search icon
என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • மோடி நாளை பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
    • எம்.பி.க்கள் பதவி ஏற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு செய்ய மக்களவை கூட இருக்கிறது.

    இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ந்தேதி நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

    அதன்பின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் எம்.பி. சபாநாயகராக தேர்வாக வாய்ப்புள்ளது. அதன்பின் ஜனாதிபதி இரண்டு அவைகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைப்பார்.

    இந்த நிலையில் 18-வது மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.க்கள் பதவி, சபாநாயகர் தேர்வு முடிவடைந்த உடன் மக்களவை ஒத்திவைக்கப்பட்டும். பின்னர் பட்ஜெட்டுக்கான கூட்டத் தொடர் நடைபெறும்.

    தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகுியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

    • ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள்,
    • தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல், இந்தியாவில் இன்னும் 6 மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும்  ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் வரப்போகிறது. யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி (உ.பி. முதல்வர் பதவி) ஆடிக்கொண்டிருக்கிறது. பாஜன் லால் சர்மா (ராஜஸ்தான் முதல்வர்) தள்ளாடுகிறார். பட்நாவிஸ் ராஜினாமா கூட செய்ய தயாராகிவிட்டார்.

    ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள் (பிரதமர் மோடியை கிண்டல் செய்து) தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது என்ன அணிவது என்பது குறித்து அவர்கள் கவலைப்படப்போவதில்லை.

    கட்சிகளை உடைத்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறைக்கு தள்ளியவர்கள், மிரட்டியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.

    இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பூபேஷ் பாகல் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

    • விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
    • பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும்.- காங்கிரஸ் தலைவர்.

    மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை பாராளுமன்றத்திற்கான அக்கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்தனர். ஆனால் உத்தர பிரதேசத்தில் இரண்டு எம்.பி.க்களை கொண்டு ராஷ்டிர லோக் தளம் கட்சி தலைவரும் ஜெயந்த் சவுத்ரி எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார். இவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் சவுத்ரியின் பேரன் ஆவார்.

    எம்.பி.க்களுடன் அமர வைத்து ஜெயந்த் சவுத்ரியை அவமதித்துள்ளது என பாஜக மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. அதேவேளையில் இது ஒரு பெரிய விசயம் அல்ல என ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய்

    இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில் "மேடையில் இடம் வழங்காதது மூலம் சிறந்த விவசாயிகளுக்கான சிறந்த தலைவரின் (சரண் சிங் சவுத்ரி) பேரனை இழிவுப்படுத்துவதாகும். விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் என அழைத்து அதே கட்சிதான் பாஜக.

    விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சமாஜ்வாதி கட்சியில் அவர் மிகப்பெரிய அவரில் மதிக்கப்பட்டார். அவருடைய சுய மரியாதைக்காகவும், விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம். அகிலேஷ் யாதவிடம் யாரெல்லாம் செல்கிறார்களோ, அவர்களை இரண்டு கைகளை விரித்து வரவேற்பார்" என்றார்.

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

    காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில் "பாஜக கூட்டணி கட்சி தலைவரை அவமதித்துள்ளது. பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும். அவர்களுடைய கட்சியில் இணையும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பெரிய மாலை போடுவார்கள். பின்னர் அவமதிப்பார்கள்" என்றார்.

    ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார்

    இதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி எப்போது எங்களுக்கு மரியாதை கொடுத்தது? ஒருவர் மேலே அமர்ந்தாலும் கீழே அமர்ந்தாலும் பெரிய விஷயம் இல்லை. பரந்த மனதுடன் அரசியல் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. எங்கள் கட்சி என்.டி.ஏ.-வின் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகும். தொடர்ந்து அதனுடன் இருக்கும்.

    இவ்வாறு அனில் குமார் தெரிவித்தார்.

    • முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது.
    • நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய போகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக-வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் (16) வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது.

