search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.
    • சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4 ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. பீகாரில் மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் அது நடக்கவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு.க. அரசு நடத்தாது.

    தி.மு.க.விற்கு நீங்கள் தொடர்ந்து வாக்களித்து இருந்தால் உங்கள் உரிமையை நீங்கள் இழக்கப்படுவீர்கள். நோயாளிகள் உருவாகாத ஒரு சமூக சமுதாயத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறிய காங்கிரசுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் மு.க.ஸ்டாலின். காவிரிநதி நீரை கொடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் தோற்கடிக்கபடுவீர்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக பேசாத பாஜக தற்போது கச்சத்தீவை பற்றி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    பா.ஜ.க. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் அரசியல் ஆகும்.

    6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என்பதை மாற்றி 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.

    ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சீமான் வாக்கு சேகரித்தார்.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.
    • ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை போட்டியாக பார்க்கவில்லை என பா.ஜ.க. கூறுகிறது. போட்டியில் இல்லாதவனிடம் எதற்காக சின்னத்தைப் பறித்தீர்கள்? மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என பேசுவதே முட்டாள்தனம் என்றார்.

    • லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
    • இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் இன்று பிரசாரம் செய்தார்.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக எளிய பிள்ளைகளாகிய நாங்கள் உங்களை நாடி வந்துள்ளோம். எனவே இந்தமுறை மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

    இன்று நாட்டில் ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டது. லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    டிஜிட்டல் இந்தியா என்று கூறி மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்காமல் அலட்சியமாக செயல்படுபவர்களை கைது செய்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை அளிக்க வேண்டும்.

    தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள பா.ம.க., த.மா.கா.வுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எளிதாக சின்னம் கிடைத்துவிட்டது. நாங்கள் பா.ஜனதாவை எதிர்ப்பதாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு தராமல் முடக்கி வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். என் மீதான பயத்திலேயே இப்படி செய்துள்ளனர்.

    ஓட்டுப்பதிவு எந்திரத்தை கண்டுபிடித்த ஜப்பான் அதனை பயன்படுத்துவது இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தூக்கி எறிந்துவிட்டன.

    இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. அந்த எந்திரத்தை பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று ஜப்பான் கூறி இருக்கிறது.

    வாக்குப்பதிவு முடிந்து 41 நாள் கழித்துதான் எந்திரத்தில் பதிவான ஓட்டை எண்ணுகிறார்கள். இத்தனை நாட்களில் அதில் தில்லு முல்லு செய்ய முடியாதா? தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. லஞ்ச ஊழல் அழுக்கு எங்கள் மீது படிந்துவிடக்கூடாது என்பதால் தனித்தே களம் இறங்கி இருக்கிறோம்.

    மத்திய சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது.
    • அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாப்பூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது. அதனை தகர்த்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்று வரலாற்றை வாசித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

    40 தொகுதியிலும் நாம் மட்டுமே போட்டியில் உள்ளோம். போட்டியிட ஆள் இருக்கிறதா? என்று கேட்டவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லை.

    அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன். தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா? என் முன்னாடி நீங்கள் ரொம்ப சாதாரணம். உங்களுக்கு பிரதமர் ஓட்டு கேட்டு வருவார். உள்துறை மந்திரி வருவார். எனக்கு எல்லாமே நான்தான். அப்ப நான்தானே கெத்து.

    தமிழர்களுக்கு இந்த ஒரு நிலம்தான் உனக்கும் இருக்கு. அதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே.
    • இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    திண்டுக்கல்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.

    சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 சீட் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது.

    கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரஉள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.

    தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறோம்.

    பா.ஜ.க.வினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் டி.டி.வி.தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பா.ஜ.க.வுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். இரட்டை இலையை மீட்பதே லட்சியம் என்று கூறி வரும் தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் உள்ளார்.

    அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலமாக மாறி விட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல், புகைப்படம் என்று காமெடி பிராப்பர்ட்டி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மாலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
    • குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.

    மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.

    வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.

    தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
    • கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

    கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.

    அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.

    கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை.
    • என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.

    ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

    நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார்.

    அப்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்.

    "என் மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 

    • மைக் சின்னத்திற்கு பதிலாக படகு, கப்பல் சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை
    • இறுதியாக நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 'மைக்' சின்னம் ஒதுக்கியது

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.

    ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

    நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், 'ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு' என்ற பாடலுடன் சப்தமாக ஒலித்தது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்தனர். உடனே அந்த நபரும் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

    • கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மரியஜெனிபர் போட்டியிடுகிறார். விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (28-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

    நாளை காலை 9 மணிக்கு விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனையில், அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு அழகிய மண்டபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    11 மணிக்கு திங்கள்நகரிலும், 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×