search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abandon"

    • இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை
    • கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்த அரசை முடக்கி வேலைவழங்க முட்டுக்கட்டையாக இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதை இளைஞர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. 10 ஆண்டாக படித்த தகுதியான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்த அரசை முடக்கி வேலைவழங்க முட்டுக்கட்டையாக இருந்தார்.

    புதுவையில் பலர் ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தர அரசு நடவடிக்கை எடுக்காமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவது இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை கெடுக்கும்.

    என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு இதனை தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்கி வருகிறது. ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #JactoGeo #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் ஆகியோர் இக்கூட்டமைப்பினரை சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன் விவரத்தை எனக்கு தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தேன்.

    அதன்படி, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு அமைச்சர்களும், உயர் அலுவலர்களும் 30.11.2018 அன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இக்கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை, குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், 1.1.2016 முதல் 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்குதல், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வைத்தனர்.

    அக்கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், அம்மாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தெளிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஸ்ரீதர் ஒரு நபர் குழு அறிக்கை தற்போதுதான் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவின் அறிக்கையை அரசு பரிசீலனை செய்து, உரிய முடிவெடுக்கும் எனவும் அமைச்சர் அக்கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை விவரங்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அம்மாவின் அரசு எப்பொழுதுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசு. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை எவ்வித பாகுபாடும் இல்லாமல் பரிசீலனை செய்து, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு கடுமையான நிதிச்சுமை இருந்தபோதிலும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

    ஊதிய உயர்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் பெற்று அதனை விரைவில் அமல்படுத்தி உள்ளது. மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்படும் அம்மாவின் அரசு, சமூக நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றிற்கு தேவைப்படும் நிதியையும் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் நலனையும் பேணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.



    அண்மையில் “கஜா” புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில், அம்மாவின் அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    இத்தகைய தருணத்தில், புயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய விவசாய பெருமக்கள், மீனவ பெருமக்கள், பொதுமக்கள் ஆகியவர்களின் துயர்துடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல், விரைவாக பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அளித்துள்ள கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, செயல்படுத்த வாய்ப்புள்ள கோரிக்கைகளை அம்மாவின் அரசு செயல்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அம்மாவின் அரசு முழு முயற்சி எடுத்து வரும் காலகட்டத்தில், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #JactoGeo #EdappadiPalaniswami

    15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிடக்கோரி கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் புனிதன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    புதிய வீராணம் திட்டத்திற்காக இதே திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் ஜெயலலிதாவால் கைவிடப்பட்டது. இதனை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க தீவிரம் காட்டும் அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    மக்களின் பிரச்சினையை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் போராடுபவர்கள் மீது அரசு பல வழக்குகளை போட்டு வருகிறது. 15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முற்பட்டால் இங்கு ஒரு தூத்துக்குடி உருவாகும். மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் அனைத்து போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாநில குழு உறுப்பினர் சின்னத்துரை, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த ராஜேந்திரன், தனபால், தங்கையன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மே 17 இயக்கத்தை சேர்ந்த பாலாஜி, பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், த.மா.கா. கைலாசம் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    ×