search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judicial custody"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்வயது பழங்குடியினப் பெண் டாக்டரை சாதி வன்கொடுமைக்கு உட்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கைதான 3 பெண் டாக்டர்களுக்கு ஜூன் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் பாயல் டாட்வி(26). பழங்குடியினத்தை சேர்ந்த இவரை சாதியின் பேரால் இங்கு உடன் பணியாற்றும் சில டாக்டர்கள் தொடர்ந்து அவமானகரமாக இழிவுப்படுத்தி பேசியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் சக டாக்டர்களின் கொடுமைகளையும் இழிச்சொற்களையும் சகித்துக்கொள்ள முடியாத பாயல் டாட்வி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆஸ்டல் அறையில் கடந்த 22-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் டாக்டர்களும் சேர்ந்து தனது மனைவியை கொன்று விட்டதாக பாயல் டாட்வியின் கணவர் சல்மான் குற்றம்சாட்டியிருந்தார். 

    அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உற்றார், உறவினர்களும் பழங்குடியின மக்கள் நலச்சங்கத்தினரும் வலியுறுத்தி வந்தனர். 

    இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து 8 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    பாயல் டாட்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் சிலரிடம் விசாரணை நடத்திய அக்ரிப்பாடா போலீசார், டாக்டர் பக்தி மெஹேரே என்பவரை 28-ம் தேதி கைது செய்தனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் மேலும் இரு டாக்டர்களான அன்க்கிட்டா கன்டேல்வால்,  ஹேமா அஹுஜா ஆகியோர் கைது நடவடிக்கைக்கு பயந்து மும்பை கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    எனினும், அவர்களது முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக மும்பை போலீசார் அன்க்கிட்டா கன்டேல்வால்,  ஹேமா அஹுஜா ஆகியோரை 29-ம் தேதி கைது செய்தனர். கைதான மூன்று டாக்டர்கள் மீதும் சாதி வன்கொடுமை தடுப்பு சட்டம், ‘ரேகிங்’ தடை சட்டம், தற்கொலைக்கு தூண்டிய சட்டப்பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 டாக்டர்களையும் 31ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இன்று அவர்கள் மூவரும் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 10-ம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
    பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. #YasinMalik
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

    பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர், டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    விசாரணை காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக்கை வரும் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.



    பாதுகாப்பு காரணங்கள் கருதி யாசின் மாலிக் தொடர்பான மறுவிசாரணையை டெல்லி திகார் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்த வேண்டும் என திகார் சிறை நிர்வாகத்தின் சார்பில் இன்று வலியுறுத்தியதால் இதுதொடர்பாக பதிலளிக்குமாறு யாசின் மாலிக் தரப்பு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. #YasinMalik #JKLFbanned #NIAremand #Tiharjail 
    உத்தர பிரதேசத்தில் பொதுத்தேர்வில் காப்பியடித்து பிடிபட்ட மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். #UPBoardExam
    முசாபர்நகர்:

    உத்தர  பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தேர்வில் காப்பியடிப்பதைத் தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று கண்காணித்தனர்.

    இவ்வாறு முசாபர்நகரில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது, அங்கு சில மாணவர்கள் மொத்தமாக சேர்ந்து காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த தேர்வு மையத்தின் கண்காணிப்பாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், காப்பியடித்த மாணவர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.



    மேலும், தேர்வு மையத்தில் இருந்து, விடைகள் எழுதப்பட்ட பேப்பர்கள், துப்பாக்கி மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். #UPBoardExam
    எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரின் நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    யாழ்ப்பாணம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 12ம் தேதி 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.



