search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth killed"

    தொண்டி அருகே தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    தொண்டி:

    தொண்டி அருகே உள்ள தெற்கு ஊரணங்குடியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் ராமு (வயது32). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உப்பூருக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் நின்றிருந்தபோது 2 லாரி டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ராமு அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெய்வேலி வடக்கு மேலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்குமார் (45) என்பவர் ராமுவை அடித்ததாக தெரிகிறது. மேலும் லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராமுவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராமு பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
    பெரியபாளையத்தில் மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகுல், அவரது நண்பர்களான முன்னூ, டெப்பாஜித், மொன்னா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 4 பேரும் பெரியபாளையம்- யானம் பாக்கம் சாலையில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தினர். அப்போது மதுவை பங்கு வைத்தபோது பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொண்டனர். அப்போது நண்பர்கள் மூவரையும் கோகுல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில், படுகாயமடைந்து காது, வாய், மூக்கில் ரத்தம் வந்து கோகுல் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் கோகுலை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.

    கோகுலை தாக்கிய நண்பர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று கோகுல் பரிதாபமாக பலியானார்.

    எனவே, குற்றவாளிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரியில் வாலிபர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் சேகர் மகன் பிரதீப் (வயது 24). டிப்ளமோ படித்துள்ளார். சம்பவத்தன்று இரவு பிரதீப் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் மற்றும் சிலருடன் பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்தார். பிரதீப்பிற்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரதீப் கத்தியால் குத்தப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார். 

    இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரதீப் கொலை தொடர்பாக ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார், பிரபாகரன் (25), உதயகுமார் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    திருச்சியில் செல்போன் கடையை சூறையாடியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண்குமார் (வயது 20). இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர்கள் தைக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் திருச்சி என்.எம்.கே. காலனி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்றனர். அங்கு தாங்கள் வைத்திருந்த செல்போனை வாங்கிக்கொண்டு, அதற்கான பணத்தினை கொடுக்குமாறு கூறியுள்ளனர். அப்போது வினோத் இங்கு ரீசார்ஜ் மட்டுமே செய்வோம் செல்போன் வாங்கி, விற்பது கிடையாது என கூறியுள்ளார்.

    தொடர்ந்து இருவரும் நாங்கள் இதே பகுதியை சேர்ந்தவர்கள் தான். எங்களிடம் இதனை வாங்கிக் கொள்ளுங்கள் என தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு வினோத் தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் இது குறித்து வினோத்குமார் தனது உறவினரான கரிகாலன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார். வினோத் மற்றும்  உறவினர்களும் கடையினை சூறையாடிய அருண்குமார், ஜாகீர்உசேன் ஆகிய இருவரையும் தாக்குவதற்காக தேடி அலைந்தனர்.

    அப்போது இவரும் மேலப்புதூர் ரெயில்வேகேட் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற வினோத்குமார், கரிகாலன் (35), சிவா (23), மல்லிகைபுரத்தை சேர்ந்த ரீகன் (26) ஆகிய 4 பேர் அவர்களை தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அருண் குமாரின் தலையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ஜாகீர் உசேனின் கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பின்னர் அரிவாள் வெட்டில் காயமடைந்த இருவரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அருண்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். ஜாகீர் உசேனுக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக  அடிதடி வழக்காக இதனை பதிவு செய்த போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றி வினோத்குமார், கரிகாலன், சிவா, ரீகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த திலீப், கல்கண்டார்கோட்டையை சேர்ந்த வினோத், முதலியார் சத்திரத்தை சேர்ந்த மதன், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வந்தவாசியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆரணி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    ஆரணி:

    வந்தவாசி தாலுகா சொரப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48), தொழிலாளி. இவருடைய மனைவி சாந்திக்கும் (42)வேறொரு நபருக்கும் தகாத உறவு உள்ளது என்று மதியழகன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி சாந்தியின் சகோதரர்கள் பழனி, கங்காதுரையிடம் (28) ‘உங்கள் சகோதரி வேறொரு நபருடன் தகாத உறவில் உள்ளதை குடும்பத்தினர் யாரும் தட்டிக்கேட்பதில்லை. அதேபோன்று என்னிடம் சண்டை போட்டு அவள் உங்கள் வீட்டுக்கு வந்தால் எப்படி சேர்த்து கொள்ளலாம்’ என்று மதியழகன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளார்.

