search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றச்சம்பவங்களை தடுக்க மருதுறையில் போலீஸ் சோதனை சாவடி அமைப்பு
    X

    கோப்பு படம்.

    குற்றச்சம்பவங்களை தடுக்க மருதுறையில் போலீஸ் சோதனை சாவடி அமைப்பு

    • வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார்.
    • உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதுறை ஊராட்சி உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள இந்த ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்த கிராம பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    மருதுறை ஊராட்சிக்குட்பட்ட சின்ன புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் தனியார் பனியன் நிறுவன சூப்பர்வைசர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.மேலும் மருதுறை ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 10 அடி தூரத்தில் உள்ள நொய்யல் ஆற்றை கடந்தால் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கத்தொழுவு ஊராட்சி கிராம பகுதிகள் ஏராளமாக உள்ளன.

    இந்த நிலையில் கடந்த வாரம் சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து மருதுறை ஊராட்சி கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி காங்கயம் போலீசார் தற்போது மருதுறை பஸ் நிறுத்தத்தில் பட்டீஸ்வரர் கோவில் முன்புறம் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸ் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.

    இதில் 24 மணி நேரமும் போலீசார் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து இருசக்கர, கனரக வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×