search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    • இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
    • முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    அதனைத்தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜன.25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் கூறியதாவது, " நாட்டிற்காக எப்போதும் விளையாடுவது தான் என்னுடைய பணி. இருப்பினும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவிற்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • முதல் டெஸ்ட் போட்டி 25-ம் தேதி நடைபெறுகிறது.
    • மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ஹாரி புரூக் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

     


    "தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி புரூக் உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்புகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்," என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹாரி புரூக். முன்னதாக இவர் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.

    24 வயதான ஹாரி புரூக் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 1181 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள், ஏழு அரைசதங்கள் அடங்கும்.

    • உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது.
    • பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    1986-ம் ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்தது. அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டி, ஒரு பனித் தீவாக மாறியது.

    உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்த பல் வடிவ பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. அதன் தடிமன் 1,312 அடி ஆகும். இது அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.

    இந்த பனிப்பாறை கடந்த 2022-ம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஏ23ஏ பனிப்பாறை வடக்கு நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் இறுதிப் பயணமாக வடக்கு நோக்கி செல்கிறது. தற்போது யானைத் தீவு மற்றும் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு இடையே நகர்கிறது. இந்த பனிப்பாறை ஒரு டிரில்லியன் டன் தண்ணீரைக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து அண்டார்டிக் சர்வேயின் ஆண்ட்ரூ பிளெமிங் கூறும் போது, "2020-ம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நகருவது தெரிந்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ஏ23ஏ அதன் பனிக்கட்டிகளில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது" என்றார்.

    • பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் சிறப்புமிக்க ஈகோட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
    • ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்

    பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் தனது  "எல்டன் ஜான் லைவ்,  ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் வீடியோக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    ஈகோட் பட்டியல் என்பது எம்மி, கிராமி, ஆஸ்கார், மற்றும் டோனி ஆகிய விருதுகளின் சுருக்க பெயராகும்.

    இந்த பட்டியலி்ல் ஜெனிபர் ஹட்சன், மெல் ப்ரூக்ஸ், ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற புகழ்பெற்ற கலைஞர் இருக்கும் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்.

    1995 மற்றும் 2020 ஆண்டுகளில் "ராக்கெட்மேன்" மற்றும் "தி லயன் கிங்" போன்ற படங்களின் இசைக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் அவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். 2000 ஆம் ஆண்டில், ஜான் "ஐடா" நாடகத்திற்காக எழுதப்பட்ட சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் பாடலுக்கான டோனி விருதைப் பெற்றார். மேலும் ஆறு கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராக் ஸ்டார் 2022 "டோட்ஜர் ஸ்டேடியம்" ஸ்பெஷலுக்கான சிறந்த பிரிவில் அவரது ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் என்ற லைவ் வீடியோ விருதை பெற்றுள்ளது. எம்மிஸ் விழாவில் ஜான் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் " திறமையான குழுவில் நானும் சேர்த்து இருப்பது நம்பமுடியவில்லை. இந்த இடத்தை சேர்த்தது எனது ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உலகளவில் எனது ரசிகர்களின் உறுதியற்ற ஆதரவால் சாத்தியம் ஆகியிருக்கிறது. எனது வாழ்க்கை முழுவதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • லண்டன் நகர மேயர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்
    • மூவரை தவிர 8 பேர் மேயர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது.

    மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    4 வருட பதவிக்காலம் உள்ள லண்டன் மேயர் பதவிக்கு தற்போது மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் 3-வது முறையாக போட்டியில் இறங்கி உள்ளார்.

    இந்நிலையில், சாதிக் கானை எதிர்த்து தருண் குலாடி (63) மற்றும் ஷ்யாம் பாடியா (62) எனும் இரு தொழிலதிபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.

    இந்த இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்தியா நான் பிறந்த பூமி. எனது வீடு லண்டன். தற்போதுள்ள மேயர், மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்கள் நல்வாழ்விற்காக சுதந்திரமான தடையற்ற கொள்கைகளை மக்களின் ஆலோசனையுடன் செயல்படுத்தவே நான் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கிறேன். அனைவருக்குமான பாதுகாப்பான நகரமாக லண்டனை மாற்றுவேன்" என கூறினார் தருண்.

    தருண், "நம்பிக்கை மற்றும் வளர்ச்சி" (trust and growth) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

    "தற்போது லண்டனின் நிலை என்னை வருத்தமடைய செய்கிறது. இந்த பெருநகரத்தில் வசிப்பவர்களின் வாழ்வு, செயலற்ற ஒரு அமைப்பால் பலியாவது என்னை கவலை கொள்ள செய்கிறது. வரப்போகும் நாட்களில் இரவும் பகலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சவால்களை எதிர் கொண்டு, உலகில் லண்டனுக்கு என முன்னர் இருந்து வந்து தற்போது இழக்கப்பட்டுள்ள முதல் இடத்தையும், தனிப்பட்ட மரியாதையையும் மீட்டு எடுப்பேன்" என கூறினார் ஷ்யாம்.

