனால் பாலாறு சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவ தோடு விவசாயம் முற்றிலும் நாசமாகிறது.

    சுடுகாட்டை அழித்தும் மணல் சுரண்டப் பட்டுவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த அக்டோபர் மாதம் மாட்டு வண்டிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது அதிகாரிகள் மணல்குவாரியை மூட நடவடடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

    இந்நிலையில் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திர மடைந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மீண்டும் பாலாற்றில் குவிந்து மணல் குவாரியை முற்றுகையிட்டு மணலை ஆள்ளவிடாமல் போராட்டம் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே போலிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் டென்டர் விடப்பட்டது. அதன்படி ஏரியில் மணல் குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டது. 3 அடிக்கு மட்டுமே மணல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் சுமார் 15 அடிவரை பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டு உள்ளதாக போலிவாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் மணல் எடுத்த பள்ளத்துக்குள் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 15 அடிக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் 35 அடியில் தண்ணீர் வந்துவிடும்.

    ஆனால் தற்போது 80 அடியில்தான் தண்ணீர் வருகிறது என்றனர். தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து திருமானூர் பொதுமக்கள், கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

    அப்போது பேசிய கலெக்டர் விஜயலட்சுமி, பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மணல் குவாரி அமைந்துள்ள இடத்தில் ஐகோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழுவினர் வந்து பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மணல் குவாரி நிலவரம் குறித்து முடிவு எடுக்கப் படவுள்ளதாக கூறியதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். 
    காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரியை மூடகோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளிடக்கரையோர கிராமமான குஞ்சமேட்டில் அரசு மாட்டு வண்டி மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்ததால், மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, நேற்று முன்தினம் தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குவாரிக்கு சென்றனர்.

    இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மணல் அள்ள வந்த மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், இந்த மணல் குவாரியால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மணல் குவாரியை மூடவேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குவாரியில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    ×