    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, 9 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து (நாளை வரை) நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நீதிமன்றக் காவல் முடிந்து நாளை மீண்டும் ஆஜர்படுத்தப்படும்போது, 9 பேரையும் நீதிமன்றம் விடுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #TNFishermen #SrilankanNavy
    பெங்களூருவில் இன்று கைதான கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியை 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #JanardhanReddy #judicialcustody
    பெங்களூரு:

    பொருளாதார அமலாக்கத்துறை பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக  நடத்திவந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
     
    கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர். இன்று பிற்பகல் ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி முன்னர் இன்று மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 24-ம் தேதிவரை ஜனார்த்தன ரெட்டியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #JanardhanReddy  #judicialcustody
    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBIDSP #DevenderKumar #DevenderKumarcustody
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய  சி.பி.ஐ.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.  ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை  ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று நடைபெற்ற மறுவிசாரணையின்போதும் ராகேஷ் அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிரபல தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.


    இந்நிலையில், கைதான டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை கடந்த 23-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.

    இதைதொடர்ந்து, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து தேவேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #CBIDSP #DevenderKumar #DevenderKumarcustody
    டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகனை 22-ம் தேதி காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. #AshishPandey #DelhiHyattRegency
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

    இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதைதொடர்ந்து,  இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில்  இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.

    ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். #AshishPandey  #DelhiHyattRegency
     
    ஜாமீன் கண்டிஷன்படி காவல் நிலையத்தில் ஆஜராகாததால் மீண்டும் கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #RowdyBinu
    திருவள்ளூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது சக கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது பினு உள்ளிட்ட சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அம்பத்தூர் துணை ஆணையர் முன்பு பினு சரண் அடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட பினு, ஜூன் மாதம் 21-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனவே, அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிக்கை அனுப்பினர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பினு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பினுவையும், கூட்டாளிகளையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது ரவுடி பினு மற்றும் கூட்டாளிகைள அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும், ஜாமீன் நிபந்தனையை மீறியதால் நீதிமன்றத்தின் மூலம் பினுவின் ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #RowdyBinu
    சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுதலை செய்வதாக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NakkeeranGopal
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கவர்னர் மாளிகை சார்பில், செயலாளர் ராஜகோபால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஜாம்பஜார் போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய மாடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. வெளி ஆட்கள் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.



    இந்த நிலையில் மதியம் நக்கீரன் கோபாலை பார்ப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவக்குமார் என்ற வக்கீல் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.

    நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தினர். இதற்காக 12.45 மணி அளவில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.

    நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப இயலாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த போரில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்து என்.ராம் அவர்களுக்கும், தனக்காக கைதாகி உள்ள வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் இருந்ததால் தான் தான் விடுதலை ஆனதாகவும் நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார்.#NakkeeranGopal 
    கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. #FrancoMulakkal #Judicialcustody
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
     
    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக  பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ முல்லக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் நகரில் உள்ள போப் பிரான்சிஸ் அரண்மனை அதிகாரிகள் அறிவித்தனர்.



    தொடர்ந்து மூன்று நாட்களாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு முல்லக்கல் சார்பில் கேரளா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவரது காவல் முடிவடைந்ததால் போலீசார் இன்று அவரை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவலை (14 நாட்கள்) வரும் 20-ம் தேதிவரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #FrancoMulakkal #Judicialcustody
    அவதூறாக பேசி கைதாகிய எம்.எல்.ஏ. கருணாஸ் மீது தொடரப்பட்ட கூடுதல் வழக்கு ஒன்றில் அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட மேலும் 2 வழக்குக கருணாஸ் மீது பதியப்பட்டன. அந்த வழக்கு குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையில், கூடுதலாக பதியப்பட்ட வழக்குகளில் ஒன்றான கொலை முயற்சி வழக்கில் கருணாசுக்கு நீதிமன்ற காவல் அளிக்க மறுத்த நீதிமன்றம், ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #Karunas
    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Karunas
    சென்னை:

    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். 

    மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இன்று காலை கருணாஸ் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் அழைத்துச் சென்ற அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து, அவர் எழும்பூரில் உள்ள 13வது நீதிபதி கோபிநாத் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸ் உடன் கைது செய்யப்பட்ட நெடுமாறன், கார்த்திக், செல்வநாயம் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்த நீதிபதி கோபிநாத், அவரை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    இந்நிலையில், கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். செல்வ நாயகம் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    பாதுகாப்பு கருதி கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Karunas 
    ×