search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arani river"

    • கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
    • இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியும், ஆற்று வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    எனினும் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான ஒருசில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 3 இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் கிராமத்தில் ஆரணி ஆற்று வெள்ளம் காரணமாக தரைப் பாலம், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவர்கள் பழவேற்காடு பகுதிக்கு படகுகளில் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அவர்களது படகு பயணம் நீடித்து வருகிறது. ஆரணி ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்த பின்னரே சாலைகள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிகிறது. ஒரு வாரமாக தங்களை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை, நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

    இதேபோல் கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த கேசவ புரம், பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதனை ராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் மழைநீர் வடியாமல் இன்னும் தேங்கி நிற்கிறது.

    பழவேற்காடு அடுத்த தாங்கள் பெரும் புலம் ஊராட் சிக்கு உட்பட்ட தாங்கல், பெரும் புலம், இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து தடைப்பட்டதால் டிராக்டரில் உணவு மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றன. பழவேற்காடு அண்ணா மலைச்சேரி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறை சார்பில் கணக்கெ டுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    • பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டதில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதிகாரிகள் வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அவர் மீஞ்சூர் ஒன்றியம், லட்சுமிபுரம் அணைக் கட்டு, ஏ.ரெட்டி பாளையம், சோமஞ் சேரி, ஆண்டார் மடம், தத்தை மஞ்சி, ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் முன்னெச்சரிக்கையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், கயிறு, கம்புகளை பார்வையிட்டார், பின்னர் திருப்பாலைவனம் பேரிடர் மைய கால கட்டிடத்தை பார்வையிட்டு ஜன்னல், கதவுகள், கழிவறைகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    ஆய்வின் போது, சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், ஆரணிஆறு செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகர், குமார், ராம கிருஷ்ணன் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி மணல் குவாரி தொடங்கியது. இதில் 18,074 லாரிகளில் மணல் எடுக்க பொதுப் பணித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல், சுற்றுசூழல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் ஊத்துக்கோட்டை, அனந்தேதி, போந்தவாக்கம், நந்திமங்கலம், பேரிட்டிவாக்கம், கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம் உட்பட 10 கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த பயிர்கள் கருகின. இதனை கண்டித்தும், மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தியும் பொது மக்கள் கடை அடைப்பு, உண்ணாவிரதம், மறியல் போன்ற தொடர் போராட்டம் நடத்தினர். மேலும் மணல் குவாரி மூடவேண்டும் என்று கோரி பொது மக்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரபட்டது.

    இது குறித்து மணல் குவாரியை ஆய்வு செய்ய கோர்ட் தொழில்நுட்ப குழுவை அமைத்தது. குழுவினர் ஆய்வு செய்து விதிகள் மீறப்பட்டுள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ததால் மணல் குவாரி மூடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரணி அற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்கப்பட்டது. மழை பொய்த்து போய் ஆரணி ஆறு முழுவதுமாக வற்றிவிட்ட நிலையில் மீண்டும் மணல் குவாரி தொடங்கி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து 10 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், “ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உறுதி அளித்தார்.

    பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே தும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்துவதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, மணல் கடத்தி வந்த டிராக்டரை மடக்கிப் பிடித்தனர். டிராக்டரை ஓட்டி வந்த தும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணனை கைது செய்தனர். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நீர் நிலைகளில் மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
    ×