search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appear"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் இன்று ஆஜரானார்.#Jayalailthaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து இருந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறி இருந்தார். இதையடுத்து அவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஜெய் ஆனந்த் ஆஜரானார். அப்போது அவர் தனது விளக்கத்தை அளித்தார். #Jayalailthaa
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ArumugasamyCommission
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.

    பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

    பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விசாரணை செய்யவில்லை. மேலும் தீபா, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அழைத்து சென்றேன்.



    இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.

    தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.

    தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.

    அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #JayalalithaaDeath ##ArumugasamyCommission
    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் முஷரப் நாளைக்குள் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் இறுதிக்கெடு விதித்துள்ளனர். #PakistanSC #Musharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.



    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

    பின்னர், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. முஷரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளவும் வழிசெய்யும் விதத்தில் அவரது பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இதற்கு முன்னதாக லாகூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணையில் ஜூன் 13-ம் தேதி (இன்று) முஷரப் ஆஜராக இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிற்பகல் நிலவரப்படி அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்தது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று நடைபெற்ற விசாரணையில், முன்னாள் அதிபர் முஷரப் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் என இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் வரும் முஷரப்புக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இதை எழுத்துப்பூர்வ வாக்குறுதியாக அளிக்க முடியாது. அப்படி நாளை அவர் ஆஜராக தவறினால் சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #PakistanSC #Musharraf 
    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 2-வது முறையாக அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் ஆஜரானார். #Chidambaram #AircelMaxiscase
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவான நிலையில், கைது செய்வதில் இருந்து தடை விதிக்ககோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, ஜூன் 5-ம் தேதி ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலகட்டங்களாக நடைபெற்ற அந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் வரை நடைபெற்றது.



    இதையடுத்து இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று நடைபெறும் விசாரணையின்போது சிதம்பரம் அளிக்கும் வாக்குமூலத்தை பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, சற்றே மாறுபட்ட கோணத்தில் ப.சிதம்பரத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது. #Chidambaram #AircelMaxiscase
    எஸ்.வி.சேகர் ஜூன் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். #SVShekher #EgmoreCourt #Summon
    சென்னை:

    நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி.சேகரை கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை.

    இந்நிலையில், ஜூன் 20-ல் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சம்மனில், ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SVShekher #EgmoreCourt #Summon
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். #INXMediaCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.

    இதே போல ப.சிதம்பரத்துக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஜூலை 10-ந்தேதி வரை அவரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். அவரிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது.

    அவர் 12-ந்தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பட்டுள்ளது.

    இதே போல ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிலும் அவரை ஜூலை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்த போது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.350 கோடி அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. அன்னிய முதலீடு அனுமதி தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.


    ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்தி சிதம்பரம் ஏற்கனவே கைதாகி ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி, செய்தி இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். #INXMediaCase #Chidambaram  #CBI
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கார்த்திகேயன், தீபக், பூங்குன்றன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    தற்போது ஓரளவு விசாரணை முடிந்த நிலையில் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயலலிதான் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடமும் வக்கீல் ராஜ்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

    சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.



    விசாரணை ஆணையத்தில் இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது குரல் பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுப.வீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக இன்று நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.

    நடிகர் நெப்போலியனுடன் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உடன் வந்திருந்தார். #Tamilnews
    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 6 பேர் இன்று நேரில் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் அரசு செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் சிலரை ஆணையத்துக்கு மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர்.


    ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.

    இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்-யார் பார்த்தார்கள். அங்கு யார் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்தது என்பது உள்பட பல்வேறு தகவல்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதர்சயீத் மற்றும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆஜர் ஆனார்கள். #JayalalithaDeath

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.


    அதை தொடர்ந்து இன்று 2 பேரும் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகினர். பதர்சயீத் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். இவர் ஜெயலலிதாவின் பள்ளி பருவ தோழி ஆவார்.

    எனவே அவரது உடல் நலம் குறித்த தகவல்களை விசாரணை கமி‌ஷன் முன் வழங்கினார்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக இருந்தார். அவரிடமும் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். #JayalalithaDeath

    திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது தந்தை கோவை கோர்ட்டில் ஆஜரானார். விசாரணையை ஜூன் 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி விஷ்ணுபிரியா தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய மகேஸ்வரி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில மனு தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தில் வழக்கு கைவிடப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விஷ்ணு பிரியா தந்தை ரவிக்கு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டு ஒரு சம்மன் அனுப்பியது. அதில் சி.பி.ஐ. விசாரணை கைவிடப்படுவதாக அறிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக நீங்கள் ஏதேனும் கூற இருந்தால் கோர்ட்டில் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த 9-ந் தேதி ரவி கோவை தலைமை குற்றவியல் நீதி மன்ற நீதிபதி மலர் மன்னன் முன்னிலையில் ஆஜரானார். அவர் விசாரணையை இன்று (24-ந் தேதிக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    அதன்படி விஷ்ணு பிரியா தந்தை ரவி இன்று கோர்ட்டில் ஆஜராக வந்தார். தலைமை குற்றவியல் நீதிபதி விடுமுறை என்பதால் அவர் ஜே.எம்.-3 கோர்ட்டில் நீதிபதி வேலுசாமி முன் ஆஜரானார். அப்போது அவர் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் சந்தேகம் உள்ளது. அவர்களது அறிக்கை எனது கைக்கு வந்து படித்து பார்க்க ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என கூறினார்.

    வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    குழந்தை கடத்தல் பீதியில் சென்னை மூதாட்டியை கொன்ற 37 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
    போளூர்:

    சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) மற்றும் அவரது மருமகன் கஜேந்திரன் (45) உள்பட உறவினர்கள் 5 பேர், கடந்த 9-ந் தேதி போளூர் தண்ணீர்பந்தலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    போளூருக்கு முன்புள்ள தம்புகொட்டான் பாறை கிராமத்தில் காரை நிறுத்தி வழி கேட்டனர். அப்போது, குழந்தை கடத்தும் கும்பல் என தவறாக எண்ணி கிராம மக்கள் கத்தி கூச்சலிட்டனர். எதற்கு ‘வம்பு’ நின்று காரை எடுத்து கொண்டு புறப்பட்ட அவர்களின் காரை களியம் கிராமத்தில் மடக்கினர்.

    காரில் இருந்த ருக்மணி உள்ளிட்ட 5 பேரையும் கீழே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர். காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஜேந்திரன் உள்பட மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவத்தில் அத்திமூர் மற்றும் களியம், தம்புகொட்டான் பாறை, கணேசபுரம், காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், இந்திராநகர், ஏரிக் கொல்லைமேடு, திண்டிவனம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த 117 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    இவர்களில் 42 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட 11 கிராமங்களையும் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த நிலையில், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட 42 பேரில், 37 பேரின் காவல் முடிந்ததையடுத்து, இன்று போலீஸ் பாதுகாப்புடன் 37 பேரும் போளூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    37 பேரின் காவலையும், மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 37 பேரும் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    ×