search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார்"

    சாலையில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு பொன்னமராவதி பெண்ணின் நேர்மையை பாராட்டிய போலீசார்

    பொன்னமராவதி,  

    பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சி காடம்பட்டியை சேர்ந்தவர் கோகிலா.

    கூலித்தொழிலாளியான இவர் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.43,500 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பொன்னமராவதி சென்றுள்ளார்.

    அப்போது ஏனாதி அருகே இரு சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்த கூடை தவறி சாலையில் விழுந்துள்ளது. இதைக்கவனிக்காத கோகிலா பொன்னமராவதி சென்று பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இந்நிலையில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அமுதா என்பவர் பணி முடித்து அச்சாலையில் வந்த போது சாலையில் கிடந்த பணம் உள்ள கூடையை எடுத்து வந்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து கூடையில் இருந்த ரசீது மூலம் உரியவரை கண்டறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோகிலாவிடம் பணத்தை ஒப்படைத்தார்.

    மேலும் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அமுதாவின் நேர்மையை பாராட்டி போலீசார் கௌரவித்தனர்.

    • தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
    • தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் தான். தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

    ஜவுளி கடைகளில் கூட்டம்

    தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    அலுவலக வேலைக்கு செல்பவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு, குறு நிறுவனங்களில் தொழில் செய்பவர்களுக்கு 1-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 1-ந் தேதி முதல் ஜவுளி எடுக்க வருபவரின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.

    விற்பனைக்கு குவிப்பு

    பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை உள்ளிட்டவைகள் சூரத்தில் இருந்தும், வேஷ்டி, துண்டு, டவல், பனியன், ஜட்டி உள்ளிட்டவை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து அதிக அளவில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பட்டு சேலை ரகங்கள் காஞ்சிபுரம் திருப்புவனத்தில் இருந்தும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

    இனிவரும் நாட்களில் தீபாவளி விற்பனை களை கட்டுமென்பதால் அதற்கான ஏற்பாடுகளில் கடை உரிமையாளர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதே போல தீபாவளி ஜவுளி விற்பனை ஒட்டி சேலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் 500 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    10 கோபுரங்கள்

    கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளி திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை (5-ந் தேதி) முதல் தீபாவளி பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர் காவல் படையை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் ஸ்பீக்கர் செட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து போலீசாருக்கு ஒத்துழைத்து அளித்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
    • கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு துணி, பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி செல்வர். பண்டிகை காலங்களில் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் சில நாட்களாக திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம் , காதர் பேட்டை உட்பட மாநகரின் பிரதான ரோடு, முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் தற்காலிக துணிக்கடைகள், பலகார கடைகள், பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தவும் உள்ளனர்.தற்போது இருந்தே மக்கள் கூடும் இடங்கள், பஸ்களில் வழிப்பறி திருடர்கள், பிக்பாக்கெட் ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மப்டியில் ரோந்து சென்று வருகின்றனர்.

    • முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்கள் பற்றிய முழு விபரம் அறிந்து, அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும்.

    முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். போலீசார் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.

    மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை
    • உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்வதற்கு தூண்டிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதற்கு காரணமான டாக்டர்களை போலீசார் கைது செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தி வரு கிறது. கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதிய விடுப்பு கொடுத்தும், போதிய கவுன்சிலிங் கொடுத்தும் வரும் காலங்களில் இத்த கைய சம்பவங்கள் நடை பெறுவதை தவிர்க்க வழிவகுக்க வேண்டும். மேலும் போலீசார் குற்றம் செய்தவர்கள் தப்பிக்காத அளவுக்கு பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 2 வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்ட வாலிபர்கள், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

    அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அதனை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
    • தீவிர சோதனை

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.
    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 53), கட்டிட தொழிலாளி.

    இவர் தனது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் சாய்ந்து கிடந்த ரப்பர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக சென்றார். அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.

    இதை பார்க்காமல் கிறிஸ்துராஜ் மரத்தின் கிளைகளை வெட்டும்போது இவர் மீது விஷ வண்டுகள் கொட்டியது. இதில் இவரின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். இவரது மகன் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.

    அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • 8 இடங்களில் கரைக்கப்படுகிறது
    • போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விநா யகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகள் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது. இன்று 3-வது நாளாக விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.

    இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. நாகர் கோவில் நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சங்குத்துறை பீச்சில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு எடுத்து வரப்பட்டது. இங்கிருந்து இன்று மாலை ஊர்வலம் புறப்படுகிறது. ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.

    குருந்தன்கோடு ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் ராதாகிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும், தக்கலை வைகுண்டபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும் கரைக்கப்படுகிறது. முஞ்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலைகள் ஐந்து கண்ணு கலுங்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேங்காய் பட்டினம் கடலிலும், கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட விநாயகர் சிலைகள் கூனாலுமூட்டில் இருந்து ஊர்வலமாக செல்லப் பட்டு மிடாலம் கடலிலும், குழித்துறை நகரத்தில் உள்ள விநாயகர் சிலைகள் பம்பத்திலி ருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழித்துறை ஆற்றிலும், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திற்பரப்பு அரு வியில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படு வதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை கொண்டு செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் அந்த நேரத்தில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த 35 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் தொழில் அதிபர் குவைத் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரில் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் வயல்வெளியில் விதை தூவும் விநாயகர் விவசாயி, புல்லட் பைக் ஓட்டும் விநாயகர், ஹெவி வெயிட் சாம்பியன் விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.

    ஊர்வலத்தில் பிரமாண்ட சோபக்கிருது விநாயகர் முன்னே சென் றது. இந்த வாகனத்தில் சாரதியாக சமூக சேவகர் ராமராஜ் இருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன

    இறுதியில் ஆகம விதி முறைப்படி ஐ.என்.டி.யூ. சி. நகர் முன்புள்ள புதியா தியார் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3

    டி.எஸ்.பி.க்கள் 10 ஆய்வா ளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மூன்று வேலை அன்ன தானம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ஏழை எளியவர்களுக்கு சீர்வரிசைகளோடு இலவச திருமணங்கள், தொழிலாளி களுக்கு இலவச சைக்கிள் கள் வழங்கி பக்தர்கள் வியக்கும் வகையில் வீதி உலாவை நடத்திய மன்ற தலைவரும், சமூக சேவ கருமான ராமராஜூக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    • குளச்சல் போலீசார் நடவடிக்கை

    குளச்சல் :

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் காரவிளையை சேர்ந்தவர் லாசர் (வயது 62). சோடா கம்பெனி நடத்தி வந்த இவர், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரசில் விவசாய அணி துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். சம்பவத் தன்று நண்பர்களான குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப் பன் (65), கூத்தாவிளை தேவதாஸ் (48) ஆகியோரு டன் குளச்சலில் உள்ள டீக்கடை அருகே நின்று லாசர் பேசிக்கொண்டி ருந்தார்.

    அப்போது அவர்க ளுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் செல்லப்பன், தேவதாஸ் ஆத்திரத்தில் லாசரை தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்ப பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்லப்பன், தேவதாஸ் ஆகியோரை தேடிவந்தனர். இந்த நிலையில் தேவதாஸ், குளச்சல் போலீஸ் நிலை யத்தில் சரணடைந்தார்.அவரை போலீசார் இரணி யல் கோர்ட்டில் ஆஜப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாகி இருந்த செல்லப்பனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அஞ்சுகிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார் அங்கு சென்று செல்லப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×