search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi Palaniswami"

    தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalaniswami #Blackday
    சென்னை:

    கொடிநாள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் தாய் திருநாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.



    இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நமது பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளை இரவு பகல் பாராது காவல் காப்பதோடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் நாட்டு மக்களை காக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

    தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல நலத் திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

    போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

    கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டுமென நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #EdappadiPalaniswami #Blackday
    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #JactoGeo #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் ஆகியோர் இக்கூட்டமைப்பினரை சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன் விவரத்தை எனக்கு தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தேன்.

    அதன்படி, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு அமைச்சர்களும், உயர் அலுவலர்களும் 30.11.2018 அன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இக்கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை, குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், 1.1.2016 முதல் 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்குதல், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வைத்தனர்.

    அக்கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், அம்மாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தெளிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஸ்ரீதர் ஒரு நபர் குழு அறிக்கை தற்போதுதான் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவின் அறிக்கையை அரசு பரிசீலனை செய்து, உரிய முடிவெடுக்கும் எனவும் அமைச்சர் அக்கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை விவரங்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அம்மாவின் அரசு எப்பொழுதுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசு. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை எவ்வித பாகுபாடும் இல்லாமல் பரிசீலனை செய்து, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு கடுமையான நிதிச்சுமை இருந்தபோதிலும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

    ஊதிய உயர்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் பெற்று அதனை விரைவில் அமல்படுத்தி உள்ளது. மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்படும் அம்மாவின் அரசு, சமூக நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றிற்கு தேவைப்படும் நிதியையும் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் நலனையும் பேணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.



    அண்மையில் “கஜா” புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில், அம்மாவின் அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    இத்தகைய தருணத்தில், புயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய விவசாய பெருமக்கள், மீனவ பெருமக்கள், பொதுமக்கள் ஆகியவர்களின் துயர்துடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல், விரைவாக பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அளித்துள்ள கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, செயல்படுத்த வாய்ப்புள்ள கோரிக்கைகளை அம்மாவின் அரசு செயல்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அம்மாவின் அரசு முழு முயற்சி எடுத்து வரும் காலகட்டத்தில், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #JactoGeo #EdappadiPalaniswami

    நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகை:

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

    இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.



    பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

    கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வரவுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தார்ப்பாய் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்ற மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய் வாங்கி உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    கூட்டுறவு கடன் சங்கம், வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் 22 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவார்கள். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக்காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டது. இந்தக் குழுக்கள் தற்போது தங்களது பரிந்துரைகளை அளித்து உள்ளன.

    மேலும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர்களும், இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தினை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்படுகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 13 ஆயிரத்து 140 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.988-ம், அதிகபட்சம் ரூ.4,613-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 4,767 பேர் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,114-ம், அதிகபட்சம் ரூ.16,963-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.

    நகர கூட்டுறவு வங்கிகளுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 1,286 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.455-ம், அதிகபட்சம் ரூ.16,485-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.

    பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 1,378 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,200-ம், அதிகபட்சம் ரூ.12,500-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.57 மடங்காகும்.

    நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப் படும். இதனால் 462 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500-ம், அதிகபட்சம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.70 மடங்காகும்.

    தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். மொத்தம் 485 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,189-ம், அதிகபட்சம் ரூ.7,815-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.

    தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் காரணமாக 117 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,521-ம், அதிகபட்சம் ரூ.15,526-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 15 சதவீதம்.

    தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 413 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,456-ம், அதிகபட்சம் ரூ.28,017-ம் கிடைக்கும். அதிகப்பட்ச ஊதிய உயர்வு 21 சதவீதம்.

    இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22,048 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143.72 கோடி ஆகும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக மணிமுத்தாறு அணை வருகிற 7-ந்தேதி முதல் 145 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami #ManiMutharDam
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்ட வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு 7.11.2018 முதல் 31.3.2019 வரை 145 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து 399.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #ManiMutharDam
    புதியதாக கட்டப்பட்ட போலீஸ், தீயணைப்பு நிலையம், 14 துணை மின்நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 16 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    மேலும், தேனி மாவட்டம்- தப்புக்குண்டுவில் 93 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 400/110 கி.வோ துணை மின் நிலையம்; காஞ்சிபுரத்தில் 43 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்; திசையன்விளையில் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;

    முசிறி, பச்சூர் மற்றும் திருவலம், குப்புச்சிப்பாளையம், டி.கிருஷ்ணாபுரம், நன்னை, உடையார் பாளையம், அ.துலுக்கப்பட்டி, வள்ளிபுரம் மற்றும் குறிச்சி ஆகிய இடங்களில் 37 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்;

