search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்"

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    பெருந்துறை:

    பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் போலீசார் மிரட்டி அத்து மீறும் செயலில் ஈடுபடுகின்றனர்.

    அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு செல்லக் கூடாது என சர்வாதிகார போக்குடன் ஈரோடு மாவட்ட போலீசும் செயல்பட்டு வருகிறது. எங்களது கட்சியின் மூத்த வக்கீல் மோகன் மீது வழக்கு போட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம். எங்களது மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ளது.

    அவரது மகள், மருமகன் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் நீங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது மந்திரி உத்தரவு என மிரட்டியுள்ளனர்.


    இது குறித்து கேட்டதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதால் தான் தடுத்து நிறுத்தினோம் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே மேற் கொண்டு இதுபோன்ற மிரட்டல்கள் நடக்குமாயின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    பொதுமக்களிடம் கமி‌ஷன் கேட்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி வரும் பாலபாரதி மீது வழக்கு தொடருவேன் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #DinidgulSreenivasan #BalaBharathi
    திண்டுக்கல்:

    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல், பால கிருஷ்ணாபுரம் பகுதியில் தற்பொழுது ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, இந்த மேம்பாலப் பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையினை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு, நான் கமி‌ஷன் கேட்டு தாமதப்படுத்தி வருவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் லாபத்திற்காக கூறி வருகிறார். இது முற்றிலும் வடிகட்டிய பொய். உண்மைக்கு புறம்பானது. கடந்த 2016 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் போது மாவட்ட நிர்வாகம் அப்போதைய சந்தை மதிப்பான, நகர்புறப் பகுதிக்கு 225 சதவீதமும் கிராமப்புறப் பகுதிக்கு 275 சதவீதமும் நில உரிமையாளருக்கு பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் சென்னை நில நிர்வாக ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இது வெளிப்படையான ஒன்று.

    அதன்படி திண்டுக்கல் கோட்டாட்சியர் வங்கிக் கணக்கில் ரூ. 31 கோடியே 99 லட்சம் ஒதுக்கீடு செய்து வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017 ல் தமிழக அரசு தனது சந்தை வழிகாட்டி மதிப்பினை 33 சதவீதம் குறைத்து அறிவித்தது. அதன் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் பாலப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளருக்கு கூடுதல் தொகையினை மாநில மேல் கூர்நோக்கு கமிட்டி முடிவு எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்திடம் மேல் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நானும் மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே நிர்ணயித்த தொகையினை நில உரிமையாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சித்து வருகிறோம்.


    மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன். இந்நிலையில் நான் கமி‌ஷன் கேட்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை தாமதப்படுத்தி வருவதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கூறுவது அரசியல் லாபத்திற்காக கூறும் அபாண்டமான பொய். பொதுமக்களை திசைதிருப்புவதற்காக கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட முறையில் என் மீது கூறி வருகிறார். இதற்கு பாலபாரதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். #DinidgulSreenivasan #BalaBharathi
    பல அரிய நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #ministersrinivasan

    திண்டுக்கல்:

    சித்த மருத்துவர்களுக்கு தலைவராக விளங்கும் அகஸ்தியர் பிறந்ததினம் சித்தமருத்துவ தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் தேசிய சித்தமருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயா வரவேற்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    உலகில் நம்முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளனர். தற்போது கூட டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு சித்தமருத்துவ முறையே சிறந்ததாக உள்ளது. இதுபோல பல அரியநோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது.

    வீடுகளில் பிரசவம் பார்த்த சமயங்களில் தாயும், சேயும் நலமாக காப்பாற்றப்பட்டனர். எனவே சித்தமருத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் போற்றி மதிக்கவேண்டும். தமிழகஅரசு சித்தமருத்துவத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணிநேரமும் செயல்படும் 6 ரத்த சுத்திகரிப்பு மையங்கள், பழனியில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதனால்தான் பல பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் மேயர் மருதராஜ், நலப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மூலிகை கண்காட்சியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். #ministersrinivasan

    கட்சியும் ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan

    கொடைரோடு:

    நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதி இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க சார்பாக அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மைய நாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் வரவேற்றார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பூத் கமிட்டி முகவர்களை ஒவ்வொருவராக சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என கோரினர். அதன் காரணமாக அந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவும் நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கட்சியும் ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது.

    தற்போது முதல்- அமைச்சர், துணை முதல் -அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகின்றனர்.

    ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.கவின் தொண்டர்களை தற்போது சந்திப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு கூட்டங்களில் பார்த்து இருப்போம், ஆனால் நேரில் ஒவ்வொரு நபர்களையும் குடும்பத்தினரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிலக்கோட்டை தொகுதி எப்போது அ.தி.மு.கவின் கோட்டையாக இருக்கிறது. எப்போது இங்கு இடைத்தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.

    அ.தி.மு.க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் களப்பணி சிறப்பாக செய்ய வேண்டும். எதிர் கட்சியினர் என்ன குறைகளை சொல்லினாலும் மக்களுக்கு அது பொய் என தெரியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவைகளை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் குருவையா, குணசேகரன், சங்கையா, சேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dindigulsrinivasan

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனை பார்வையிடுவதற்காக வந்த அமைச்சர் மற்றும் எம்பி காரை மலை கிராம மக்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #gajayclone

    பெரும்பாறை:

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி, பெரியூர், பாச்சலூர், மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி, காமனூர், பண்ணைக்காடு, ஆடலூர், சோலைக்காடு, பன்றிமலை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டிருந்த காபி, மிளகு, வாழை, அவக்கோடா, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.

    இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உதயகுமார் எம்.பி., கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிக்கு சென்றனர். கே.சி.பட்டி பகுதியில் சென்ற போது மலை கிராம மக்கள் திடீர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் எம்.பி. காரை மறித்தனர்.

    அப்போது மக்கள் ஆவேசமாக எங்களது பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு அடைந்தோம். எங்களை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை போல் எங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் உதவவில்லை என்று கூறினர்.

    உடனே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காரை விட்டு கீழே இறங்கி மக்களை சந்தித்து குறைகேட்டார். அப்போது மலை கிராம மக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர்.

    அந்த மனுவில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் எம்.பி. இதுவரை தங்களது பகுதிக்கு வரவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எந்த பணியும் மேற்கொள்ள வில்லை.

    எங்களது பகுதியில் யானைகள் வாழையை அழித்து விட்டு செல்கின்றன. கஜா புயல் காபி தோட்டங்களை முற்றிலும் அழித்து விட்டது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

    மனுக்களை வாங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். #gajayclone

    கொடைக்கானலில் கஜா புயலால் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்ததால்தான் இங்கு வரவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #DindigulSreenivasan
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது கொடைக்கானல் மலைச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நானும், துணை முதல்-அமைச்சரும், அதிகாரிகளும் மறுநாளே பார்வையிட வந்தோம்.

    நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை விரைவில் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். மலை கிராமங்களில் புயலால் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது எங்களுடன் வந்திருந்த போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேஷ்வரன் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

    அதன் காரணமாகவே நாங்கள் புயல் பாதித்த மாவட்டங்களான நாகை, திருவாரூர் பகுதிக்கு சென்று விட்டோம். அதன்பிறகு கொடைக்கானலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காமனூர் ஊராட்சி பகுதியில் 43 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மதியம் 12.30 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். அமைச்சர் வருகை ரத்து என தகவல் வந்ததால் அதிகாரிகளே அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அதன்பிறகு அமைச்சர் சீனிவாசன் வருகை உறுதி செய்யப்பட்டதால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் வந்தவுடன் நிவாரண பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், உதயகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் சீனிவாசன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையான பேச்சுகளை கூறி வருவது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தற்போது கஜா புயல் பாதிப்பு குறித்தும் அமைச்சர் தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கஜா புயலால் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். #gajacyclone #ministersrinivasan

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் சீனிவாசன் இன்று வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதில் 62 குடும்பத்தினருக்கு தலா ரூ.8500 மதிப்பிலான நிவாரண பொருட்களும் அரிசி, வேஷ்டி-சேலை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் 1,098 உயர் அழுத்த மின் கம்பிகளும், 4,096 குறைந்த அழுத்த மின் கம்பிகளும் சேதமாகின. இதில் 1,127 மின் கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. புயல் தாக்குதலுக்கு பிறகு மின் வாரிய ஊழியர்களின் பணி மிகவும் பராட்டுக்குரியது. ஏனெனில் அவர்கள் இன்னும் தங்கள் பணியை 24 மணி நேரமும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க லாரிகள் மூலமும், ஜெனரேட்டர் கொண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் 836.6 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தாங்கள் எதிர்பார்த்ததை விட சேத மதிப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளனர். நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் நானே நேரடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளேன். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர முதல்-அமைச்சரும், அனைத்து அமைச்சர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் புயலால் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய குழுவினரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministersrinivasan 

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    வேதாரண்யம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மின்கம்பங்கள் நடும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    புயலால் முற்றிலும் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வினியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதன்பின்னர் வேதாரண்யத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டத்தில் பேசும் போது, ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழிற்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.


