search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check post"

    • ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
    • பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளாவூர் சோதனை சாவடியில் 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
    • சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக எல்லையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகவும், ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட த்தில் சமீப காலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கோழிகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி டயர் மற்றும் வாகனத்தின் வெளிப்புற பகுதியில் கால்நடைத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த 17-ந்தேதி தொடங்கின.

    இன்று 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடந்து வருகிறது.

    • வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார்.
    • உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதுறை ஊராட்சி உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள இந்த ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்த கிராம பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    மருதுறை ஊராட்சிக்குட்பட்ட சின்ன புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் தனியார் பனியன் நிறுவன சூப்பர்வைசர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.மேலும் மருதுறை ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 10 அடி தூரத்தில் உள்ள நொய்யல் ஆற்றை கடந்தால் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கத்தொழுவு ஊராட்சி கிராம பகுதிகள் ஏராளமாக உள்ளன.

    இந்த நிலையில் கடந்த வாரம் சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து மருதுறை ஊராட்சி கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி காங்கயம் போலீசார் தற்போது மருதுறை பஸ் நிறுத்தத்தில் பட்டீஸ்வரர் கோவில் முன்புறம் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸ் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.

    இதில் 24 மணி நேரமும் போலீசார் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து இருசக்கர, கனரக வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் டிரைவரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதனையடுத்து தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் வனத்துறையினர் லாரி ஓட்டுனரை தாக்கிய காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு லாரி ஓட்டுனரை வனத்துறையினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

    • போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருப்பதற்காகவும் அக்கம், பக்கம் கண்காணிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை ஆவடி சரக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

    இதற்காக போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து சைக்கிளில் சென்று கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதுபோல இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பி வருவோர், வெளியூரில் இருந்து வீடு திரும்புவோர்களிடம் சென்று செயின் பறிப்பு திருடர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தி வீடுவரை சென்று விட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவடி உதவி கமிஷனர் புருசோத்தமன் இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு அருணாச்சல ராஜா மற்றும் போலீசார் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளம் உள்ளிட்ட துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.
    • கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்ல அனுமதி அளிப்பதாக ரவி அருணன் தெரிவித்துள்ளார்.

    கடையம்:

    அம்பை மற்றும் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை ஆகிய சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.

    ஒவ்வொரு சோதனை சாவடிகளுக்கும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அங்கு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து தான் அனுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இருந்தும் கூட எல்லா சோதனை சாவடிகளிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக எடையுடன் அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்வதற்கும் அனுமதி அளிக்கின்றனர்.

    இதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்படாமலேயே வாகனங்களை அனுப்புவது குறித்தான வீடியோ ஆதாரங்கள் அனைத்து அதி காரிகளுக்கும் அனுப்பப் படும்.

    அதன் பிறகும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய புகாரை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் புளியரைசோதனை சாவடிக்கு அப்பால் முன் அறிவிப்பின்றி ஒரு நாள் திடீர் மறியல் செய்வோம்.

    ஒரு யூனிட் கனிம வளம் 4.5 டன் எடை இருக்கும். வாகனத்தில் ஏற்றப்பட்ட கனிம பொருட்களின் உயரம், அகலம், நீளம் அனைத்தையும் சரியாக அளந்தாலே அவை எவ்வளவு டன் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.

    இதன் மூலம் 3 யூனிட்டுக்கு 'பாஸ்'வாங்கி கொண்டு 13 யூனிட் வரை கனிமங்களை ஏற்றிச் செல்வதும் நிரூபனம் ஆகும்.

    இவ்வாறு அடிக்கடி சோதனை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அரசினுடைய வருவாய் இழப்பை தடுக்கும் வகையில் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    எங்களின் நடவடிக்கை களை ஒடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டால் அரசின் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்திற்காக சிறை செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது.
    • தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது. இதனை தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி துணை சூப்பிரண்டு ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை, கொள்ளுகாரன் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி சென்னை சாலை கொள்ளு காரன் குட்டை பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

    • தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
    • மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    2023 புத்தாண்டு பாதுகாப்பு முன்னிட்டு கடலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர் கள், சிறப்பு உதவியாளர்கள், மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்.

