search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி தொகுதி"

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.

    எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

    குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாள்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து நேற்று அவர் திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் விஜய் வசந்த் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகிறார். (அதனை வெளிப்படுத்தும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வடையை பொதுமக்களிடம் காண்பித்து, இதுதான் மோடி சுட்ட வடை என்றனர்). நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19-ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.

    ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பா.ஜனதா அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த பா.ஜனதா அரசு, அதானிக்கும்- அம்பானிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகிறது.

    ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்றுவாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும்.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் நாகர்கோவில் மாநகர வார்டுகளில் வாக்குகள் சேகரித்தார். பெருவிளை பள்ளிவாசல் அருகே இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசார பயணத்தை தொடங்கிய அவருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும், ஆளுயர மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் பார்வதிபுரம், ஆசாரிபள்ளம், எறும்புகாடு, மேலசூரங்குடி, குருசடி, கோணம், செட்டிகுளம், மறவன்குடியிருப்பு, இருளப்பபுரம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் பீச் ரோட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசார பயணத்தை நிறைவு செய்தார். அவருடன் மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக அய்யா வழி அன்பு கொடி மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் விஜய் வசந்த் பேசுகையில் கூறியதாவது:-

    எனது தந்தை வசந்தகுமார் மறைவிற்கு பிறகு அவரின் கனவுகளை தொடர்ந்து செய்வதற்கும், குமரி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் 2½ ஆண்டுகள் ஒலிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள். குமரியில் முடக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை பல்வேறு இடையூறுகளுக்கு இடையே கொண்டு வந்துள்ளேன். என் தந்தை இறுதி வரை குமரி மக்களுக்காகவே வாழ்ந்தார். இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைத்தார்.

    ஆனால் தற்போது அவர் நம்மிடம் இல்லை. அவரின் கனவை நனவாக்க வேண்டும் என்பது ஒரு மகனாகிய எனது கடமை. எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.

    20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலை, ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் டவுன் ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்துள்ளேன்.

    நான் மக்களுக்கு விரோதமான திட்டங்கள் எதையும் குமரி மண்ணில் அனுமதிக்க மாட்டேன், அதற்காக தொடர்ந்து போராடுவேன். அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்கு உதவியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தோவாளையில் மலர்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு மற்றும் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மரியஜெனிபர் போட்டியிடுகிறார். விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (28-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

    நாளை காலை 9 மணிக்கு விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனையில், அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு அழகிய மண்டபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    11 மணிக்கு திங்கள்நகரிலும், 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×