    ஷ்யாம், "நம்பிக்கைக்கான தூதர்" (ambassador of hope) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

    2024 மார்ச் மாதம், இருவரும் தங்களை ஆதரிப்பவர்களின் கையெழுத்துடனும், டெபாசிட் தொகையுடனும் அதிகாரபூர்வமாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் மாதம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சாதிக் கான், தருண் மற்றும் ஷ்யாம் ஆகியோரை தவிர, 8 பேர் இந்த மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    1947ல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமையாக ஆளப்பட்டு வந்தது. இன்று அந்நாட்டின் தலைநகரை ஆள இந்திய வம்சாவளியினர் தீவிரம் காட்டுவதை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • தரைவழியாக ஊடுருவும் ரேடார் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன
    • 900 வருடங்களுக்கு முற்பட்ட நகர் கண்டறியப்பட்டது என டாக்டர். லவ்னாரோ கூறினார்

    பண்டையகால நாகரிகங்களில் சரித்திர புகழ் வாய்ந்தவை கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்கள்.

    ஐரோப்பாவில் உள்ள இத்தாலி, பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மனித நாகரிக வளர்ச்சியை கண்ட நாடு. இதற்கு சான்றாக இத்தாலி முழுவதும் பழமை மாறாத கட்டிங்கள் இன்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக (Cambridge University) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, டாக்டர். அலெஸ்ஸாண்ட்ரோ லவ்னாரோ (Dr. Alessandro Launaro) தலைமையில் மத்திய இத்தாலியில் உள்ள இன்டராம்னா லிரெனஸ் (Interamna Lirenas) எனும் இடத்தில் அகழ்வாரய்ச்சிகள் நடத்தியது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பல இடங்களில் தரைவழியாக ஊடுருவும் திறன் வாய்ந்த ரேடார் கருவிகளை கொண்டு ஆய்வுகளை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக, ஆராய்ச்சியாளர்கள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு காலகட்ட நகரமான லாசியோ பகுதியில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர். தற்போது பயிர் நிலங்களாக உள்ள இந்நகர் அக்காலத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை கொண்ட நகரமாக விளங்கியது தெரிய வந்துள்ளது.


    "எவரும் இதற்கு முன்பு தோண்டி பார்க்க முயற்சிக்காத பகுதியில் எங்கள் ஆய்வை தொடங்கினோம். தோண்டிய பிறகு முதலில், மேற்புரத்தில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில உடைந்த மண்பானைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், கீழே நீர் நிலைகள் தோன்றவில்லை. 900 வருட பழமை வாய்ந்த நகரத்தின் அறிகுறிகள் காணப்பட்டன" என டாக்டர். லவ்னாரோ தெரிவித்தார்.


    லிரி நதிக்கு அருகே நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியில், ஒரு கிடங்கு, வழிபாட்டு தலம், 1500 பேர் அமர கூடிய கலையரங்கம், பண்ணை விலங்குகளுக்கான 19 திறந்தவெளி கூடங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


    எந்த போரினாலும் இந்நகர் அழிக்கப்பட்ட தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற லொம்பார்ட் படையெடுப்பின் போது இந்நகரில் வாழ்ந்த மக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    • ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • ரேனுகா சிங் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    அந்த வகையில், இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 09) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

     


    இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா பத்து ரன்களில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து வந்த இந்திய வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். எனினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுமையாக ஆடி 30 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக இந்திய பெண்கள் அணி 16.2 ஓவர்களில் வெறும் 80 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இங்கிலாந்து பெண்கள் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சார்லி டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா க்ளென் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபியா டன்க்ளெ 9 ரன்களிலும், டேனி யாட் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.

    அடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி மற்றும் நேட் ஸ்கிவர் ப்ரண்ட் சிறப்பாக விளையாடினர். நேட் ஸ்கிவர் ப்ரண்ட் 16 ரன்களிலும், அலைஸ் கேப்சி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் ஹீத்தர் நைட் 7 ரன்களையும், சோபி 9 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 11.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.

    இந்திய அணி சார்பில் ரேனுகா சிங், தீப்தி ஷர்மா சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வஸ்ட்ராக்கர், சைகா இஷாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 10) நடைபெற இருக்கிறது. 

    • இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • லபுசேன் பொறுமையாக விளையாடி ரன் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார்.

    உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான ஹெட் மற்றும் டேவிட் வார்னர் முறையே 11 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித் 44 ரன்களை குவித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், லபுசேன் பொறுமையாக விளையாடி ரன் குவித்தார். இவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பிறகு களமிறங்கிய கிரீன் 47 ரன்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 35 ரன்களையும் எடுத்த நிலையில், 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 287 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரரான பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    இவருடன் களமிறங்கிய டேவிட் மலான் பொறுமைாக ஆடி 50 ரன்களை எடுத்து, அவுட் ஆனார். இவருடன் விளையாடிய ஜோ ரூட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று ஆடி பொறுமையாக ரன்களை சேர்த்தார். இவரும் 64 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தடுமாறியது. இந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் பட்லர் 1 ரன்னில் அவுட் ஆனார்.

    பிறகு வந்த மொயின் அலி 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், 48.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

    • தென் ஆப்பிரிக்கா அணியின் கிளாசன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
    • இங்கிலாந்து அணிக்கு மார்க் வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் கிளாசன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.

    400 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடைசியில் சிறப்பாக ஆடிய அட்கின்சன் மற்றும் மார்க் வுட் முறையே 35 மற்றும் 43 ரன்களை எடுத்தனர்.

    அட்கின்சன் 35 ரன்களில் ஆட்டமிழக்க, 22 ஓவர்களில் இங்கிலாந்து அணி 170 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. மார்க் வுட் ஆட்டமிழக்காமல் 43 ரன்களை குவித்து இருந்தார். அடுத்து களமிறங்க வேண்டிய ரீஸ் டோப்லி பேட்டிங் ஆடவில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • வேக கட்டுப்பாட்டை மீறி 3 மடங்கு வேகத்தில் கேரி சென்றார்
    • என் ஒரே அழகான மகளை இழந்து விட்டேன் என்றார் லட்சுமிதாஸ்

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரின் மேற்கில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஜேட் முடுவா (22) எனும் இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, ஒரு பெண்ணை கத்தியை காட்டி எவரோ பயமுறுத்துவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததின் பேரில், அப்பெண்ணை காக்க சம்பவ இடத்திற்கு பெருநகர காவல்துறை வாகனத்தில் கேரி விட்கின்சன் (Gary Witkinson) எனும் காவலர் விரைந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த பகுதியில் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்தும் தனது கடமையை ஆற்ற சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் கேரி சென்று கொண்டிருந்தார்.

    நடந்து வந்து கொண்டிருந்த முடுவா, சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரி, முடுவாவை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், மிக வேகமாக ஓட்டியதால் அவரால் உடனே நிறுத்த முடியவில்லை. இதனால் துரதிர்ஷ்டவசமாக முடுவா மீது கேரியின் காவல்துறை வாகனம் மோதியது.

    இதையடுத்து உடனடியாக கேரி காரை நிறுத்தினார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முடுவா, பலத்த காயங்களால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்திற்கு காரணமான கேரி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.

    ஆனால், கேரி காவல்துறையினரின் நடத்தை விதிகளின்படியே செயல்பட்டதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து, மிகுந்த வேதனையடைந்துள்ள முடுவாவின் தந்தை ஜெர்மைன் லட்சுமிதாஸ் (Jermaine Laxmidas), தெரிவித்ததாவது:

    காரால் மோதிய கேரியிடம் கேட்கப்பட்ட போது, "காவல்துறை வாகனங்கள் கடமையை ஆற்ற வேக கட்டுப்பாட்டை தாண்டி 3 மடங்கு அதிகம் செல்லாம்" என கூறியுள்ளார். இது தவறு. இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும். என் ஒரே அழகான மகளை நான் இழந்துள்ளேன். காவலர்களின் வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு லட்சுமிதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    அவரது இழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் அதே நேரம் இவரது தனிப்பட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளத்தில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கப்பல்களுக்காக திறந்து மூடும் வகையில் இது கட்டப்பட்டது
    • மூடி கொள்ளாமல் இருப்பதை கண்டு பார்வையாளர்கள் கூடி விட்டனர்

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ளது புகழ் பெற்ற டவர் பிரிட்ஜ் (Tower Bridge).

    பாஸ்க்யூல் முறையில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 1894ல் கட்டி முடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ் பெற்ற லண்டன் டவர் சுற்றுலா தலத்திற்கு அருகே தேம்ஸ் நதியின் குறுக்கே டவர்

    ஹாம்லெட்ஸ் மற்றும் சவுத்வார்க் ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. நதியில் சிறு கப்பல்கள் வரும் போது இது திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், இங்கிலாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காண விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    நேற்று மாலை 01:15 மணியளவில் அதன் கீழ் ஒரு படகு சென்றது. அது சென்றவுடன் வழக்கம் போல் திறந்த அந்த பாலம் மூடி கொள்ளவில்லை. இதனை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர்.

    சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் அது மீண்டும் மூடி கொண்டது. அந்த பாலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதனால் சிறிது நேரம் மூடி கொள்ள இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் பிரபலமான பாம்பன் பாலமும் இதை போலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×