search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம் விற்பனை"

    • போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது.
    • வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொரு ள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலை மையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது பானம் விற்பனையில் ஈடுபடு வர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மது பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்த ப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாநிலஅளவில் தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 94429 00373 என்ற எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு தொடர்பாக வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரப்பாளையம், ராயபாளையம், கடத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து நேரம் கடந்து மது விற்பனை செய்தவர்கள் மீது 122 வழக்குகளும், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மது பானம் எடுத்து வந்ததற்காக 7 வழக்குகளும் என மதுவிலக்கு தொடர்பாகசு மார் 129 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, சப்-கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகன சுந்தரம், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
    • ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் சாராய வியாபாரிகள் 11 பேரிடமும் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

    மெத்தனால் எங்கிருந்து வந்தது. எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கிய ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து தான் 1,250 லிட்டர் மெத்தனாலை புதுச்சேரியை சேர்ந்த இளைய நம்பி நண்பர் ஏழுமலைக்கு ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.

    ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இன்று மாலையுடன் 11 பேரின் காவலும் முடிவடைகிறது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலைகடத்தி வந்த வேலுர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்ட 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாார்.

    இதனை தொடர்ந்து 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 11 பேரையும் தனித்தனி அறையில்அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

    விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர், வருவாய்துறையினர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என் தகவல் வெளியாகி உள்ளது.

    • தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது.
    • தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு பல அணிகளாக அ.தி.மு.க. செயல்பட்டது. பின்பு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை தலைமையுடன் செயல்பட தொடங்கியது.

    இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. இதன் காரணமாக ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டு பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றனர். கோர்ட்டு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்தது.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

    முதல்கட்டமாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆலோசனை கூட்டம் நடத்தி உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞர்கள், இளம்பெண்களை அதிகமாக உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தினார்.

    அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களை அடிக்கடி அவரே தொடர்பு கொண்டு எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். பணிகளை தீவிரப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.

    ஓ.பி.எஸ். சமீபத்தில் டி.டி.வி. தினகரனை சந்தித்தார். சசிகலாவை விரைவில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து கட்சியினரிடம் கழக பணியில் தீவிரமாக ஈடுபட்டு அதிக உறுப்பினர் சேர்க்கையால் நமது அணியை பலப்படுத்த அறிவுறுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய பலியை கண்டித்தும் முறைகேடுகளை விசாரணை செய்யக் கோரியும் அவர்கள் மாளிகை நோக்கி பேரணி நடத்தி கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.

    அடுத்த கட்டமாக பொதுமக்கள் அடிப்படை பிரச்சினையை உடனடியாக ஆங்காங்கே பிரமாண்ட போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது. தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கட்சியில் ஸ்லீப்பர் செல்லாக சில மாவட்ட செயாளர்கள் செயல்படுவதாக புகார் வருவதை தொடர்ந்து அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பாணியில் தவறு செய்வோர் உடனடியான தண்டிக்கப்படுவதும் தி.மு.க. எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதும் தீவிரம் அடைவதாக தெரிகிறது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிர் இழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்..பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்குமாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். இதற்காக நேற்று விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
    • தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?

    புதுச்சேரி:

    முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.

    இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.

    ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.

    கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?

    தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.

    தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.

    காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.

    வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?

    தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.

    ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 6 பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்த கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர், மெத்தனாலை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2பேர் மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த டிரைவர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஆவணங்களை மரக்காணம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான குழுவினர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்றனர். அங்கு சாராயத்தை குடித்துவிட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.
    • வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

    சென்னை :

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வினர் புகார் மனு அளித்தனர். சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9 பேர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பேரணியில் பங்கேற்றதால் கிண்டி முதல் அண்ணாசாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், கவர்னரை சந்தித்த பின் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.

    * சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.

    * 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் ஊழல் குறித்தும் புகார் கொடுத்துள்ளோம்

    * எங்கள் புகார் மனுவை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    * விஷ சாராயா மரணம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை.

    * உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் விஷ சாராய மரணங்களை தடுத்து இருக்கலாம்.

    * அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

    * உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன.

    * வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகி வருவதை கண்டதும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

    அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி புறப்பட்டது.

    இதில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், தலைமைக் கழக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, விஜயபாஸ்கர், டி.கே.எம்.சின்னையா, செல்லூர் ராஜூ, பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ரமணா, மாதவரம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், வெங்கடேஷ் பாபு, சத்தியா, ராஜேஷ், வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளரான பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்,

    அமைப்புச் செயலாளர் நெல்லை ஏ.கே.சீனிவாசன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளரான முன்னாள் சாத்தாங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எம்.ஆனந்தராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி எம்.சி. ஆயிரம் விளக்கு 117-வது வட்ட கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மாணவரணி வக்கீல் ஆ.பழனி, முகப்பேர் இளஞ்செழியன், சைதை சொ.கடும்பாடி செக் போஸ்ட் எஸ்.வி.லிங்க குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், பகுதி செயலாளர் ஜெ.ஜான், கே.பி.முகுந்தன், சி.வி.மணி, கொளத்தூர் முன்னாள் பகுதி செயலாளர் கொளத்தூர் கே.கணேசன் திருமங்கலம் மோகன், அபிராமி பாலாஜி, பாடி பா.கிருஷ்ணன், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, துறைமுகம் பயாஸ் இளைய கிருஷ்ணன், புளியந்தோப்பு எம்.ஆர்.சந்திரன், பகுதி கழக செயலாளர் பட்மேடு டி.சாரதி, ஜி.ஆர்.பி.கோகுல், கே.சி.கார்டன் சந்திரசேகர், நேரு நகர் எஸ்.கோதண்டன் வழக்கறிஞர் இஸ்மாயில், கொளத்தூர் கணேசன், எஸ்.ஆர்.விஜய குமார், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி.பிரிவு மாநில செயலாளர் செல்வநாயகம், சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையும், ஊர்கள் தோறும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறி கண்டன உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சர்தார் சிங், மாவட்ட செயலாளர் மில் ஹரி, நிர்வாகிகள் பாக்கியராஜ், சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள்.
    • பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் பனங்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சில தினங்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு, பனங்கள் இறக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதிப்பது தான். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்திலும் கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் இந்த பனங்கள்.

    இதைக் குடித்தால் சிறிது நேரத்துக்குத்தான் போதை இருக்கும். இந்த பனங்கள் அருந்தும் பழக்கம், நம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்த ஒன்றுதான். இப்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள், உடலுக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், பனங்கள் அப்படி கிடையாது. விலை மலிவாகக் கிடைக்கும் அந்த பனங்கள்ளை ஒரு ஏழை தொழிலாளி குடிப்பதால், அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆரோக்கியமாக இருப்பார். கள்ளுக்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

    ஒரு பனை தொழிலாளி பனங்கள் இறக்கி விற்பனை செய்யும்போது, அந்த பனை மரங்கள் வைத்துள்ள அனைவருக்கும் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    பனை மரங்களை வளர்க்கும் ஆர்வமும் பெருகும். அதனால், நம் தமிழ்நாட்டின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

    ஆக, பனங்கள் இறக்க வழங்கப்படும் அனுமதியால், கிராமப்புறங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி உண்டாகும். டாஸ்மாக் மதுவைக் குடித்து, உடல் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளுக்குச் செல்லும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து விடும். விலை மலிவான பனங்கள் பயன்பாட்டில் இருந்தால், கள்ளச்சாராயம் யாருக்கும் தேவைப்படாது. பனம்பால் என்கிற இந்த பனங்கள் டாஸ்மாக் கடைகளிலேயே விற்பனை செய்ய அரசாங்கமும் முன் வரவேண்டும். இதை நான் சட்டமன்றத்திலும் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன். நமது முதல்வர் அவர்கள், பனங்கள் இறக்க அனுமதி தந்து, அந்த பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×