    காவல்துறை வாகனங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். முக்கியமான இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். தங்கும் இடங்களில் காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். கோவில்கள், தேவால யங்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களான தேவனாம்ப ட்டினம் வெள்ளி கடற்கரை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மதுஅருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    • கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
    • அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பொன்வேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கால்நடைகள், வாத்து, கோழிகள், முட்டைகள், இறைச்சி, கோழி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை கால்நடை நோய் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சத்தியநாராயணன் புளியரை சோதனை சாவடிக்கு திடீரென நேரில் வந்து பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளிப்பதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது கால்நடை டாக்டர்கள் ஜெயபால்ராஜா, செல்வராணி, கால்நடை ஆய்வாளர் தினேஷ், கால்நடை பராமரிப்பு உதவி யாளர் லூர்து பிரான்சிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கோவை மற்றும் பொள்ளாச்சி தாலுகாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல்சரக பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை டி.எஸ். பி., தேன்மொழிவேல் தலைமையில் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் இரவு பகலாக வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் தளி காவல் சரக பகுதியில் பள்ளபாளையம் அருகே உடுமலை- மூணாறு சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாகனங்களை தணிக்கை செய்தும் அதில் செல்கின்ற நபர்கள் குறித்த விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே சோதனைச்சாவடி இருந்தும் கடத்தல் கும்பலை தப்ப விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் உயரமான கண்ணாடி இருக்கும். நீர் மிடுக்காக உள்ளீரா? என்பதை சுட்டிக் காட்டவே அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும். ஆனால் இன்று மிடுக்காக இருக்க கூடிய போலீசார் திண்டுக்கல்லில் கூன் வளைந்து காணப்படுகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

    முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோது நெரிசலான ஒரு இடத்தில் ஒரே ஒரு போலீஸ் மட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காமராஜர் வந்த கார் வந்தது. இதுவும் நெரிசலில் சிக்கியது.

    உடனே காரை விட்டு இறங்கிய காமராஜர் நெரிசலை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க உத்தரவிட்டார். அரசு பணம் விரையமாக கூடாது என்பதை கருதி ஓய்வு எடுக்கும் போலீசாருக்கு வேலை வழங்கினார். ஆனால் இன்று திண்டுக்கல் நகரில் ஏராளமான போலீசார் ஓய்வு எடுத்துக் கொண்டு தண்ட சம்பளம் வாங்குகின்றனர்.

    குறிப்பாக நேற்று இரவு சுமார் 7.05 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் 35 லிட்டர் கொண்ட கேனை பின்புறம் வைத்துக் கொண்டு வேகமாக வந்தார். எஸ்.எம்.பி.எம். வளைவில் ஜி.டி.என். சாலையை நோக்கி திரும்பினார்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் அந்த நபர் புகுந்தார். உடனே அங்கு உள்ளவர்கள் அவரை கண்டித்தனர். ஆனால் அவர் படபடப்புடன் காணப்பட்டார். அப்போதே மக்களுக்கு தெரிந்தது இவர் ஏதோ ஒன்றை கடத்தி வருகிறார் என்று.

    உடனே அங்குள்ளவர்கள் அந்த பகுதியில் வாகன சோதனை சாவடி அமைந்துள்ள போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றனர். உடனே அந்த நபரும் வாங்க போலீசாரிடம் போகலாம் என்று கூறி மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்றார். உடனே அந்த நபரை அங்குள்ளவர்கள் துரத்திச் சென்றனர். ஆனால் வாகன சோதனைச் சாவடி இருந்தும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். போலீசாரும் அதனை கண்டு கொள்ளவில்லை.

    உடனே பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் இந்த பகுதி வழியாக கடத்தல் காரர் சென்றார். நீங்கள் ஏன் அதை தடுக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு அங்கு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் இந்த வழியாக யாரும் வரவில்லை. நீங்கள் பொய் சொல்லாதீர்கள் என்று தெரிவித்தனர். பொதுமக்கள் எவ்வளவோ தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை. இது போன்றுதான் ஏராளமான கடத்தல் கும்பலை இந்த சோதனைச்சாவடியில் போலீசார் தப்ப விடுகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஹெல்மெட் அணியாமல் இருந்திருந்தால் போலீசார் சந்தேகத்துடன் வந்த நபரை பிடித்திருக்க வாய்ப்பு உள்ளது. ஹெல்மெட் அணிவதால் இது போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்கத்தான் செய்யும். சாதாரண ஏழை மக்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தால் மட்டும் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனே பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர். இது போன்ற கடத்தல் கும்பலுக்கு மட்டும் உடந்தையாக இருந்து தப்ப விடுகின்றனர். இதற்கு பொறுப்பாக இருக்கும் அந்த தெய்வம்தான் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே ஜி.டி.என். சாலை எம்.எஸ்.பி. பள்ளி அருகே ஒரு வேகத்தடை உள்ளது.

    இது போதாத குறைக்கு ஆங்காங்கே குடிநீர் குழாய் பதிக்க தோண்டுகிறோம் என்று கூறி பலர் பல வேகத்தடையை உருவாக்கியுள்ளனர். எனவே இந்த இடத்தில் போலீஸ் சோதனைச்சாவடி தேவையா? என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.

    இந்த பகுதியில் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் போதும். போக்குவரத்து நெரிசல் எங்கு அதிகம் உள்ளதோ அந்த இடத்தில் ஒழுங்குபடுத்த செல்லலாம்.

    இது போன்று மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் போலீசார் பணியில் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

    எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த வி‌ஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி கடத்தல் கும்பலை தப்ப விட்ட போலீசார் யார்? அந்த நேரத்தில் பணியில் இருந்தவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×