search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arun Jaitley"

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #IndiaPakistanWar #PakistanArmy #IndianAirForce
    புதுடெல்லி:

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம் என்றும் மிரட்டியது. அதன் பிறகு எல்லையில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவிய 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இவ்வாறு விமானப்படை தாக்குதல் தொடங்கி உள்ளதால் இரு நாடுகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் விமானங்கள் அடுத்தடுத்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால், போர் பதற்றம் உருவாகி உள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய விமானப்படை தளபதி தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், பின்லேடனை பிடிப்பதற்காக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததைப்போன்று நுழைய  தயார் என்றும் ஜெட்லி கூறினார். #IndiaPakistanWar #PakistanArmy #IndianAirForce 
    நாடு முழுவதும் நலிவடைந்துள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12-லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ளார். #gst #gstflasts
    புதுடெல்லி:

    புதிதாக வீடு வாங்குபவர்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வீடுகளை முன்பதிவு செய்து வாங்கும்போது வீட்டின் விலைமதிப்பில் 12 சதவீதம் தற்போது ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை) வரியாக வசூலிக்கப்படுகிறது. அதாவது, குடியேற தயார் என்று சான்றிதழை பெறாத - கட்டுமான வேலைகள் முற்றுப்பெறாத வீடுகளுக்கு இந்த வரிவிதிப்பு முறை செயல்பாட்டில் உள்ளது. 

    மேலும், கட்டி முடிந்து குடியேற தயாராக உள்ள வீடுகளின் (சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் 60 சதுர மீட்டர், மற்றும் பிறநகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவில் 45 லட்சம் ரூபாய் விலைக்கு உட்பட்ட வீடுகள்) விலைமதிப்பில் 8 சதவீதம் தற்போது ஜி.எஸ்.டி. வரியாக வசூலிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் கூடிய ஜி.எஸ்.டி. குழு கூட்டம் இந்த வரிவிதிப்பில் சில மாற்றங்களை செய்ய சம்மதித்துள்ளது.

    இதைதொடர்ந்து, கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12-லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். கட்டி முடிந்து குடியேற தயாராக உள்ள வீடுகளின் மீதான ஜி.எஸ்.டி. வரி 8-லிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும். 

    இந்த புதிய வரிவிதிப்பு முறை ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் ரியல் எஸ்டேட் மட்டும் கட்டுமானத்துறை புதிய வளர்ச்சியை எட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதேபோல், லாட்டரி சீட்டு மீதான ஜி.எஸ்.டி. வரியும் குறைக்கப்பட வேண்டும் என்னும் பலதரப்பினரின் கோரிக்கை தொடர்பாக இன்றைய கூட்டத்தின்போது ஏதும் முடிவெடுக்கப்படவில்லை.

    தற்போதைய நிலவரப்படி, சில மாநில அரசுகள் நடத்தும் லாட்டரி சீட்டுகள் மீது 18 சதவீதமும், மாநில அரசுகளின் அனுமதியுடன் விற்கப்படும்  லாட்டரி சீட்டுகள் மீது 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரியாக விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #gst #gstflasts
    மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாயகம் திரும்பினார். #ArunJaitley #ArunJaitleyreturns
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால் கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனயில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

    அப்போது ரெயில்வேத்துறை மந்திரி பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின்னர், உடல்நிலை சீரானதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதி மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

    கடந்த மாதம் 15-ம் தேதி மருத்துவ மேல்சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார். அவர் எப்போது இந்தியா திரும்புவார்? என்பது பற்றிய விபரம் வெளியிடப்படாத நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அவருக்கு பதிலாக இடைக்கால நிதி மந்திரி புயுஷ் கோயல் சமீபத்தில் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், அருண் ஜெட்லி இன்று விமானம் மூலம் டெல்லி திரும்பினார். இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். #ArunJaitley #ArunJaitleyreturns 
    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் விவகாரத்தில், சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ICICIBank #ArunJaitley #CBI
    புதுடெல்லி:

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கொச்சாரின் கணவர் தீபக் நடத்திய நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது. அதற்கு பதிலாக, வீடியோகான் நிறுவனத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ.3,250 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், சந்தா கொச்சார் பதவி விலகினார்.

    இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., சந்தா கொச்சார், கணவர் தீபக், வீடியோகான் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது கடந்த 22-ந்தேதி வழக்கு பதிவு செய்தது.

