search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyapalayam"

    • பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
    • மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.

    இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சென்று ராக்கெட் லாஞ்சர் குண்டை ஆய்வு செய்தனர்
    • இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நிலத்தை தோண்டியபோது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத்தனர்.

    இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை ஆய்வு செய்தனர். அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது எப்படி இங்கு வந்தது இதன் சக்தி என்ன என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும், இப்பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர், வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறிவிட்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டை பத்திரமாக கொண்டு சென்றனர். அதனைத் திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயலிழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர். இச்சம்பவம் இப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியபாளையம்:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா (வயது 39). இவரது மனைவி பெயர் ஜோதி பிரியா (34).

    பிரியாவின் தாய்வீடு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மேந்திரா தனது மனைவியுடன் காரில் சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்த உடன் சென்னை திரும்பினார்கள். தர்மேந்திரா காரை ஓட்டி வர முன்னிருக்கையில் ஜோதி பிரியா அமர்ந்து வந்தார்.

    சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரியபாளையத்தை அடுத்த தானா குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது கார் தர்மேந்திராவின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. சாலை தடுப்பில் பயங்கர சத்தத்துடன் மோதியது.

    இந்த விபத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த ஜோதி பிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மேந்திரா படுகாயமடைந்தார்.

    தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

    ஜோதி பிரியாவின் உடல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த தர்மேந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பேட்டை மேடு கிராமம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் தரணி பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பெரியபாளையம்- வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டை மேடு கிராமம் சர்ச் அருகே சென்ற போது திடீரென சாலையில் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் தரணி மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய தரணி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம் அருகே விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 16). இவர் பெரியபாளையம் நோக்கி செல்வதற்காக நடந்து சென்றார்.

    அப்போது வட மதுரையில் இருந்து வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ‘லிப்’ கேட்டு ஏறினார்.

    வடமதுரை கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே மற்றொரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பரத்குமார் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் விழுந்த பரத்குமார் மீது ஏறி இறங்கியது.

    சம்பவ இடத்திலேயே பரத்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரிய வில்லை. தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரியபாளையம் அருகே கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவர் டிராக்டருக்கு பயன்படுத்தும் ஐட்ராலிக் எந்திரத்தை பழுது பார்க்க அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் கொடுத்து இருந்தார். அதனை மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுதொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த ராஜை கைது செய்தனர்.

    பெரியபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் ஆரணி பஜார் வீதிக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் விசாரணை செய்து வந்தனர்.

    இதுதொடர்பாக திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த பலராமன், மணிகண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 2 பேரையும் போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் - கன்னிகைபேர் நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வடமதுரை கூட்டுச் சாலை அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்தது மற்றும் ஜெயபுரம் கூட்டுச்சாலையில் மோட்டார் சைக்கிள் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    அவர்கள் செங்குன்றத்தை அடுத்த கார்த்திக், காவாங்கரை ஸ்ரீநாத் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் 5 கால்கள் உடைய மாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டிற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் புதுவாயல் - பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் வளாகத்தில் திடீரென 5 கால்கள் உடைய பசு மாடு ஒன்று புகுந்து சுற்றி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பசுமாடு யாருடையது என்று தெரியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் நின்ற 5 கால் உடைய பசு மாட்டை பார்த்து சென்றனர்.

    அந்த மாட்டுக்கு புன்னாக்கு, தவிடு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தனர். மேலும் பெண்கள் மாடுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூஜை செய்து வணங்கினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கால்கள் உடைய பசுமாடு எப்படி ஊருக்குள் வந்தது. அதன் உரிமையாளர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.
    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பெரியபாளையம்:

    ஆந்திர மாநிலம் மதனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 20). கடந்த வாரம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

    இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான கார்த்திக் (20), தினேஷ் (25) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.

    பெரியபாளையம் அருகே சென்னை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கன்னிகைபேரில் உள்ள மின்வாரியம் அலுவலகம் அருகே வந்த போது எதிரே குஜராத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிலம்பரசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அவர்களை கிராம மக்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்து போனார். அவர் நண்பர்கள் கார்த்திக், தினேஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #Tamilnews
    பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே லாரி மோதியதில் குடிநீர் வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 39). மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் வந்த போது திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி திடீரென சாலை தடுப்பை தாண்டி எதிர் திசையில் தாறுமாறாக ஓடி சேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சேகரை மீட்டு வெள்ளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது டாக்டர் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து சேகரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வெள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததே சேகர் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வெள்ளியூர் ஆஸ்பத்திரி முன்பு சேகரின் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரபாகரன், துணை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #Tamilnews
    ×