    அதேவேளையில் ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 12-ந்தேதி ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி ஓபிசி-க்களின் இடஒதுக்கீட்டை பறித்து அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் இருக்கும்வரை அதை நடக்க விடமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், விளிம்பு நிலையில் இருக்கம் மக்களின் தரநிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்துவோம் என சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாரா லோகேஷ் கூறியதாவது:-

    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    சிறுபான்மையினர் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய தனி வருமானம் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. ஒரு அரசாக என்னுடைய பொறுப்பு அவர்களை வறுமையில் இருந்து மீட்பதுதான். எனவே நான் எடுக்கும் எந்த முடிவுகளும் சமரச அரசியல் (வாக்கு வங்கிக்காக இடஒதுக்கீடு வழங்குவது) அல்ல, மாறாக அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே.

    நீங்கள் நம்முடைய நாட்டை வளர்ச்சி நாடாக்க விரும்பினால், யாரையும் பின்னாடி விடமுடியாது. அவர்களை ஒன்றிணைத்து, சிறந்த வாய்ப்பை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது, தெலுங்கு தேசம் கட்சியின் முத்திரையாக (Trade Mark) இருந்து வருகிறது.

    நாங்கள் ஒருபோதுமு சபாநாயகர் பதவி குறித்து பாஜகவிடம் பேசவில்லை. நாங்கள் மாநிலத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றுதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் மந்திரி பதவி கேட்கவில்லை. மாநிலத்தின் நலம்தான் எங்களுடைய நலம்.

    இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெற அவரது மகனான நாரா லோகேஷ் முக்கிய பங்காற்றினார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதுபோது, தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 4 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தேர்தலில் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான்.
    • தார்மீக தோல்வி என்றால் அது மோடிக்குதான்.

    மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு தேர்தலில் காங்கிரஸ் முதல் இடம் வந்தது. பாஜக 2-வது இடம் பிடித்தது. அப்போது அத்வானி பாஜக தலைவராக இருந்தார். அவர் வெற்றி பெற்ற கட்சி 2-வதாக வந்துள்ளது என்றார்.

    இந்த தேர்தலில் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மீக தோல்வி என்றால் அது மோடிக்குதான். அதனால் நாங்கள் வெற்றியை கொண்டாடினால் என்ன? அதில் அவருக்கு என்ன வருத்தம். அவர்கள் களையிழந்து, பொலிவிழந்து, உற்சாகம் இழந்து இருப்பதை நான் காண்கிறேன்.

    வாக்கு இயந்திரம் குறித்து நாங்கள் புகார் எழுப்பவில்லை. வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வரும். அதை வாக்காளர் கையில் கொடுத்து பின்னர், பெட்டிக்குள் போட வைக்க வேண்டும். இந்த சிறு மாற்றத்தை நாங்கள் கேட்கிறோம். இன்னமும் மக்கள் EVM இயந்திரத்தை சந்தேகிக்கதான் செய்கிறார்கள்.

    பாஜக-வால் நிலையான ஆட்சி கொடுக்க முடியுமா? என்பதற்கு மோடிதான் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் குஜராத்தில் 12 வருடம் முதல்வராக இருந்தபோது, பிரதமராக 10 ஆண்டுகள் இருந்தபோது ஒரு மனித ஆட்சியை நடத்திதான் அவருக்கு வழக்கம். ஒரு மனித ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமைக்கும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நிலையான ஆட்சியாக இருக்குமா? என்பதை அவர் சொல்லலாம். இல்லை காலம் சொல்லலாம்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
    • தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார்.

    தோல்விக்கு பின் அதிமுக தலைவர் எஸ்.பி வேலுமணி, "பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்திருந்தார். அப்போது அதிமுக தலைவர்கள் தோல்விக்கு வேறு காரணங்கள் கூறும்போது எஸ்.பி. வேலுமணி இந்த காரணத்தை கூறுகிறார். அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது" என்றார்.

    இந்த நிலையில் எஸ்பி வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்கமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:-

    பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு. எங்களது தலைவர்களை விமரச்னம் செய்தவர்களைதான் நாங்கள் விமர்சனம் செய்தோம்.

    தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அதிமுக தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. 2026-ல் தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி செய்யப் போகிறது என்றால் அது அதிமுக கட்சிதான்.

    அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாகதான் செயல்பட்டார். ஒரு கட்சியின் தலைவராக அவரது பேச்சு இல்லை. 2014-ல் பாஜக கூட்டணி வாங்கிய வாக்கை விட தற்போது குறைவு. இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார்?.

    தமிழகத்தில் பாஜக ஆர்சிபி அணி போன்றது. தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்கள் சிஎஸ்கே. 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம்.

    கேரளாவில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றார்களா?. புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு சீன் காட்டுவது தமிழகத்தில் எடுபடாது.

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • மோடி கூறியதுபோல், உலகளவில் 2047-ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும்.
    • சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது.

    பழைய பாராளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம். மோடி கூறியதுபோல், உலகளவில் 2047-ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி. சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமரும் இந்தியா கூட்டணி கட்சிகள், அடுத்த முறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும்.

    பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனத தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

    • பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த அரசு பணியாற்ற முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மந்திரி சபையில் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கியமான இலாகாக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிராஜ் பஸ்வான் கூறுகையில் "நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், அவரது தலைமைக்கும் எங்களுடைய ஆதரவை நாங்கள் தெரிவித்தோம். எந்தவொரு நிபந்தனையின்றி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டோம். எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இந்த வெற்றி பிரதமர் தலைமைக்கான வெற்றி.

    தேசிய ஜனநாயக கூட்டணியை அவருடன் இணைத்து கொண்டு சென்றதன் காரணமாக எங்கள் கூட்டணி இந்த வெற்றியை பெற்றுள்ளது" என்றார்.

    பீகார் மாநிலத்தில் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஜித்தன் ராம் மஞ்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

    • சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி முக்கிய துறைகளை கேட்பதாக தகவல்.
    • சபாநாயகர் மற்றும் முக்கிய இலாகாக்களை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பாது.

    மக்களவை தேர்தல் வாக்குகள் கடந்த 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியது போல பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணியாக 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிக்கட்சியாக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

    ஆட்சி அமைப்பதற்கு 272 இடங்கள் தேவை. இதனால் 32 இடங்களுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (7), சிராக் பஸ்வான் கட்சி (5) முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்த நான்கு கட்சிகளும் 40 இடங்களை பெற்றுள்ளது. 40 இடங்களை தவிர்த்தால் பாஜக கூட்டணியில் 253 இடங்கள்தான் இருக்கும் ஆட்சி அமைக்க முடியாது. கடந்த இரண்டு முறை தனி மெஜாரிட்டி பெற்றதால் பாஜக கொடுத்த இலாகாக்களை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொண்டன.

    தற்போது இந்த நான்கு கட்சிகளில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கராக திகழ்கின்றன. இருவரையும் பகைத்தால் பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை இரண்டு கட்சிகளும் குறிவைத்துள்ளன. நிதி, ரெயில்வே, உள்துறை, வெளியுறவுத்துறை என தாங்கள் விரும்பிய இலாகாக்களை பெற விரும்புகின்றன. அதுவும் கேபினட் அந்தஸ்து இலாகாக்களை கேட்கிறது. அதனுடன் சபாநாயகர் பதவி மேலும் கண் வைத்துள்ளன.

    ஆனால் 2040 ஆண்டில் வளர்ச்சி இந்தியா என்பதை நோக்கி நகர பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த துறைகளை கொடுத்தால் சரிபட்டடு வராது என நினைக்கிறது.

    சபாநாயகர் பதவி

    இரு கட்சிகளும் சபாநாயகர் பதவிக்கு அடி போடுகின்றன. தற்போது மெஜாரிட்டி இல்லாத நிலையில் சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கினால் அது பேராபத்தாக முடியும் என நினைக்கிறது. இதனால் சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும்.

