search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களுக்கு விரோதமான எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன்- விஜய் வசந்த் சூளுரை
    X

    மக்களுக்கு விரோதமான எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன்- விஜய் வசந்த் சூளுரை

    • இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும்.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் நாகர்கோவில் மாநகர வார்டுகளில் வாக்குகள் சேகரித்தார். பெருவிளை பள்ளிவாசல் அருகே இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசார பயணத்தை தொடங்கிய அவருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும், ஆளுயர மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் பார்வதிபுரம், ஆசாரிபள்ளம், எறும்புகாடு, மேலசூரங்குடி, குருசடி, கோணம், செட்டிகுளம், மறவன்குடியிருப்பு, இருளப்பபுரம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் பீச் ரோட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசார பயணத்தை நிறைவு செய்தார். அவருடன் மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக அய்யா வழி அன்பு கொடி மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் விஜய் வசந்த் பேசுகையில் கூறியதாவது:-

    எனது தந்தை வசந்தகுமார் மறைவிற்கு பிறகு அவரின் கனவுகளை தொடர்ந்து செய்வதற்கும், குமரி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் 2½ ஆண்டுகள் ஒலிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள். குமரியில் முடக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை பல்வேறு இடையூறுகளுக்கு இடையே கொண்டு வந்துள்ளேன். என் தந்தை இறுதி வரை குமரி மக்களுக்காகவே வாழ்ந்தார். இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைத்தார்.

    ஆனால் தற்போது அவர் நம்மிடம் இல்லை. அவரின் கனவை நனவாக்க வேண்டும் என்பது ஒரு மகனாகிய எனது கடமை. எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.

    20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலை, ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் டவுன் ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்துள்ளேன்.

    நான் மக்களுக்கு விரோதமான திட்டங்கள் எதையும் குமரி மண்ணில் அனுமதிக்க மாட்டேன், அதற்காக தொடர்ந்து போராடுவேன். அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்கு உதவியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தோவாளையில் மலர்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு மற்றும் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×