    அமைச்சரின் இந்த பேச்சை கேட்டு ஒருகணம் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

    இதை புரிந்து கொண்ட கூட்டத்தில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அது சாத்தியமில்லை. இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று கூறினார்.

    அப்போது மீண்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, ‘வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான். கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என்ன.. என்று கேட்டார். இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவிக்கிறார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை. மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் இதேபோல் பேசியதால் மின்வாரிய அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயினர்.

    பிறகு ஒருவழியாக கூட்டம் முடியும் தருவாயில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க உடனடியாக வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புறப்பட்டு சென்றார்.

    சர்ச்சை பேச்சால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பலமுறை விமர்சனத்துக்குள்ளானவர். தற்போது விமானம் மூலம் மின்கம்பங்கள் நடுங்கள் என்று கூறிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    திண்டுக்கல் நகருக்கு இன்னும் 4 புயல் வந்தால் குடிநீர் பிரச்சனை தீரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். திண்டுக்கல்லில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வினியோகம் தடைப்பட்ட பகுதிகளில் படிப்படியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்கு வரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். தற்போது ஏற்பட்ட புயல் மழையால் பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    எனவே இது போல் மேலும் 4 புயல் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பட்டால் திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சனை தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுருட்டி வீசிய கஜா புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 81 குழுக்கள் கொண்ட அனைத்து துறையை சேர்ந்த 1110 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கஜா புயல் காரணமாக திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜ் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து தற்போது 13 அடி தண்ணீர் உள்ளது.


    புயல் பாதிக்கப்பட்ட பகுதியை நான் பார்வையிட உள்ளேன். ‘கஜா’ புயலை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புயல் நிவாரண பணிகளை எதிர்கட்சிகள் பாராட்டியுள்ளது. பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.

    தமிழகத்தில் அடுத்தடுத்து புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோதும் தற்போது உள்ள பா.ஜனதா அரசும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு ரூ.5000 கோடி கேட்டால் ரூ.500 கோடியை தருகின்றனர்.

    மத்திய அரசு முழு நிதியை கொடுப்பதில்லை. தமிழக அரசு நிதியில் இருந்துதான் அனைத்து நிவாரண பணிகளும் நடக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
    ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார். #Thangatamilselvan #DindigulSreenivasan
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஜெயலலிதா ‘ஸ்லோ பாய்சன்’ (மெதுவாக கொல்லக்கூடிய விஷம்) கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார். இந்த நிலையில் நேற்று அ.ம.மு.க. சார்பில் நிலக்கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரை, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அறிந்த வரை, ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை.

    உள்ளாட்சி தேர்தலையே நடத்த துணிவு இல்லாதவர்கள், இடைத்தேர்தலை எப்படி நடத்துவார்கள். ஒருவேளை துணிச்சல் வந்து இடைத்தேர்தலை நடத்தினால், 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்பதால், நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.


    தமிழகத்தில் இதுவரை எந்த முதல்-அமைச்சர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இட்லி, இடியாப்பம் சாப்பிட்டார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு கூறினார். ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா இட்லி, இடியாப்பம் சாப்பிடவில்லை என்றும், தான் பொய் சொன்னதாகவும் கூறினார். தற்போது ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதா கொல்லப்பட்டதாக, திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

    ‘ஸ்லோ பாய்சன்’ கொடுப்பதை கூட அறியாமல் சாப்பிடும் அளவுக்கு எப்போதும் ஜெயலலிதா இருந்தது இல்லை. என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதை ஜெயலலிதா அறிந்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு ஜெயலலிதா புத்திக்கூர்மையுடன் செயல்படுவார்.

    எனவே, விசாரணை ஆணையம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் திண்டுக்கல் சீனிவாசன் தவறாக பேசி இருந்தால் அவருடைய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thangatamilselvan #DindigulSreenivasan
    ஸ்லோபாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பாக குற்றம்சாட்டி பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க, அ.தி.மு.க என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண் போகவேண்டும் என தினகரன் நினைக்கிறார்.

    ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என பார்க்கிறார்.

    இந்த ஆட்சி, கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார். சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக்கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர்.


    இப்போது அவர்கள் உத்தமர் போல பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசே நான்தான் என தினகரன் கூறி வருகிறார். வழக்கில் இருந்து விடுபடுவதற்காக ஜெயலலிதாவை சிக்கவைத்து விட்டு கருணாநிதி உதவியை நாடியவர் தினகரன். அதனால்தான் ஜெயலலிதா தான் உயிரோடு இருந்தவரை அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவே இல்லை. அவரால் அ.தி.மு.க அரசை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
    ×