    இந்த வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மதியழகன் அப்பகுதியில் கிடந்த இரும்பு ராடால் கங்காதுரையை சரமாரியாக தாக்கினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்து பழனி, பொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.தேவநாதன் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குடும்ப தகராறில் கங்காதுரையை அடித்து கொலை செய்த மதியழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து பலத்த காவலுடன் மதியழகன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 32). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    திருமணமாகாத இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது, கேலி, கிண்டல் செய்வது என்று இருந்தார். பொதுமக்கள் கடுமையாக எச்சரித்தும் திருந்த வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் சக்திவேலை அடித்து, உதைத்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் வந்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் அழைத்து சென்று விட்டனர். சக்திவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதேபோல் காளிதாஸ் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும், கடந்த 2008-ம் ஆண்டு காசிவிஸ்வநாதன் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சக்திவேலை கடுமையாக தண்டிக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள அடியார்குளம் பகுதியில் சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் மறித்தனர். அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக அடித்து, காலால் குரல் வளையை மிதித்தனர். இதில் மூச்சுத்திணறிய சக்திவேல் மயங்கினார். அவர் இறந்து விட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து சக்திவேலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். தலை மறைவான காளிதாசை தேடி வருகிறார்கள். உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலை பழி வாங்க 10 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், நேற்று இரவு சிக்கிக்கொண்டதால் தாக்கியதாகவும் காசிவிஸ்வ நாதன் போலீசில் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலையொட்டி மது குடிக்கும் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் - காட்பாடி ரோடு ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் உதயசூரியன் (வயது 25), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    உதயசூரியன் 2 ஆண்டுகளுக்கு முன்புஉஷா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று மாலையில் உதயசூரியனும், அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவரும் குடியாத்தம் காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தி உள்ளனர். அப்போது செதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த பெயிண்டர் ராஜா மதுகுடிக்க வந்தார். குடிபோதையில் இருந்த உதயசூரியன் நண்பர் மகேந்திரனுக்கும், ராஜாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது மகேந்திரனுக்கு ஆதரவாக சென்று ராஜாவை உதயசூரியன் தாக்கினார். இதனையடுத்து ராஜா தனது உறவினரான பெயிண்டர் ரமேசை போன் செய்து அழைத்தார்.

    இந்த நிலையில் சுமனும், உதயசூரியனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சக்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

    பின்னர் திடீரென ராஜா, ரமேஷ் ஆகியோர் உதயசூரியனை கத்தியால் கழுத்து, தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ரமேஷ் மற்றும் இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்ததாக உதயசூரினின் நண்பர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர்மதுராகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சேற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் சோழத்தரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    அதில் அந்த வாலிபரின் முதுகு மற்றும் உடலின் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் வேறு ஏதாவது பொருள் கிடக்கிறதா? என்று சம்பவ இடத்தை சுற்றிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தின் அருகே சட்டை மற்றும் கைலி ஒன்று கிடந்ததை பார்த்தனர். சட்டை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. கைலியின் அருகே கிடந்த ஒரு பேப்பரில் மொபைல் நம்பர் எழுதி இருந்தது.

    ஆனால் அதில் கடைசி 2 இலக்க நம்பர் இல்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நம்பரை தொலை தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

    வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்தை சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரை மர்ம மனிதர்கள் அடித்து கொலை செய்து உடலை சேற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சந்தேகபடும்படியாக கிராமத்தில் யாராவது நடமாடினார்களா? என்று பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல் அருகே போதையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சுரைக்காய்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 36). இவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொட்டமாயனூரில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார்.

    பின்னர் மீண்டும் போதையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதி 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முருகபாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட கொலையாளியை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளை வீரமாணிக்கபுரம் அருகே உள்ள தொம்மை மிக்கேல்புரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பால்துரை (வயது19). இவர் தனது தாயார் சுசீலாவுடன் ராஜவல்லிபுரத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை இவரது தலை துண்டிக்கப்பட்டு மேல பாலாமடை சமுதாய நலக்கூட கலையரங்க மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

    உடல் தாமிரபரணி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியாசெல்வி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இதில் பால்துரை அந்த பகுதியில் ரவுடியாக வளர்ந்து வந்ததால் மற்றொரு பிரிவை சேர்ந்த சிலருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் சம்பவத்தன்று பால்துரையை தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து, தலை துண்டித்து கொலை செய்தனர்.

    பின்பு உடலை தாமிரபரணி ஆற்றில் வீசி விட்டு தலையை மேல பாலாமடை கலையரங்க மேடையில் வைத்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார், மகாதேவன், சுப்பிரமணியன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இவர்கள் சீவலப்பேரியை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் மகாதேவனை போலீசார் இன்று கைது செய்தனர். தனி இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது நண்பர்கள் அருண் குமார், சுப்பிரமணியன் உள்பட 3 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். #tamilnews
    கோவையை அடுத்த சூலூரில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜய் குமார் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அஜய் குமார் வீடு அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது கழுத்து, தோள், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அஜய்குமார் நேற்று இரவு 10 மணி அளவில் தனது தந்தை ஆனந்த்குமாரிடம் ரூ.100 வாங்கிக் கொண்டு, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார்.

    அதன் பிறகு என்ன நடந்தது? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது?அஜய் குமாருடன் பேக்கரிக்கு சென்ற நண்பர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜய்குமார் கடந்த சில நாட்களுக்கு வேலைக்கு செல்ல வில்லை என கூறப்படுகிறது. காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×