search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers"

    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    • நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாடு முழுவதற்குமான மக்களின் தேவைக்கு 70 சதவீதம் பாமாயில் மற்றும் இதர ஆயில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலை விட தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப தென்னை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதாலும் தேங்காய் விலை குறைந்துவிடுகிறது.

    தற்போது தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் தேங்காய் விலை குறைந்து விட்டதாகவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேலும் தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் கூறியபடி சென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, விலையை நிர்ணயம் செய்து, தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    • தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது.
    • கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடங்கள் ஆகிய 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இங்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை மஞ்சள் விற்பனையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் மஞ்சள் தேவை அதிகரித்ததன் காரணமாகவும் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் புதிய மஞ்சள் அறுவடை நடந்ததாலும் மஞ்சள் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 13-ம் தேதி கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 557 முதல் 21 ஆயிரத்து 369 வரை என விலை உயர்ந்தது. அதற்கு இணையாக பிற இடங்களிலும் தரமான மஞ்சள் ரூ.20 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையானது. அதன் பின் மீண்டும் விலை குறைய தொடங்கியது.

    பின்னர் மார்ச் 27-ம் தேதியில் குவிண்டால் ரூ.17 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் மஞ்சள் மார்க்கெட்டுக்கு 10 நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏலம் தொடங்கியதும் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரமாக நீடித்தது. தேர்தலுக்குப் பின் கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் சீசன் தொடங்கி புதிய மஞ்சள் வரத்தால் குவிண்டால் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அதே நேரம் பஸ்மத், நாம்டேட் உட்பட பல மாநிலங்களில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கியதால் மஞ்சள் வரத்து அதிகரித்தது.

    இதனால் விலை குறைய தொடங்கியது. தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது. கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    அதன் காரணமாக கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து நேற்று அதிகபட்சமாக குவிண்டால் ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 29 முதல் ரூ.18 ஆயிரத்து 599 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.16 ஆயிரத்து 719 வரையிலும் விற்பனையானது.

    அதேபோல ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 900 முதல் ரூ.18 ஆயிரத்து 810-க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 9 முதல் ரூ.17 ஆயிரத்து 99-க்கும் விற்பனையானது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கும் மொத்தம் 445 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 623 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. தொடர்ந்து மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.


    ஆனால் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருப்பதில்லை. எனவே அறுவடை முடிந்த உடனேயே பயிர் காப்பீடு கிடைத்தால் தான் தொடர்ந்து நடைபெற வேண்டிய அடுத்த பருவ விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு பயன் தரும்.

    எனவே தமிழக அரசு, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது

    தஞ்சாவூா்:

    மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ராசி மணல் அணைக்கட்டுமானத்தை தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் தஞ்சை அருங்காட்சியகத்தில் காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து பேரணியாக விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு மத்திய மற்றும் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறே தஞ்சை சாந்த பிள்ளைகேட் நீர்வளத்துறை காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.

    இதையடுத்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேரிக்கார்டு உள்ளிட்ட தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . மேலும் விவசாயிகள் நடுரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


    அப்போது பி. ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.

    • அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினார்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 லட்சம் ஏக்கர் விவசாய பாசனத்திற்கு 2 பிரிவுகளாக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு 5 சுற்று முறையாக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி 4-வது முறை தண்ணீர் திறப்பு நிறைவடைந்த நிலையில் அணையில் போதுமான தண்ணீர் இல்லை எனக்கூறி 5-வது சுற்று முறைக்கு திறக்க வேண்டிய தண்ணீரை பொதுப்பணித் துறையினர் திறக்கவில்லை.

    இதற்கிடையே பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பாசன விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எள், கடலை, மக்காச்சோளம், சோளம், உளுந்து போன்ற பயிர்களை பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலையில் உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பாசன விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை அறிவித்த பின்னர் தண்ணீர் திறந்து விடபடாது என அரசு கூறுவது ஏற்புடையதல்ல என விவசாயிகள் கூறினர். இதனால் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு போதுமான தண்ணீரை 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினார்.

    தொடர்ந்து விவசாயிகளிடம் நீர்வள துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாசன விவசாயிகள் தண்ணீர் திறந்து விடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி நேற்று இரவு முதல் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக பாசன சபை விவசாயிகள் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு பிறகு ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும்.

    கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்கள் இலவசமாக பயனடைய உள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரும் பொருட்செலவில் இந்த ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பரிந்துரைகள் துல்லியமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வுக்கூடத்தில் பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து அறியும் முழுமையான தானியங்கி கருவிகள், மண்ணின் அங்கக கரிம அளவை அறியும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆய்வக தொழிற்நுட்ப வல்லுனர் குழுக்களோடு மிக சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மண் பரிசோதனை சேவை முதற்கட்டமாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த சேவையை பெறும் விவசாயிகளின் நிலத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக செல்வார்கள். அங்கு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். பிறகு விவசாயிகளின் நிலத்தில் இருந்து பெறப்பட்ட மண், ஆய்வுக்கூடத்தில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.


    இந்த பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த வேளாண் வல்லுநர் குழு பயிர் ஆலோசனை மற்றும் உரப் பரிந்துரைகளை வழங்கும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தொடர் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்த இலவச மண் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மற்றும் மண்ணின் அங்கக வளம் பற்றி அறிந்து கொள்ளவும், பயிர்வாரியான ஊட்டச்சத்து தேவை மற்றும் மண்ணின் தன்மை முதலியவற்றை கருத்தில் கொண்டு உர மேலாண்மை செய்திடவும், பயிரின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை பெருக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெருமளவில் உதவி புரியும்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் 33 "மண் காப்போம்" இருசக்கர வாகனங்களின் பயணம் ஆதியோகி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதிலும் சென்று உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராமங்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்கு விரைவாக சென்று சேவையாற்ற முடியும். மேலும் விவசாயிகளை விரைவில் அணுகவும், புதிய சந்தைகளை திறம்பட கண்டறியவும் இந்த வாகனங்கள் உதவும் என்பதால் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
    • தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    தாராபுரம்:

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிய பின்பும் இழப்பீடு வழங்காததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமம், நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கோனேரிப்பட்டி.பாலு ஆகியோர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 1997ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே நல்ல தங்காள் அணையை கட்டியது. அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது, விவசாயிகளும் முழு சம்மதத்தோடு நிலத்தை கொடுத்தார்கள்.

    இழப்பீடு மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், உரிமையியல் நீதிமன்றத்தில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் நீர்வள ஆதாரத்துறை மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.

    20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் ஒரு நிர்வாகம் இயங்கி வருவது என்பது, தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    எனவே நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று 1-4-2024 முதல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×