search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "dharna"

  • மாரியப்ப பாண்டியன் ஊராட்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நீங்கள் வரக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார்.

  நெல்லை:

  பாளை யூனியன் ராமையன் பட்டி பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக மாரியப்ப பாண்டியன் என்பவர் இருந்து வருகிறார்.

  இவர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை யும் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் நெல்லை மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனருக்கு அளிப்பதற்காக வைத்திருந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

  ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு பஞ்சாயத்து துணைத்தலைவரான செல்வகுமார் மற்றும் என்னை முறையாக அழைக்கவில்லை.

  நாங்கள் இது குறித்து கேட்டபோது, பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நீங்கள் வரக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.எனவே ஊராட்சி மன்ற தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகார பேச்சை கண்டித்து நான் ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து இன்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்.

  இவ்வாறு அதில் கூறி யிருந்தார்.

  • மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  • நகரின் மையப்பகுதியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது.

  பல்லடம்:

  பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம்.

  இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

  இந்த நிலையில் மதுபானகடையை அகற்றக்கோரி நேற்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இது குறித்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது :- இந்த மதுபான கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. மதுபானம் வாங்கி குடித்துவிட்டு போதைதலைக்கேறி அருகில் உள்ள கடைகளின் முன்பு குடிமகன்கள் படுத்து விடுகின்றனர். மேலும் பலர் பெண்கள் வருவது கூட தெரியாமல் அங்கேயே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

  குடிமகன்கள் எந்தநேரமும் போதையில் நிற்பதால் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் பல்லடம்- செட்டிபாளையம் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் கடை முன்பு நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  இந்த மதுபானகடையை அகற்றகோரி 15 ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மதுபானகடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மதுபானகடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.

  மதுபானகடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த மதுபானகடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தார்.தாசில்தாரின் இந்த அறிவிப்பை உற்சாகமாக கைதட்டி வரவேற்ற பொதுமக்கள் அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

  மேலும் அந்தப் பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில் தாசில்தாரின் உத்தரவை மீறி மதியம் சுமார் 3 மணி அளவில் மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மீண்டும் அங்கு வந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலுக்கும் முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்எண்ணை கேனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் முத்தழகி என்பவர், தனது நிலத்தில் விவசாயம் செய்து வருவதும், அதற்காக அருகில் உள்ள மற்றொரு நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்து வருவதும், தற்போது அந்த நிலத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார். 

  இதனால் 2 ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே ஆழ்துளை கிணற்றிலிருந்து பயிர் செய்யக்கூடிய நிலத்திற்கு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்ததாக கூறினார். உடனே போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • கொரோனா சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டு நாககுமார் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
  • தான் குடியிருந்த வீட்டில் வைத்திருந்த தனது பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை வீட்டு உரிமையாளர் தரமறுக்கிறார்.

  அவினாசி:

  திருப்பூர் மாவட்டம் அவினாசி ரங்கா நகர் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது வீடு கமிட்டியார் காலனி பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நாககுமார் (வயது 50) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டு நாககுமார் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  இந்த நிலையில் நேற்று தான் குடியிருந்த வீட்டில் வைத்திருந்த தனது பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை வீட்டு உரிமையாளர் தரமறுக்கிறார் என்று நாககுமார் மற்றும் அவரது உறவினர்கள் குடியிருந்தவீட்டின் முன் தரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் பிரச்சனை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து தீர்வுகாணுங்கள் என்று கூறியதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

  • நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.

  இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.

  இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

  தர்ணா போராட்டம்

  எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

  இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • வங்கியின் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

  தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா்சம்மேளன துணைத் தலைவா்கோவிந்தன் தலைமை வகித்தாா்.

  போரா ட்டத்தைத் தொடங்கி வைத்து ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா்.

  இதில், நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வுதியம் வழங்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளின்படி கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

  அனைத்துத் தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தாமதமின்றி நடத்த வேண்டும்.

  வங்கி வாடிக்கையாளா்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

  நிறுத்திவைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

  கூட்டுறவு வங்கிகளில் அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

  பணியாற்றும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  முடிவில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாநிலச் செயலா் அன்பழகன் நிறைவுரையாற்றினாா்.

  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.
  • அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

  ஓமலூர்:

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.

  அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

  வரதட்சணை

  இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓம லூருக்கு வந்த மோகன்ராஜை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்ட தாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி 100 பவுன் நகை ரூ.20 லட்சம் பணம் வாங்கி வா என கூறியதாகவும் பவித்ரா மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்தி ருந்தார். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நேற்று முன்தினம் முதல் கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மோகன்ரா ஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

  வழக்கு பதிவு

  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீ சார் நேரில் சென்று விசா

  ரணை நடத்தினர். தொடர்ந்து பவித்ராவின் கணவர் மோகன்ராஜ், அவ ரது தந்தை முருகன், தாய் சாரதா என்கிற சத்தியா, உறவினர்கள் பூபதி, சவுமியா, செல்வி, பிரபு ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

  • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

  தர்ணா போராட்டம்

  இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும்

  மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது அவர்கள் கூறுகை யில், எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.720 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.320 என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்குகின்றனர்.

  மேலும் விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

  எங்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். பி.எப். பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது
  • கணவரை பிரிந்த நிலையில, தான் பழகி வந்த லாரி டிரைவர் வேறாரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக புகார்

  பெரம்பலூர்,

  பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு பெண் வந்தார். அங்கு அவர் தர்ணாவில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பெண் கூறுகையில், எனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தபோது, எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தார். மேலும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி நானும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். ஆனால், என்னை அந்த லாரி டிரைவர் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். அதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

  இது பற்றி அந்த லாரி டிரைவரிடம் கேட்டபோது அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது அவரிடம், ஏற்கனவே இது தொடர்பாக அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

  • 120 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக புகார்
  • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

  ஆம்பூர்:

  திருப்பூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் மஜிருலூம் கல்லூரி இயங்கி வருகிறது.

  இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

  இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.