search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் ரூ.250 கோடி பாதிப்பு- அமைச்சர் சீனிவாசன் பேட்டி
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் ரூ.250 கோடி பாதிப்பு- அமைச்சர் சீனிவாசன் பேட்டி

    திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கஜா புயலால் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். #gajacyclone #ministersrinivasan

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் சீனிவாசன் இன்று வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதில் 62 குடும்பத்தினருக்கு தலா ரூ.8500 மதிப்பிலான நிவாரண பொருட்களும் அரிசி, வேஷ்டி-சேலை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் 1,098 உயர் அழுத்த மின் கம்பிகளும், 4,096 குறைந்த அழுத்த மின் கம்பிகளும் சேதமாகின. இதில் 1,127 மின் கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. புயல் தாக்குதலுக்கு பிறகு மின் வாரிய ஊழியர்களின் பணி மிகவும் பராட்டுக்குரியது. ஏனெனில் அவர்கள் இன்னும் தங்கள் பணியை 24 மணி நேரமும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க லாரிகள் மூலமும், ஜெனரேட்டர் கொண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் 836.6 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தாங்கள் எதிர்பார்த்ததை விட சேத மதிப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளனர். நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் நானே நேரடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளேன். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர முதல்-அமைச்சரும், அனைத்து அமைச்சர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் புயலால் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய குழுவினரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministersrinivasan 

    Next Story
    ×