என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்ற மதுரைகிளை"

    • புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு வருகிற வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

    • நாட்டின் சொத்தான கனிமவளம், கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும்.

    சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நாட்டின் சொத்தான கனிமவளம், கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும்.

    சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

    • விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? நீதிமன்றம் கேள்வி.
    • நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு செய்யப்பட்டு நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

    மருத்துவரின் இடத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற ஆர்.டி.ஓ. ஆணையிட்டார். வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா ஆசிரமம் சார்பில் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

    திருவண்ணாமலை நித்தியானந்த பீட அறங்காவலர் சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது ? நீங்கள் அங்கு சென்றுள்ளீர்களா? அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட்டு, விசா ஏதும் உள்ளதா? போன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகில் உள்ள யுஎஸ்கே (United States of Kailasa) என்ற கைலாசா என்கிற தனி நாட்டில் உள்ளார். யுஎஸ்கே நாட்டிற்கு ஐநா சபையின் அங்கீகாரம் உள்ளது என நித்தியானந்தாவின் சீடர் பதில் அளித்தார்.

    மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கறிஞரை மாற்ற நித்யானந்தா தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
    • குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம்.

    மதுரை:

    தென்காசி ரெயில் நகரை சேர்ந்த நம்பிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற் பார்வையில் இந்த கோவில் உள்ளது.

    இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.

    குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.

    கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவி னரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும் என வாதாடினார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

    • தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
    • முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

    கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

    இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • நடிகை கஸ்தூரியின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தனர்.
    • நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.

    ஆனாலும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, முன் ஜாமின் மனு மீதான உத்தரவை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. கஸ்தூரியின் கருத்து தொடர்பாக நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

    • "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு .
    • போலீசார் அனுமதி மறுப்பு. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவு.

    திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.

    இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அறப்போராட்டம் நடத்த காவல்துறையினர் தடைவிதித்தனர். மதுரை மாவட்டத்தில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கியுள்ளது.

    பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

    • கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

    திருப்பரங்குன்றம் மலையுடன் சர்ச்சைக்குரிய வாசகம் அடங்கிய பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வழக்கில் கனல் கண்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்ட்டது.

    இதனையடுத்து, "மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்வதால்தான், இதுபோன்ற நபர்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது" என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது

    ×