search icon
என் மலர்tooltip icon
    • ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
    • திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரங்கநாதன்(வயது 42) ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் இவர் மீது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஆறுமுகம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதனையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் மற்றும் முனிவாழையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் காவல் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம்- சேலம் மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 65), இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்குசெட்டி பாளையம் சிற்றரசு அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்தார்.அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஏழுமலை மனைவி வெள்ளச்சி (வயது 60), உளுந்தம்பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில், புதுவை சாராயம் விற்பனை செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தனர்.
    • தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இன்று காலை திருமாணிக்குழி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமாணிக்குழியை சேர்ந்த ராஜாங்கம், செல்வம், வெள்ளிகண்ணு, நம்பியார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான போலீசார் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் முதுநகர் பென்சனர் தெருவை சேர்ந்த புகழேந்தி (வயது 40) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுடன், ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மான் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும்.
    • அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சிக் கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருக்கின்றன. அவைகளில் ஒரு மான் நீண்ட நாட்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் வந்தது. சில நாட்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும். அவ்வாறு நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற மான் இன்று அதிகா லையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.

    அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது. இதனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த செஞ்சி வனத்துறை வனச்சரகர் வெங்கடேசன் தலைமை யிலான வனவர்கள் மானை பக்குவமாக பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் வந்த மானை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • உளுந்தூர்பேட்டை அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
    • தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மது குடித்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவள்ளுவர் மாவட்டம் பெண்ணாடம் ஊத்துக்கோட்டை சாவடித் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). சம்பவத்தன்று தினேஷ்குமார் ஊத்துக்கோட்டை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் ெசன்னை நோக்கி சென்றார். அப்போ து உளுந்தூர்பேட்டை பரிக்கல் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மது குடித்து உள்ளார்.

    இதனையடுத்து மது போதையில் இருந்த தினேஷ்குமார் அந்த வழி யாக சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விருத்தாசலம் ரெயிவே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ரெயில்வே போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர்.
    • ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாப்புலியூர் குப்பன்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சித்திரவேல், ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
    • கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவியர்களுக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் சாதனைகள் படைக்க ஏதுவாக தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டா, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 24-ந்தேதி காலை 7 மணி அளவில் மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்பு ரத்தில் நடைபெறவுள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 24-ந்தேதி வரும் மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, போனேபைய்டு சான்றிதழ், ஆகிய படிவங்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டிவனத்தில் சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து ஒருவர் பலியானார். இது தொடர்பாக திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிகோடி தெருவைச் சேர்ந்த மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டிவனம் தீர்த்த குளம் மேம்பாலம் அருகே, திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட முற்பட்ட தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் 15 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் கிடங்கல் ஏரிக்கரை அருகே சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 12 லிட்டர் சராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழங்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விஜயகுமார் மனைவி ரஞ்சிதா உள்பட 5 பேர் நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையில் பொன்னையன் என்பவருக்கு சொந்தமான நாட்டு சர்க்கரை அரைக்கும் ஆலை உள்ளது. இங்கு கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி ரஞ்சிதா (23) உள்பட 5 பேர் நேற்று நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரஞ்சிதா ஆலையில் தேங்கிய குப்பைகளை ஆலையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கொட்டு வதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ரஞ்சிதாவின் வலது கையில் கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ரஞ்சிதாவை அருகி லிரு ந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 46 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 102 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 18 மனுக்களும், இதர மனுக்கள் 157 ஆக மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நியாய விலைக்கடையின் பணியாளர்கள் மற்றும் எடையாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும், பணிபுரி ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிட ஆணையிடப்ப ட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழுதூர் நியாய விலைக்கடை விற்பனை யாளருக்கு முதல்பரிசு ரூ.4,000 மற்றும் திருமுட்டம் நியாய விலைக்கடை விற்பனையாளாருக்கு   2-ம் பரிசு ரூ.3,000 மற்றும் குறிஞ்சிப்பாடி நியாயவிலைக்கடை எடையாளருக்கு முதல்பரிசு ரூ.3,000 மற்றும் வேப்பூர் நியாய விலைகடை எடையாளருக்கு 2 -ம் பரிசு ரூ.2,000 என பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் விழுப்புரம் கோட்த்தின் மூலம் கடலூர் பனங்காட்டு பகுதி ஐ-இல் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 240 வீடுகளில் பயனாளி பங்களிப்பு தொகை முழுவதும் செலுத்திய 9 பயனாளிகளுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் வீடுகளு க்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×