search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆரணி ஆற்று வெள்ளத்தில் ஒரு வாரமாக படகில் செல்லும் கிராம மக்கள்: அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிப்பு
    X

    ஆரணி ஆற்று வெள்ளத்தில் ஒரு வாரமாக படகில் செல்லும் கிராம மக்கள்: அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிப்பு

    • கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
    • இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியும், ஆற்று வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    எனினும் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான ஒருசில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 3 இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் கிராமத்தில் ஆரணி ஆற்று வெள்ளம் காரணமாக தரைப் பாலம், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவர்கள் பழவேற்காடு பகுதிக்கு படகுகளில் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அவர்களது படகு பயணம் நீடித்து வருகிறது. ஆரணி ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்த பின்னரே சாலைகள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிகிறது. ஒரு வாரமாக தங்களை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை, நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

    இதேபோல் கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த கேசவ புரம், பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதனை ராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் மழைநீர் வடியாமல் இன்னும் தேங்கி நிற்கிறது.

    பழவேற்காடு அடுத்த தாங்கள் பெரும் புலம் ஊராட் சிக்கு உட்பட்ட தாங்கல், பெரும் புலம், இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து தடைப்பட்டதால் டிராக்டரில் உணவு மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றன. பழவேற்காடு அண்ணா மலைச்சேரி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறை சார்பில் கணக்கெ டுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×