search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்கீரன் கோபால்"

    சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுதலை செய்வதாக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NakkeeranGopal
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கவர்னர் மாளிகை சார்பில், செயலாளர் ராஜகோபால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஜாம்பஜார் போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய மாடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. வெளி ஆட்கள் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.



    இந்த நிலையில் மதியம் நக்கீரன் கோபாலை பார்ப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவக்குமார் என்ற வக்கீல் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.

    நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தினர். இதற்காக 12.45 மணி அளவில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.

    நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப இயலாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த போரில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்து என்.ராம் அவர்களுக்கும், தனக்காக கைதாகி உள்ள வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் இருந்ததால் தான் தான் விடுதலை ஆனதாகவும் நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார்.#NakkeeranGopal 
    ஆளுநரை பணியில் தலையிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NakkheeranGopal
    சென்னை:

    நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியானதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பணியில் தலையிடுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நக்கீரன் கோபால் தரப்பில் இருந்து முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நக்கீரன் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வழக்குவிசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையால் ஆளுநர் பணியில் என்ன இடையூறு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும் எனவும், காலதாமதாக நடவடிக்கை எடுப்பதற்கான உள்நோக்கம் என்ன? எனவும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

    இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஊடக பிரதிநிதியாக ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தவறான உதாரணம் ஆகிவிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #NakkheeranGopal
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ளார். அப்போது நக்கீரன் கோபால் கைது தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளது. #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit
    சென்னை:

    பேராசிரியை நிர்மலாதேவி கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை, கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றார்.


    இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது துணைவேந்தர் நியமன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நக்கீரன் கோபால் கைது தொடர்பாகவும் பேச வாய்ப்பு உள்ளது. #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit
    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மற்றும் வைகோ ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். #NakkeeranGopal #MKStalin
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதேபோல் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வைகோவையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அபபோது, நக்கீரன் கோபால் மீது பாய்ந்துள்ள சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது ஏன் பாயவில்லை? அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என கேள்வி எழுப்பினார். நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றும் கூறினார். #NakkeeranGopal #MKStalin
    ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்துள்ளனர். #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

    அ.தி.மு.க ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்குப் புறம்பாக முட்டுக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் “பொம்மை” எடப்பாடி பழனிசாமி அரசைப்பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப்புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.



    ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தையே கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஆளுநரே அவரை சந்தித்துப் பேசுகிறார். இன்னொரு பக்கம் “பாசிச பா.ஜ.க” என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?

    தமிழ்நாடு என்ன ஜனநாயக நாடா என்றே கேட்கத்தோன்றுகிறது. ஊழல் அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

    பொம்மை அரசை வைத்துக் கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத்தூண்டும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநில ஆளுநரும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு நேரடியாகவே பா.ஜ.க. வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

    பொறுப்பான மாநில ஆளுநர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதலமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அதுவும் அரசியல் சட்டப் பதவியை வகிப்பவருக்கு அழகா?

    ஆகவே, கைது செய்யப்பட்ட திரு நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருந்து வருகிறது. அதனால் தான் நக்கீரன் கோபாலை விமான நிலையத்தின் உள்ளேயே போலீசார் கைது செய்து இருக்கிறார்.

    பாஷிச அதிகாரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நக்கீரன் கோபாலுக்கு தெரியும். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் கவர்னர் ஈடுபட்டு வருகிறார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் உத்தரவு போட முடியாது. நக்கீரன் கோபாலை கைது செய்யக்கோரி கவர்னர் தான் சொல்லி இருக்கிறார்.

    நக்கீரன் கோபாலை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசையும், காவல்துறையையும் கவர்னர் தனக்காக பயன்படுத்துகிறார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும்.

    அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

    தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது.

    இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    தமிழக ஆளுநர் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    ஆளுநர் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

    பல்கலைகழகத்துணை வேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற அய்யம் நமக்கு எழுகிறது.

    தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப்பற்றி பிரதமரிடமே சென்று ஊடக வியலாளர்கள் முறையிட்டு உள்ளனர்.

    இந்தச் சூழலில் பத்திரிக்கை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும். இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    பத்திரிகை சுதந்திரத்திற்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. நக்கீரன் கோபாலை தமிழக காவல்துறை கைது செய்து, வழக்கும் பதிவு செய்திருக்கிறது. இது கண்டிக்கத் தக்கது.

    அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும். பத்திரிக்கையாளர்களை அடக்கினால் அது பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் செயலாகும்.

    நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்லுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

    நக்கீரன் கோபாலின் கைதினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு விரைந்தார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்கவேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நடக்கின்ற நடவடிக்கைகளை பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா? பத்திரிகையாளர்களையும், கருத்துக்கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்படாதவையாகும்.

    அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்கு இது அழகல்ல; கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கோபால் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையாக அமைந்துள்ளது.

    நாட்டின் நீதி பரிபாலன சபையான உயர்நீதி மன்றத்தையும், காவல் துறையையும் மிக மோசமாக விமர்சித்த பா.ஜ.கவின் தேசிய செய லாளர் எச். ராஜாவை கைது செய்யாத காவல்துறை, ஆளுநர் அலுவலகம் புகார் அளித்த உடனேயே நக்கீரன் கோபாலை கைதுச் செய்திருப்பது தமிழக அரசின் பாரபட்சப் போக்கை அம்பலப்டுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுநரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான். ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தால் அது அவரது பணியில் தலையிடுவதாக குறிப்பிடுவது தமிழகத்தில் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முத்தரசன் கூறியதாவது:-

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை மிக வன்மையாக கண்டிப்பதுடன் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, உடனடியாக அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ‘ஜனநாயக குரலை அடக்க நினைக்கும் ஆளுநர் மற்றும் மாநில அரசின் செயலை ஊடகத் துறையினரும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
    ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


    நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நக்கீரன் கோபால்  கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran
    சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். #NakkeeranGopal #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்ட தகவல் அறிந்ததும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைந்து சென்றார்.

    அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உடனே வைகோ வக்கீல் என்ற முறையில் என்னை உள்ளே சென்று நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் அவரது கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடந்து வருவதால் தற்போது அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

    இதனால் வைகோ ஆவேசமானார். போலீஸ் உயர்அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்றாலும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.


    இதனால் மேலும் ஆவேசமாக வைகோ அந்த இடத்திலேயே போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீஸ் அதிகாரிகள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்கவில்லை.

    இதைத் தொடர்ந்து 11.30 மணியளவில் வைகோ கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். #NakkeeranGopal #MDMK #Vaiko
    அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். #NakkeeranGopal
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.

    அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலை கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.


    இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவர்னர் மாளிகை சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாகவே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ் அவுஸ் ஜானிஜான்கான் தெருவில் நக்கீரன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது 124-ஏ ஐ.பி.சி. (ராஜதுரோக குற்றம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.#NakkeeranGopal 

    ×