    போக்குவரத்து, நெடுஞ்சாலை அல்லது நலத்திட்டம் தொடர்பான இலாகாக்களை கொடுத்தால் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என நினைக்கிறது. அதனால் இதுபோன்ற இலாக்களையும் கொடுக்க பாஜகவுக்கு விருப்பம் இல்லை.

    தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கும்தான் ஜாதிகள் என குறிப்பிட்டார். இதனால் இது தொடர்பான துறைகளை கையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கும்.

    நிதின் கட்கரி வசம் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. இதனால் கிடைத்த பெருமையை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாது.

    ரெயில்வே துறை

    ஐக்கிய ஜனதா தளம் ரெயில்வே துறையை கேட்கிறது. வந்தே பாரத், புல்லெட் ரெயில் போன்ற திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதையும் கூட்டணியிடம் கொடுத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறது.

    கடந்த இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளுக்கு உணவுத்துறை, கனரக தொழில்துறை போன்ற துறைகளை ஒதுக்கியது. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் சில துறைகளை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளை அளிக்க முன்வரலாம்.

    இணை அமைச்சர் பதவிகள்

    தெலுங்குதேசம் கட்சிக்கு விமானத்துறை, ஸ்டீல் துறை போன்ற இலாகாக்கள் வழங்க முன்வரலாம். அதேவேளையில் நிதி மற்றும் பாதுகாப்பு துறையில் இணை அமைச்சர் பதவியை பெற கூட்டணி கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    சுற்றுலா, திறன் வளர்ச்சி, அறிவியல் மற்றும் புவியியல் துறைகளை ஒதுக்க பாஜக முன்வரும். இதனால் இலாகாக்கள் தொடர்பான விசயத்தில் ஒருமித்த கருத்து நிலவுவதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

    • பாஜக அரசு 2022-ல் ராணுவ வீரர்கள் தொடர்பாக அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தது.
    • நான்கு வருட வேலை என்ற அடிப்படையில் ராணுவ வீரர்கள் நியமனம் செய்யப்படுவர்.

    மக்களை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியாக 290 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் உதவி பா.ஜனவுக்கு தேவைப்படுகிறது.

    இதனால் மந்திரி சபையில் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி சில விசயங்களை செய்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விரும்புகின்றன.

    அமைச்சரவையில் இடம், இரு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து பிரதான கோரிக்கைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பார்வை வேறு பக்கம் உள்ளது. அந்த கட்சி அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது.

    கடந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் 2022-ல் ராணுவ வீரர்கள் தொடர்பாக அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    நான்கு வருட வேலை என்ற அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். அதன்பின் 15 வருடத்திற்கு நிரந்தர கமிஷன் என்ற அடிப்பயைடில் 25 சதவீத சம்பளம் வழங்கப்படும். இதனால் பென்சன் வழங்கும் தொகை மிச்சமாகும் என பாஜக அரசு எண்ணியது.

    இதற்கு பீகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் வருகின்றன பீகார் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய ஜனதா தளம் நினைக்கிறது. இதனால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது.

    இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கேசி தியாகி கூறுகையில் "அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த திட்டத்திற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தாக்கம் தேர்தலில் பார்க்க முடிந்தது.

    நாங்கள் இதை வலியுறுத்தமாட்டோம். அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

    • பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார்.
    • அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் பத்திரிகையாளருக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது இதை பார்க்கும்போது அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.

    2019-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது மத்தியில் பாஜக 303 இடங்களை பிடித்தது. அப்போது கூட தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அதிமுக தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் இந்த தேர்தலின் செய்தி. அதிமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக மக்கள் நினைத்து விட்டார்கள். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு. கூட்டணியில் இல்லாதபோது ஒரு பேச்சு.