    என மொத்தம் 202 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 துணை மின் நிலையங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 295 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மேலும், காரமடையில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 41 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    திண்டிவனம் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    திண்டுக்கல் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 20 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    பாப்பிரெட்டிப்பட்டியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாணியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;

    என மொத்தம், 388 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சாலை மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சேரன்மகாதேவியில் 3 கோடியே 33 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், தேளூரில் 15 குடியிருப்புகள், காடல்குடி மற்றும் தட்டார்மடத்தில் 56 குடியிருப்புகள், ஒரத்த நாட்டில் 34 குடியிருப்புகள், தஞ்சாவூர் ரெயில்வே காவலர்களுக்கான 43 குடியிருப்புகள், என மொத்தம் 17 கோடியே 94 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 148 காவலர் குடியிருப்புகள்;

    வேளச்சேரி மற்றும் அரியமங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 60 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையங்கள்;

    சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படைக்கான காவல் மோப்ப நாய் பிரிவுக் கட்டடம் மற்றும் சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படைக்கான கட்டடம் என மொத்தம் 9 கோடியே 63 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறை கட்டடங்கள்;

    புகளூரில் 17 குடியிருப்புகள் மற்றும் ஆலங்குடியில் 17 குடியிருப்புகள் என மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர் குடியிருப்புகள்;

    பர்கூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் 1 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்;

    என மொத்தம், 38 கோடியே 23 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    டெல்லியில் உள்ள மயூர்விகார் பள்ளி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டட தொகுதிக்கு முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
    சென்னை:

    தலைநகர் டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லி தமிழ் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழி வாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இங்கு, முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப்பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப்பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    இந்த பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவார்கள். இப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

    டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகி வரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு, டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லித் தமிழ்க் கல்வி கழகத்திற்கு மயூர் விகாரில் பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கு 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதிஉதவி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

    டெல்லித் தமிழ்கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் 13.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார்.

    அதன்படி, டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர்விகார் பள்ளி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புரட்சித் தலைவி அம்மா பள்ளிக் கட்டட தொகுதிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    இந்த புதிய பள்ளிக்கட்டடம் 6515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் அமையவுள்ளது.

    நிகழ்ச்சியில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அமைச்சர் பாண்டியராஜன், என்.தளவாய் சுந்தரம், பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகளின் நலனுக்காக அடங்கல் பதிவேட்டினை மின்னணு பதிவேடாக மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், 1 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்லாந்தில் உள்ள ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்து பல்வகை பேரிடர்களின் அதீத தாக்கத்தினை முன்னதாக அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் இணையதள புவியியல் தகவல் முறை அமைப்பினையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    பல்வேறு சம்பவங்களில் பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு பிரசாத், ஸ்ரீநவீன், கதிரவன், சிவபாலன் ஆகிய 6 மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19-ந்தேதி அன்று பேருந்தும், லாரியும் மோதியதில் ஓட்டுநர் அலெக்சாண்டர், கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami
    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Edappadipalaniswami #ADMK #MKStalin #DMK

    சேலம்:

    சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: சபரிமலைக்கு பெண்கள் செல்வது எல்லாம் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்களது கருத்து?

    பதில்: இது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. இதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

    கே:மத்திய உள்துறை அமைச்சகம் கேரளாவில் சபரிமலை பிரச்சனை தொடர்பாக, கர்நாடகம், தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அறிக்கை அனுப்பி உள்ளது குறித்து?

    ப:தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரும் உஷார் நிலையில் உள்ளனர்.

    கே: அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளார்களே?

    ப: அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் எல்லாம் அரசு அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே அம்மாவுடைய அரசை பொறுத்தவரைக்கும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.


    7-வது ஊதிய குழு அறிவிக்கப்பட்டு அதில் எந்த அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது உங்கள் ஊடகத்தின் வாயிலாகவே ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

    அரசை பொறுத்தவரைக்கும் நிதிநிலை பார்த்துதான் அந்த நிதிநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்ற முடியும்.

