search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய விவகாரம்: தமிழகம் முழுக்க 1,558 பேர் கைது - டிஜிபி தகவல்!
    X

    கள்ளச்சாராய விவகாரம்: தமிழகம் முழுக்க 1,558 பேர் கைது - டிஜிபி தகவல்!

    • கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.

    தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து தமிழ் நாடு முழுக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அந்த வகையில், கடந்த 2 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது."

    "4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன."

    "2023 ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×