search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக இன்று விநாயகர் சிலை ஊர்வலம்
    X

    குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக இன்று விநாயகர் சிலை ஊர்வலம்

    • 8 இடங்களில் கரைக்கப்படுகிறது
    • போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விநா யகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகள் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது. இன்று 3-வது நாளாக விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.

    இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. நாகர் கோவில் நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சங்குத்துறை பீச்சில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு எடுத்து வரப்பட்டது. இங்கிருந்து இன்று மாலை ஊர்வலம் புறப்படுகிறது. ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.

    குருந்தன்கோடு ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் ராதாகிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும், தக்கலை வைகுண்டபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும் கரைக்கப்படுகிறது. முஞ்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலைகள் ஐந்து கண்ணு கலுங்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேங்காய் பட்டினம் கடலிலும், கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட விநாயகர் சிலைகள் கூனாலுமூட்டில் இருந்து ஊர்வலமாக செல்லப் பட்டு மிடாலம் கடலிலும், குழித்துறை நகரத்தில் உள்ள விநாயகர் சிலைகள் பம்பத்திலி ருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழித்துறை ஆற்றிலும், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திற்பரப்பு அரு வியில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படு வதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை கொண்டு செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் அந்த நேரத்தில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    Next Story
    ×