    அடுத்தபடியாக, வீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த தகவல் கசிந்ததாக சி.பி.ஐ.க்கு சந்தேகம் எழுந்தது. உள்மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு சுதன்சு தார் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். புதிய விசாரணை அதிகாரியான மொகித் குப்தாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, வீடியோகான் நிறுவனம் தொடர்பான இடங்களில் 24-ந்தேதி சோதனை நடத்தப்பட்டது.

    இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் கே.வி.காமத், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி தலைமை செயல் அதிகாரி ஜரின் தாருவாலா உள்ளிட்ட வங்கியாளர்களிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்காக, சி.பி.ஐ.க்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வழக்கில் குறிவைக்கப்படுபவர்களின் பட்டியலை படித்து பார்த்தவுடன், என் மனதில் ஒரு சிந்தனை ஓடியது. இலக்கின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இல்லாத ஊருக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த வங்கி துறையினரையும், ஆதாரத்துடனோ, ஆதாரம் இன்றியோ வழக்கில் சேர்த்தால், அது உண்மையில் துன்புறுத்துவதாகவே அமையும்.

    எனவே, மகாபாரதத்தில் அர்ஜூனனின் அறிவுரையை பின்பற்றுங்கள். பறவையின் கண் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், “சிறிய அளவிலான பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரமாரியாக குறிவைக்கப்பட்டபோது, மத்திய அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் தொடர்பான வழக்குகளில், வங்கியாளர்கள் குறிவைக்கப்படும்போது, அருண் ஜெட்லியின் மனசாட்சி விழித்துக்கொண்டது ஏன்?” என்றார்.
    நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளதால், மத்திய நிதி அமைச்சக பொறுப்பு பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #ArunJaitley #FinanceMinister #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரை பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்
    .
    மேலும், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜெட்லி தொடர்வார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது  #ArunJaitley #FinanceMinister #PiyushGoyal
    சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். #ArunJaitley #BJP
    புதுடில்லி:

    மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை சீரானதை அடுத்து, கடந்தாண்டு, ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை, ஏற்றுக் கொண்டார்.



    மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட்டை, வரும், பிப்., 1-ம் தேதி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், பொதுத் தேர்தலுக்கு முந்தைய, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக, நேற்று, மருத்துவ பரிசோதனைக்காக, அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றுள்ளார். அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. #ArunJaitley #BJP
    சிறு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை செயல்படுத்தும் வகையில் பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி அமலாக்கம் குறித்த ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கவுன்சிலின் 32-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சிறு வணிகத்தை பாதுகாப்பதற்காக அவற்றின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு வரம்பை இரு மடங்காக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது வருகிற நிதியாண்டு (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.



    தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இந்த வரம்பை ரூ.40 லட்சமாக அதிகரிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10 லட்சமாக இருந்த இந்த விலக்கு வரம்பு, இனிமேல் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்துக்கான ஆண்டு விற்று முதல் வரம்பும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறு வணிகர்கள் தங்கள் விற்றுமுதலுக்கு ஏற்ப 1 சதவீத வரி செலுத்தினால் போதுமானது என அருண் ஜெட்லி கூறினார்.

    இதைப்போல ரூ.50 லட்சம் வரை விற்று முதல் கொண்டிருக்கும் சேவை வழங்குவோர் மற்றும் வினியோகஸ்தர்கள் (சரக்கு மற்றும் சேவை) 6 சதவீத வரியுடன் ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்தை தேர்வு செய்ய முடியும் என்று கூறிய அருண் ஜெட்லி, இந்த 2 திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதைத்தவிர ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி துறைகளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மந்திரிகள் கொண்ட 2 குழுக்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் அமைக்கப்பட்டது. மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.  #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST 
    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று அருண் ஜெட்லி கூறினார். #RahulGandhi #ArunJaitley #RafaleDeal
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் கரங்கள், ஏற்கனவே ஊழலில் தோய்ந்துள்ளது. அதே பாணியில் நேர்மையான மோடி அரசை களங்கப்படுத்த ஊழல் புகார் சுமத்தப் பார்க்கிறது. போபர்ஸ் ஊழலில் சிக்கிய காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை.

    போபர்ஸ் ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு என்ன செய்தது? அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது. கூட்டுக்குழு, கட்சி சார்பானது. அதனால், அக்குழுவால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. இதெல்லாம் தெரிந்துதான், போலியாக ஊழலை உற்பத்தி செய்து, மோடி அரசை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.



