search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand quarries"

    காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தை காக்க, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

    இதற்கு காரணம் இயற்கை அல்ல, மணல் கொள்ளை எனும் மனிதர்களின் பேராசை என்பது தான் மனதை உலுக்கும் உண்மை ஆகும். பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் காய்ந்துகிடக்கின்றன.

    பாசனக்கால்வாய்களை ஆழப்படுத்தினால் அவற்றில் தண்ணீர் பாய வாய்ப்புள்ளது. ஆனால், பாசனக் கால்வாய்களை ஆழப்படுத்தும் போது விளைநிலங்களைவிட தாழ்ந்துவிடும் என்பதால், அப்போதும் பாசனக்கால்வாய்களில் இருந்து நிலங்களுக்கு தண்ணீர் பாயாது. எனவே கால்வாய்களை ஆழப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. மாறாக, கரூர் மாவட்டத்தில் மணல் எடுக்கத் தடை விதிப்பதுடன், தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்குவதன் மூலமாக மட்டுமே பாசனக் கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். இச்சிக்கலுக்கு இதுதான் சாத்தியமான தீர்வாகும்.

    கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் இந்தநிலை என்று கூற முடியாது. காவிரியிலும், கொள்ளிடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

    இந்தநிலையை மாற்ற வேண்டுமானால் ஆறுகளில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குவாரிகூட மூடப்படவில்லை. மாறாக புதிய குவாரிகள் தான் திறக்கப்பட்டு வருகின்றன. இது அநீதி.

    காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தைக் காக்க வேண்டுமானால் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடவேண்டும். அத்துடன் இரு ஆறுகளிலும் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி விவசாயத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நீடிப்பதால் அதை தவிர்க்க புதிதாக 27 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆற்றுப் படுகைகளில் மணல் எடுக்கப்பட்டு பல மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் 8 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த மணல் குவாரிகளால் நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மணல் குவாரிகளை ஆய்வு செய்ய கோர்ட்டு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவின் அறிக்கைபடி கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதன் காரணமாக மணல் குவாரிகள் மூடப்பட்டு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது. எனவே மணல் குவாரிகள் மீண்டும் தொடங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் மணல் குவாரிகளில் முறைகேடு நடக்காதவாறு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும், மணல் அள்ளப்படும் இடத்தில் இருந்து சேமிப்பு கிடங்கு வரை செல்லும் மணல் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மணல் அள்ளப்படும், ஒரு லாரிக்கு 2 அல்லது 3 யூனிட் மணல் மட்டுமே விற்பனை செய்யப்படும், ஆன்லைனில் மட்டும் மணல் புக் செய்து விற்பனை செய்யப்படும் என்ற உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

    இதை ஏற்றுக் கொண்ட மதுரை ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது. இதுபோல் பல்வேறு இடங்களில் கோர்ட்டு அனுமதி பெற்று மணல் குவாரிகள் செயல்படத் தொடங்கின.

    இதற்கிடையே கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நீடிப்பதால் அதை தவிர்க்க புதிதாக 27 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த 27 குவாரிகளும் திறக்கப்படுகிறது.

    பொதுப்பணித்துறையின் மணல் பிரிவு அதிகாரிகள் மணல் எடுப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றும், மணல் குவாரிகள் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவின் அனுமதி பெற்றும் இந்த மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது.

    இதில் தஞ்சை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்பட்டு விடும். மற்ற குவாரிகள் படிப்படியாக வருகிற ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விடும் என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 லோடுகள் வரை மணல் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக 9 இடங்களில் மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. மற்ற 18 இடங்களிலும் விரைவில் அனுமதி கிடைத்து விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது ஒரு கன அடி ஆற்று மணல் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. அரசு டெப்போக்களில் 2 யூனிட் மணல் (200 கன அடி) ரூ.1,350-க்கு விற்கப்படுகிறது.

    தற்போது ஒவ்வொரு குவாரியில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 350 முதல் 400 லோடுகள் வரை மணல் சப்ளை செய்யப்படுகிறது. புதிய மணல் குவாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 35,000 முதல் 40,000 லோடுகள் வரை மணல் கிடைக்கும். இதன் மூலம் மணல் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு 15,000 லோடுகள் மணல் கடத்தப்பட்டு வந்தன. அவை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், தமிழ் நாட்டின் தேவைக்கு கூடுதல் மணல் லோடுகள் சப்ளையாவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 15 குவாரிகளில் இருந்து 3,000 லோடுகள் மணல் மட்டுமே கிடைப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதியில் இருந்து 10,000 லோடுகள் மணல் வரை கிடைக்கும் என்றும் அதன் மூலம் மணல் தட்டுப்பாடு ஓரளவு குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருவாயை மறைத்து ஆற்றுமணல் கொள்ளையை மூடி மறைக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். #Ramadoss #Sandquarries

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில் தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன? அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.

    தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது? என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.


    நடப்பாண்டிற்கான நீர்ப் பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

    இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும். இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.

    எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப் பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #Sandquarries

    15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிடக்கோரி கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் புனிதன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    புதிய வீராணம் திட்டத்திற்காக இதே திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் ஜெயலலிதாவால் கைவிடப்பட்டது. இதனை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க தீவிரம் காட்டும் அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    மக்களின் பிரச்சினையை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் போராடுபவர்கள் மீது அரசு பல வழக்குகளை போட்டு வருகிறது. 15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முற்பட்டால் இங்கு ஒரு தூத்துக்குடி உருவாகும். மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் அனைத்து போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாநில குழு உறுப்பினர் சின்னத்துரை, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த ராஜேந்திரன், தனபால், தங்கையன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மே 17 இயக்கத்தை சேர்ந்த பாலாஜி, பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், த.மா.கா. கைலாசம் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    ×