search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம் விற்பனை"

    • விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வழக்கு உள்ளூர் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் கோப்புகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இருக்கக்கூடிய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளையும் விசாரணை குழுவில் அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி. சசிதர் மற்றும் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்த விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று சென்றுள்ளனர்.

    • மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது.
    • கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், மரக்காணம் மது விலக்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு மெத்தனால் அளித்த தொழிற்சாலை உரிமையாளர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது. அதே போல கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    இந்நிலையில் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட மரியே சோபி மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடனேயே மரக்காணத்தில் இயங்கி வந்த மது விலக்கு போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது.

    கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடியும் சரிவர இயங்கவில்லை. இதனால் மரக்காணம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் இருந்து கடத்தி வரப்படும் சாராய விற்பனை படுஜோராக நடந்தது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் மது விலக்கு போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முடியாத வியாபாரிகள், மெத்தனாலை வாங்கி அதில் டிகிரி பார்த்து நீர் ஊற்றி, புதுவை சாராயம் போலவே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

    மரக்காணம் பகுதியில் உள்ள மது பிரியர்கள், இது புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் என்று நினைத்து வாங்கி குடித்தனர். இதில் மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதுவரை எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு இன்ஸ்பெக்டர் மரியே சோபி மஞ்சுளாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வாய் திறந்தால் மட்டுமே நடந்தது என்ன? இதில் யார்? யார்? தொடர்பில் இருக்கிறார்கள்? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரியவருகிறது.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    மதுராந்தகம்:

    மரக்காணம், சித்தாமூர் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை மொத்தம் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி அவரது மாமியார் வசந்தா மற்றும் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெண்ணியப்பன், சந்திரா , மாரியப்பன் ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரணையை சேர்ந்த தம்பு, முத்து ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலி, ராஜீவ் உள்பட 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் பா.ஜனதா நிர்வாகி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர் பா.ஜ னதா கட்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்தார். அவருக்கு கள்ளச்சாராயம் விற்ற கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? மெத்தனால் எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? சாராயம் தயார் செய்யப்பட்டதும் எந்தெந்த பகுதியில் விற்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?யார்? என்ற விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக மேலும் கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு ஆகிய 4 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கைதான பா.ஜனதா நிர்வாகி விஜயகுமார் உள்பட 5 பேரையும் சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 6 பரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைதான கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளசாராயம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது.

    அ.தி.மு.க.வின் சட்ட விதிகள் திருத்தம் நிர்வாகிகள் மாற்றம் ஆகியவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன் தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.

    இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை 1½ கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்த எடுக்கப்பட்டு வரும் பணிகளை வேகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    உறுப்பினர் சேர்க்கை கடந்த காலங்களில் நடந்தது போல் இல்லாமல் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு வார்டு வாரியாக முகாம் போட்டு பணியை வேகப்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

    முக்கியமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.

    பூத் கமிட்டியை வலுப்படுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுடன் இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்குகிறார்.

    மதுரையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களின் பலத்தை காட்டும் வகையில் மிக பிரமாண்டமாக மாநாடாக நடத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலியாகி விட்ட நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க. மாவட்டம் தோறும் போராட்டம் நடத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சேதராப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்ததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் நேரில் வந்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், காலியாக உள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் என்ற ராஜா, ஏழுமலை, ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மரக்காணம் எக்கியார் குப்பத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அக்கிராம மக்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், எக்கியார்குப்பத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கைதான ராஜா புதுவையின் பல்வேறு இடங்களில் சாராயக்கடை ஏலம் எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர் எந்த வகையான வேதிப்பொருளை சாராயம் தயாரிக்க கொடுத்தார்? இவருக்கு யார் மூலம் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேலும் புதுவையை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

    • மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.

    • கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

    அவரது உறவினர்களிடம் உணவு, உடை, பழங்களை வழங்கினார். அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டார்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானத்தை விற்பனை செய்ததின் மூலமாக அப்பாவி மக்கள் அதை குடித்ததில் மரக்காணம் பகுதியில் பலர் உயிர் இழந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராயம் விற்றவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.

    ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டனர். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். இன்று 1,500 பேர் வரை கைதாகி இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ளச்சாராய வியாபாரிகளை அரசுக்கு முன் கூட்டியே தெரிந்து உள்ளது.

    இதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராய பலிக்கு சமூக போராளிகளும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள். கேட்டால் மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது அனைத்து யூடியூப்களிலும் வெளிவந்துள்ளது.

    இந்த வகையில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்றே தெரியவில்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார்.

    இதனை கட்டுப்படுத்த தவறியதால்தான் தற்போது 18 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் 13 பேர் இறந்திருக்கிறார்கள்.

    செந்தில் பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது. அந்த வழக்கு தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதை உங்களிடம் கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது.
    • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    நாகர்கோவில்:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

    கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    • கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.

    தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து தமிழ் நாடு முழுக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அந்த வகையில், கடந்த 2 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது."

    "4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன."

    "2023 ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 15) நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

    கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும், இதனை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இதோடு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் ஆகியோரை பணிநீக்கம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
    • விற்பனை செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முண்டியம்பாக்கம்:

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்.

    * கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். விற்பனை செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.
    • தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி வரும் ஆய்வுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வரையிலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும்.

    கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர்.

    காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிர் இழந்த சம்பவம் துரதிஷ்டவசமானதாகும்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.

    தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×