search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்

    காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தை காக்க, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

    இதற்கு காரணம் இயற்கை அல்ல, மணல் கொள்ளை எனும் மனிதர்களின் பேராசை என்பது தான் மனதை உலுக்கும் உண்மை ஆகும். பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் காய்ந்துகிடக்கின்றன.

    பாசனக்கால்வாய்களை ஆழப்படுத்தினால் அவற்றில் தண்ணீர் பாய வாய்ப்புள்ளது. ஆனால், பாசனக் கால்வாய்களை ஆழப்படுத்தும் போது விளைநிலங்களைவிட தாழ்ந்துவிடும் என்பதால், அப்போதும் பாசனக்கால்வாய்களில் இருந்து நிலங்களுக்கு தண்ணீர் பாயாது. எனவே கால்வாய்களை ஆழப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. மாறாக, கரூர் மாவட்டத்தில் மணல் எடுக்கத் தடை விதிப்பதுடன், தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்குவதன் மூலமாக மட்டுமே பாசனக் கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். இச்சிக்கலுக்கு இதுதான் சாத்தியமான தீர்வாகும்.

    கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் இந்தநிலை என்று கூற முடியாது. காவிரியிலும், கொள்ளிடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

    இந்தநிலையை மாற்ற வேண்டுமானால் ஆறுகளில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குவாரிகூட மூடப்படவில்லை. மாறாக புதிய குவாரிகள் தான் திறக்கப்பட்டு வருகின்றன. இது அநீதி.

    காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தைக் காக்க வேண்டுமானால் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடவேண்டும். அத்துடன் இரு ஆறுகளிலும் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி விவசாயத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×