search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது- எடப்பாடி பழனிசாமி
    X

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது- எடப்பாடி பழனிசாமி

    • கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

    அவரது உறவினர்களிடம் உணவு, உடை, பழங்களை வழங்கினார். அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டார்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானத்தை விற்பனை செய்ததின் மூலமாக அப்பாவி மக்கள் அதை குடித்ததில் மரக்காணம் பகுதியில் பலர் உயிர் இழந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராயம் விற்றவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.

    ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டனர். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். இன்று 1,500 பேர் வரை கைதாகி இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ளச்சாராய வியாபாரிகளை அரசுக்கு முன் கூட்டியே தெரிந்து உள்ளது.

    இதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராய பலிக்கு சமூக போராளிகளும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள். கேட்டால் மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது அனைத்து யூடியூப்களிலும் வெளிவந்துள்ளது.

    இந்த வகையில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்றே தெரியவில்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார்.

    இதனை கட்டுப்படுத்த தவறியதால்தான் தற்போது 18 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் 13 பேர் இறந்திருக்கிறார்கள்.

    செந்தில் பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது. அந்த வழக்கு தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதை உங்களிடம் கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×