    நிதி ஆதாரம் இல்லை. நிதி ஆதாரம் இருந்தால் தான் எல்லாமே கொடுக்க முடியும். நிதி ஆதாரம் தானே முக்கியம். தமிழகத்தினுடைய நிதி ஆதாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

    அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அவர்களுக்கு தக்க உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    அரசாங்கத்திற்கு எவ்வளவு நிதி சுமை இருக்கின்றது அனைவருக்கும் தெரியும். அதுவும் அரசு ஊழியர்களுக்கு முழுமுழுக்க தெரியும். ஏனேன்றால் அரசாங்கத்தை நடத்தக் கூடிய ஒரு நிலையிலேயே இருக்கக் கூடியவர்கள் அரசு ஊழியர்கள். அரசாங்கத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கின்றது என்பது அவர்களுக்கு தெரியும். அதற்கு ஏற்றவாறு அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

    தமிழகம் முழுவதும் பருவமழை பெய்த காரணத்தினால் ஆங்காங்கே தேங்கி இருக்கின்ற தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி டெங்கு கொசு உற்பத்தியாகாத அளவிற்கு மருந்து தெளித்து முன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் இதற்கு பொதுமக்கன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஒட்டன் சத்திரம், தாராபுரம், அவினாசி சாலைகளை டெண்டர் உறவினர்களுக்கு கொடுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், நெருங்கிய உறவினர்கள் யார்? யார்? என்பது குறித்து தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிவித்திருக்கிறார்கள். இதில் எதுவுமே டெண்டர் கொடுக்கப்பட்டதில் வரவில்லை. அப்படி வராமல் இருக்கும்போது சொந்தக்காரர்களுக்கு கொடுத்து விட்டேன் என்று கூறினால் இதை எப்படி சொல்லுறது. இதை பத்திரிக்கையாளர்கள் தான் கேட்க வேண்டும். நான் பல முறை இது குறித்து விளக்கி விட்டேன்.

    ஆகவே ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு தகுதி இல்லாமல் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே ஒரு தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அந்த எதிர்க்கட்சி தலைவருக்கு, அந்த பதவிக்கு லாயக்கு இல்லை. இப்படித்தான் நானும் கருதுகிறேன். மக்களும் கருதுகிறார்கள்.

    டெண்டர் விடப்பட்டதில் தவறு இல்லை என்று பல முறை சொல்லிவிட்டேன். டெண்டர் விடுவதில் யாரும் முறைகேட்டில் ஈடுபடுவதில் வாய்ப்பே கிடையாது.

    இந்த டெண்டர் பொறுத்தவரைக்கும் ஆன்லைன் டெண்டர். இந்தியாவுக்குள் எங்கிருந்தாலும் பதிவு செய்யலாம். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் பதிவு செய்யலாம். தகுதியானவர்கள் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம். முதல்-முதலாக ஆன்லைனின் பணம் கட்டும் முறையை கொண்டு வந்துள்ளோம். டெண்டர் போட்டு இருப்பவருக்கு மட்டும் தான் இது தெரியும். வேறு யாருக்கும் இது தெரியாது. அப்படி இருக்கும்போது எப்படி முறைகேடு நடைபெற்றிருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Edappadipalaniswami #ADMK #MKStalin #DMK

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருகிற 20-ந்தேதி சேலம் வருகிறார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) சேலம் வருகிறார். அவரது வருகையையொட்டி சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய பஸ் நிலையம் அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர், மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் பங்கேற்று பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் 20-ந்தேதி காலையில் விமானம் மூலம் சேலம் வருகிறார். எனவே அவருக்கு மாநகர், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் புறப்பட்டு, கார் மூலம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார்.

    இங்கு கட்சி உறுப்பினர்களுக்கு புதுப்பித்தல் அடையாள அட்டையும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குகிறார்.

    பின்னர் முதல்- அமைச்சர் அங்கிருந்து திரும்பி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்குகிறார். அங்கு வைத்து மாநகர், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து 21-ந்தேதி சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு சென்று அங்கு அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு சேலத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதையடுத்து கரூர், திருச்சியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு முதல்-அமைச்சர் சென்னை செல்கிறார்.

    விரைவில் பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இதற்காக அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசினார்.

    இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, தியாகராஜன், சண்முகம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் துரைராஜ், நேதாஜி, சதீஸ்குமார், ராம்ராஜ், செல்வராஜ், முத்துசாமி, ராமசாமி, கேட் மாதேஸ், துணை தலைவர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மண்டல குழு தலைவர்கள் மாதேஸ்வரன், ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் புல்லட் ராஜேந்திரன், கிருபாகரன், பிரகாஷ், தொழிற் சங்க செயலாளர் பால கிருஷ்ணன், துணை தலைவர் ஜான்கென்னடி, முன்னாள் அவை தலைவர் முகமது உசேன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூப்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    ×