search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க. பிரமாண்ட போராட்டம்- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசனை
    X

    தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க. பிரமாண்ட போராட்டம்- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசனை

    • அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது.

    அ.தி.மு.க.வின் சட்ட விதிகள் திருத்தம் நிர்வாகிகள் மாற்றம் ஆகியவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன் தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.

    இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை 1½ கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்த எடுக்கப்பட்டு வரும் பணிகளை வேகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    உறுப்பினர் சேர்க்கை கடந்த காலங்களில் நடந்தது போல் இல்லாமல் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு வார்டு வாரியாக முகாம் போட்டு பணியை வேகப்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

    முக்கியமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.

    பூத் கமிட்டியை வலுப்படுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுடன் இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்குகிறார்.

    மதுரையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களின் பலத்தை காட்டும் வகையில் மிக பிரமாண்டமாக மாநாடாக நடத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலியாகி விட்ட நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க. மாவட்டம் தோறும் போராட்டம் நடத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×