search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Illicit liquor sold"

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சேதராப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்ததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் நேரில் வந்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், காலியாக உள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு, விழுப்புரம் மாவட்டமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மரக்காணம் வந்தார். அங்கு கள்ளச்சாராய வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் என்ற ராஜா, ஏழுமலை, ஆகிய 2 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது. அதனை யார்? யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மரக்காணம் எக்கியார் குப்பத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அக்கிராம மக்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், எக்கியார்குப்பத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கைதான ராஜா புதுவையின் பல்வேறு இடங்களில் சாராயக்கடை ஏலம் எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர் எந்த வகையான வேதிப்பொருளை சாராயம் தயாரிக்க கொடுத்தார்? இவருக்கு யார் மூலம் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேலும் புதுவையை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

    ×