search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம் பலி"

    • கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
    • கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, வெண்குடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் கள்ளச்சாராயம் விற்றதாக வாலாஜாபாத் போலீஸ் நிலையம், மற்றும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. அதன்படி கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஜாமீன் பெற்று மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.

    இதையடுத்து தொடர் குற்றச்செயலில் ஈடுபடும் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று கள்ளச்சாராய வியாபாரி கணேசனை ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்தார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த அறிவிப்பாணையை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கள்ளச்சாராய வியாபாரி கணேசனுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் வழங்கி உள்ளனர்.

    • கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்கம்.இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

    இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    திருச்சி:

    பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

    திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ந்தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம்.

    இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந்துக்கள் தான் பா.ஜ.க.வை தோல்வி அடைய செய்தார்கள். 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும்.

    கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளசாராயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்க கூடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைக்கோர்ப்பேன். பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதன வாதிகளுக்கு தான் வலு சேர்க்கும். ஜாதி பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை, தேவையில்லாத வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சிறுபான்மையினர் அணியை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான எம்.கே.கிளாரன்ஸ், வி.பி.துரைசாமி, செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் டால்பின் ஸ்ரீதர், நடிகை நமீதா, முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரி தேவி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன், தனசேகர் மற்றும் மாநில மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
    • மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மதுராந்தகம்:

    செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மேல் மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    அவருக்கு பதிலாக மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • 3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சாராய வியாபாரிகளான மரக்காணம் பகுதியை சேர்ந்த அமரன், முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுவையில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.

    இது தொடர்பாக புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரை சேர்ந்த பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய 2 பேரை புதுவை போலீசார் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வானரகம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பியிடம் மெத்தனால் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஏழுமலை, பர்க்த்துல்லா, இளையநம்பி ஆகிய 3 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    22 பேர் பலியான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கினர்.

    சம்பவம் நடந்த மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தினர்.

    ஏழுமலையும், பர்கத்துல்லாவும் சென்னை வானகரம் தொழிற்சாலையில் இருந்து கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்தனர். அதனை புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    அந்த மெத்தனாலை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.

    அதனுடன் சேர்த்து கொரோனா காலத்தில் தயாரிக்கபட்ட காலாவதியான மெத்தனாலையும் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது பணம் சம்பாதிக்கும் நோக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க பர்கத்துல்லாவும், ஏழுமலையும் அதிகமாக மெத்தனாலை வாங்கி வைத்திருந்தனர். அதில் கள்ளச்சாராயம் தயாரித்தது போக மீதமுள்ள மெத்தனாலை பதுக்கி வைத்திருந்தனர்.

    அந்த மெத்தனாலை தற்போது புதிதாக வாங்கிய மெத்தனாலுடன் கலந்து மரக்காணம், செங்கல்பட்டில் இருந்து வந்த சாராய வியாபாரிகளுக்கு விற்றுள்ளனர். அதனை அவர்கள் கள்ளச்சாராயத்துடன் கலந்து குடிமகன்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தனாலுடன் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதால் அதனை வாங்கி குடித்தவர்கள் பலியானதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
    • சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து 14 பலியான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்த 14 பேர் பலியானார்கள்.55-க்கும் மேற்பட்டோர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவ மனை, மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விஷச்சாராயம் குடித்து 14 பேரி பலியானதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மதுவிக்கு டி.எஸ்.பி. பழனி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், சீனிவாசன், மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், மரக்காணம் போலீஸ் ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி, விஷச்சாராய விற்பனையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம், உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மரக்காணம் போலீசார் கொலை வழக்காக மாற்றினார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.எஸ்.பி. கோமதி நியமிக்கப்படார்.

    இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.எஸ்.பி. கோமதியிடம் வழங்கப்பட்டது.

    இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கினார்கள். அவர்கள் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மெத்தனால் வழங்கிய ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரத்தில் முகாமிட்டு இந்த வழக்குதொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர். இதனால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    மதுராந்தகம்:

    மரக்காணம், சித்தாமூர் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை மொத்தம் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி அவரது மாமியார் வசந்தா மற்றும் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெண்ணியப்பன், சந்திரா , மாரியப்பன் ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரணையை சேர்ந்த தம்பு, முத்து ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலி, ராஜீவ் உள்பட 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் பா.ஜனதா நிர்வாகி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர் பா.ஜ னதா கட்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்தார். அவருக்கு கள்ளச்சாராயம் விற்ற கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? மெத்தனால் எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? சாராயம் தயார் செய்யப்பட்டதும் எந்தெந்த பகுதியில் விற்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?யார்? என்ற விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக மேலும் கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு ஆகிய 4 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கைதான பா.ஜனதா நிர்வாகி விஜயகுமார் உள்பட 5 பேரையும் சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 6 பரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைதான கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளசாராயம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீரமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீரமலையை அடுத்த காட்டுகொல்லையில் உள்ள மலையடிவாரத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (வயது45) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து தயார் நிலையில் இருந்து 2லிட்டர் சாராய பாட்டில்களையும், 50 லிட்டர் சாராய ஊறல் பேரல்களையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்றும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளச்சாராய விவகாரத்தில் புதுவை, முண்டியம்பாக்கம், திண்டிவனம் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்றும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 350 பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 426 பேருக்கு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.

    தினசரி பாதுகாப்பு இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. டெங்கு ஒழிப்பு பணியில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 480 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 14 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டது.

    கள்ளச்சாராய விவகாரத்தில் புதுவை, முண்டியம்பாக்கம், திண்டிவனம் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முண்டியம் பாக்கத்தில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சையை தீவிரப்படுத்தவும், தேவையான ஏற்பாடுகள் செய்யவும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளச்சாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்கி முற்றுப் புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் முண்டியம் பாக்கம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டார்கள். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பது பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • 3-வது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17ஆயிரத்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து இதுவரை 19 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கினார்கள். இதனால் கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2,461 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெண்களும் அடங்குவார்கள். 2 நாட்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. 3-வது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17ஆயிரத்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2,583 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

    சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறும் போது, "தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இந்த நடவடிக்கைகள் தொடரும்" என்று தெரிவித்தார்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
    • விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது 30), அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்து பலியானார்.

    அவர்களுடன் விஷ சாராயம் குடித்த சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி (22)செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் விஷசாராயம் குடித்ததில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) ஆகியோரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.

    மேலும் விஷசாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வந்தது. அவர் செய்யூர் அருகே உள்ள ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து விஷ சாராயம் விற்றதாக வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே விஷ சாராயத்தை விற்ற அமாவாசையும் குடித்து இருந்தார். இதில் அவரது உடல் நிலையும் சற்று பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை அவரையும் போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடந்து வருகிறது. விஷசாராயத்தை மேலும் வேறுயாராவது குடித்து இருந்தால் அவர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப விசாரித்து வருகின்றனர்.

    கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சதாகர் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×