    கோவையில் தொகுதிக்கு உட்பட்ட ஆறு எம்.எல்.ஏ. தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்னதாக கோவை தொகுதியில் இவ்வாறு பார்க்கவில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். மக்கள் நிராகரித்ததால் வேலுமணி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாங்கள் வளருகின்ற கட்சி. வளர்ந்து கொண்டிருக்கிறோம். பூனை யானையாக வேண்டுமென்றால் கடுமையான பாதையில் நடந்து செல்ல வேண்டும். 3 சதவீதம் 10 ஆக வேண்டும். 10 சதவீதம் 20 ஆக வேண்டும். 20 சதவீம் 30 ஆக வேண்டும். பின்னர் எம்எல்ஏ-வாக வேண்டும். எம்.பியாக வேண்டும். அதுவரை கடுமையாக பணி செய்ய வேண்டும். இதனால் தொண்டரக்ள் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்.

    திமுக தொண்டர்களுக்கு கை வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் என்மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை ஏன் வெட்டுகிறீர்கள்.

    10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்றது ஏற்றம் இல்லையா? 12 இடத்தில் 2-வது இடம் என்பது ஏற்றம் இல்லையா? அதிமுகவின் கோட்டை என கூறப்பட்ட கோவையில் ஜஸ்ட் டெபாசிஸ்ட் வாங்கிருக்கிறார்கள். 3 முனை போட்டி 2 முனை போட்டியாக மாறி 40 முதல் 45 சதவீத வாக்குகள் வரும்.

    மின்சாரம் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை. அதற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிடட்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

    மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதா கூறப்படுகிறதே? என்று கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு கேள்விக்கு சென்றார்.

    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கிங் மேக்கராக உள்ளனர்.
    • இருவரும் அவரவர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பார்கள்.

    மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. பா.ஜனதா தனித்து பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக 296 இடங்களைத்தான் பிடித்துள்ளார்.

    பாஜக-வுக்கு 240 இடங்கள்தான் கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவை. என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (12) ஆகியோரின் உதவி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது.

    இதனால் இருவரும் கிங் மேக்கர்களாக திகழ்கிறார்கள். இருவரும் பிரதமர் மோடி வீட்டில் இன்று நடைபெற்ற என்டிஏ தலைவர்கள் கூட்டணியில் கலந்து கொண்டார்கள்.

    மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்க இருவரும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

    நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு

    நிதிஷ் குமார் கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகி, மந்திரி சபையை நீட்டிக்க விரும்பி அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக பரிசீலனை செய்வோம். புதிதாக அமையும் அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்ப்பது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவைதான். இருந்தபோதிலும் எந்த கண்டிசனும் போடமாட்டோம். நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முயற்சி இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக நாடு தழுவிய சாதி வாரிய கணக்கெடுப்பை விரும்பவில்லை. இந்தியா கூட்டணியின் முக்கிய வாக்குறுதியில் இது ஒன்று.

    பீகாரில் வேலையாப்பின்மை மிகப்பெரியதாக உள்ளது. இதனால் சிறப்பு அந்தஸ்துதான் ஒரு வழி என நிதிஷ் குமார் நினைக்கிறார். இதனால் இந்த இரண்டையும் பா.ஜனதாவுடன் வலியுறுத்தும்.

    சந்திரபாபு நாயுடுவின் எதிர்பார்ப்பு

    சந்திர பாபு நாயுடு கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் அதிகமான இடங்களை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது பிரதான கோரிக்கையாக இருக்கும். இந்த விவகாரத்தில்தான் கடந்த 2016-ல் சந்திரபாபு நாயுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலத்தை மீண்டும் சிறந்த மாநிலமாக கொண்டு வருவேன். மாநிலத்தின் தலைநகரை சிறந்த நகராக உருவாக்குவேன் என்பதை வாக்குறுதியாக அளித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார். தற்போது ஐதராபாத் ஆந்திராவின் மாநிலம் அல்ல. தெலுங்கானா மாநிலமாகிவிட்டது. இதனால் புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். இதனால் சிறப்பு அந்தஸ்து முக்கியமானதாக தெலுங்குதேசம் கருதும்.

    இதனால் நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். நாட்டின் வளர்ச்சியல் அரசியல் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தற்போது இருவரின் உதவி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் என்ன விலை கொடுக்கப் போகிறதோ? தெரியவில்லை.

    தற்போது என்டிஏ-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் கிங் மேங்கராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×