search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனைச்சாவடி இருந்தும் பயனில்லை- கடத்தல் கும்பலை தப்ப விட்ட போலீசார்
    X

    சோதனைச்சாவடி இருந்தும் பயனில்லை- கடத்தல் கும்பலை தப்ப விட்ட போலீசார்

    திண்டுக்கல் அருகே சோதனைச்சாவடி இருந்தும் கடத்தல் கும்பலை தப்ப விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் உயரமான கண்ணாடி இருக்கும். நீர் மிடுக்காக உள்ளீரா? என்பதை சுட்டிக் காட்டவே அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும். ஆனால் இன்று மிடுக்காக இருக்க கூடிய போலீசார் திண்டுக்கல்லில் கூன் வளைந்து காணப்படுகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

    முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோது நெரிசலான ஒரு இடத்தில் ஒரே ஒரு போலீஸ் மட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காமராஜர் வந்த கார் வந்தது. இதுவும் நெரிசலில் சிக்கியது.

    உடனே காரை விட்டு இறங்கிய காமராஜர் நெரிசலை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க உத்தரவிட்டார். அரசு பணம் விரையமாக கூடாது என்பதை கருதி ஓய்வு எடுக்கும் போலீசாருக்கு வேலை வழங்கினார். ஆனால் இன்று திண்டுக்கல் நகரில் ஏராளமான போலீசார் ஓய்வு எடுத்துக் கொண்டு தண்ட சம்பளம் வாங்குகின்றனர்.

    குறிப்பாக நேற்று இரவு சுமார் 7.05 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் 35 லிட்டர் கொண்ட கேனை பின்புறம் வைத்துக் கொண்டு வேகமாக வந்தார். எஸ்.எம்.பி.எம். வளைவில் ஜி.டி.என். சாலையை நோக்கி திரும்பினார்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் அந்த நபர் புகுந்தார். உடனே அங்கு உள்ளவர்கள் அவரை கண்டித்தனர். ஆனால் அவர் படபடப்புடன் காணப்பட்டார். அப்போதே மக்களுக்கு தெரிந்தது இவர் ஏதோ ஒன்றை கடத்தி வருகிறார் என்று.

    உடனே அங்குள்ளவர்கள் அந்த பகுதியில் வாகன சோதனை சாவடி அமைந்துள்ள போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றனர். உடனே அந்த நபரும் வாங்க போலீசாரிடம் போகலாம் என்று கூறி மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்றார். உடனே அந்த நபரை அங்குள்ளவர்கள் துரத்திச் சென்றனர். ஆனால் வாகன சோதனைச் சாவடி இருந்தும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். போலீசாரும் அதனை கண்டு கொள்ளவில்லை.

    உடனே பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் இந்த பகுதி வழியாக கடத்தல் காரர் சென்றார். நீங்கள் ஏன் அதை தடுக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு அங்கு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் இந்த வழியாக யாரும் வரவில்லை. நீங்கள் பொய் சொல்லாதீர்கள் என்று தெரிவித்தனர். பொதுமக்கள் எவ்வளவோ தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை. இது போன்றுதான் ஏராளமான கடத்தல் கும்பலை இந்த சோதனைச்சாவடியில் போலீசார் தப்ப விடுகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஹெல்மெட் அணியாமல் இருந்திருந்தால் போலீசார் சந்தேகத்துடன் வந்த நபரை பிடித்திருக்க வாய்ப்பு உள்ளது. ஹெல்மெட் அணிவதால் இது போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்கத்தான் செய்யும். சாதாரண ஏழை மக்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தால் மட்டும் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனே பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர். இது போன்ற கடத்தல் கும்பலுக்கு மட்டும் உடந்தையாக இருந்து தப்ப விடுகின்றனர். இதற்கு பொறுப்பாக இருக்கும் அந்த தெய்வம்தான் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே ஜி.டி.என். சாலை எம்.எஸ்.பி. பள்ளி அருகே ஒரு வேகத்தடை உள்ளது.

    இது போதாத குறைக்கு ஆங்காங்கே குடிநீர் குழாய் பதிக்க தோண்டுகிறோம் என்று கூறி பலர் பல வேகத்தடையை உருவாக்கியுள்ளனர். எனவே இந்த இடத்தில் போலீஸ் சோதனைச்சாவடி தேவையா? என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.

    இந்த பகுதியில் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் போதும். போக்குவரத்து நெரிசல் எங்கு அதிகம் உள்ளதோ அந்த இடத்தில் ஒழுங்குபடுத்த செல்லலாம்.

    இது போன்று மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் போலீசார் பணியில் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

    எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த வி‌ஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி கடத்தல் கும்பலை தப்ப விட்ட போலீசார் யார்? அந்த நேரத்தில் பணியில் இருந்தவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×