    மேலும், ரபேல் விமான விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தனது மனம் திருப்தி அடைந்து விட்டதாக கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு சொல்வதுதான் இறுதியான வார்த்தை. அதற்கு சவால் விட யாருக்கும் உரிமை கிடையாது.

    ரபேல் விவகாரத்தில் வெறும் விமானத்தின் விலைக்கும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானத்தின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாத ஜென்டில்மேன், காங்கிரசின் தலைவராக இருப்பது மிகவும் சோகமானது.

    ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர் விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறினால், அது எதிரிகளுக்குத்தான் சாதகம் ஆகிவிடும். தேச பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் செயல்படுகிறது.

    வெற்று விமானத்தின் விலையை காங்கிரஸ் ஆட்சிக்கால விலையை விட 9 சதவீதம் குறைவாகவும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையை 20 சதவீதம் குறைவாகவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

    முந்தைய ராணுவ ஒப்பந்தங்களில் சதிகாரர்களாக இருந்தவர்கள், இப்போது மோடி அரசு மீது விரல் நீட்டுகிறார்கள். அந்த நபருக்கு உண்மை என்றாலே பிடிப்பது இல்லை. கடந்த 6 மாதங்களாக இந்த சபையில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொய்யானது. பொய் சொல்வதில் அவர் பெயர் பெற்றவர்.

    இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

    அருண் ஜெட்லி பேசிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் காகிதத்தில் விமானம் செய்து, அதை அருண் ஜெட்லியை நோக்கி வீசினர்.

    அவர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். “‘நீங்கள் இன்னும் குழந்தைகளா?” என்று அவர் கேட்டார்.  #RahulGandhi #ArunJaitley #RafaleDeal
    பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் வாராக்கடன் தேங்கி கிடக்கிறது. இந்த கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் நேற்று பதிலளித்தார். அந்த பதிலில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த தவறின் அடிப்படையில் மேற்படி அதிகாரிகளுக்கு குறைந்த அபராதம் முதல் பெரிய அளவிலான அபராதம் வரை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அருண் ஜெட்லி, வாராக்கடன் தொகை அடிப்படையில் அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை முதல் சி.பி.ஐ.யில் புகார் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பதவி இறக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி.யில் 1,216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளது.

    சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டிஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

    சிமெண்டு மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டும் தொடர்ந்து 28 சதவீத வரிவிகிதத்தில் உள்ளன. மற்ற அனைத்து கட்டுமான பொருட்களின் வரிவிகிதம் ஏற்கனவே 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனாலும் முதல் வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. முதல் வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.89,700 கோடியாக இருந்தது. 2-வது வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.97,100 கோடியாக உள்ளது.



    ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும். நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும்.

    ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இதில் விதிவிலக்கானவை. அவைகளுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும். இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #GST
    ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. #GST #GSTCouncilMeeting
    புதுடெல்லி:

    நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.



    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

    ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள், 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

    ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரியை தொடரவும், மற்ற 99 சதவீத பொருட்கள் 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரவும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி., ஆட்டோமொபைல், டயர், சிமெண்டு, ரியல் எஸ்டேட் சாதனங்கள், சில எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவை மீதான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST #GSTCouncilMeeting
    மத்திய அரசின் ரூ.85,949 கோடிக்கான துணை மானியக் கோரிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #SupplementaryDemand #ArunJaitley
    புதுடெல்லி:

    கூடுதல் செலவினத்தை மேற்கொள்ள வசதியாக, இரண்டாம் கட்ட துணை மானிய கோரிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி அருண் ஜெட்லி இதனை தாக்கல் செய்தார். அதில், 2018-19ம் நிதியாண்டில் கூடுதல் செலவினத்தை மேற்கொள்வதற்கு ரூ.85,948 கோடியே 86 லட்சம் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதில், கிட்டத்தட்ட பாதி தொகையானது பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும். அரசு பங்கு பத்திரங்கள் மூலம் 41000 கோடி ரூபாய் அரசுத்துறை வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை சரிவிலிருந்து மீட்பதற்கு 2345 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த துணை மானியக்கோரிக்கை மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். 

    ஆனால், துணை மானியக்கோரிக்கை மீது விவாததம் தொடங்குவதற்கு முன், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். #SupplementaryDemand #ArunJaitley
    ×