என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth killed"

    • மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசினர்.
    • சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே நாட்டுவெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது25). வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் அதே பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசினர். இதில் ஒரு குண்டு மட்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிர் தப்பிக்க ஓட முயன்றனர்.

    ஆனால் மர்ம கும்பல் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தீபன், ஜாவித்துக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தீபனின் கை, தோள் பட்டையிலும் காயம் ஏற்பட்டு இருந்தது.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது முகேஷ் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான முகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த தீபனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், ஜாவித்துக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. முகேசின் தம்பி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாசுடன் பழகி வந்து உள்ளார். ஆகாசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து முகேஷ் தனது தம்பியை ஆகாசுடன் பழகுவதை தவிர்க்க கூறினார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாசுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவரது காது அறுந்தது.

    இதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போது கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை திருவள்ளூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு, தமிழரசி, மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் பார்வையிட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த முகேசின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மோப்பநாய் நிக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? இதில் ரவுடி கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 25). இவரும், முத்துப்பாண்டி என்பவரும் சிவகாமிபுரம் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார்த்திக் ஒரு பிரிட்ஜை பழுது பார்க்கும்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அருணாகரண் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அருணாகரன் மீது மோதியது.
    • இதனையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள்சாலை, குமாரசாமி நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அருணாகரண் (வயது 38). இவர் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அருணாகரன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அருணாகரணுக்கு தலை உள்பட உடல் முழுதும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அருணாகரன் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக போக்குவரத்து விதிகளுக்கு மாறாக தூத்துக்குடி மாநகர சாலைகள், திருச்செந்தூர் சாலை, துறைமுக சாலைகளில், வலதுபுற வாகன பயணம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 'சைலன்ஸர்' இல்லாமல் இரைச்சலுடன் வாகனங்கள் ஓட்டப்படுகிறது. இதனால் தொடர் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் நெருக்கடியான பகுதியில் உள்ள லாரி செட்டுகளாலும் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆம்லெட்டை அதிகமாக சாப்பிட்ட செல்லப்பனை முருகன் கண்டித்து வாக்குவாதம் செய்தார்.
    • இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் உய்யாலி குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (30). இவரது நெருங்கிய உறவினர் முருகன் (32).

    இருவரும் நேற்று இரவு புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கார் ஷோரூம் ஒன்றின் அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது வாங்கி வந்திருந்த ஆம்லெட்டை செல்லப்பன் அதிகமாக சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனை முருகன் கண்டித்து வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த விறகு கட்டையால் செல்லப்பனின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த செல்லப்பன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

    தகவலறிந்ததும் கல்பாக்கம் போலீசார் விரைந்து வந்து செல்லப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக அதே பகுதியில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ஆம்லேட்டுக்காக வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
    • விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே புதிய காவு கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் திருப்போனித்துரா அருகே சூரக்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 28) என்பவர் ஓட்டினார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு காலி வீட்டில் பட்டாசுகளை சிலர் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளுக்கும் தீ பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. அருகில் உள்ள வீடுகள் அதிர்ந்ததோடு, ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விஷ்ணு உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது. சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. 20 வீடுகள் சேதமடைந்தன. பட்டாசு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திருப்போனித்துரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது.
    • படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே உள்ள புதியகாவு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் கொண்டுவரப்பட்டன.

    திருப்போனித்துரா அருகே உள்ள சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அதிலிருந்து பற்றிய தீ, பட்டாசுகளுடன் நின்ற வாகனத்துக்கும் பரவியது.

    இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பட்டாசுகள் ஏற்றி வந்த வாகனத்தை ஓட்டிவந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது28) பரிதாபமாக இறந்தார்.

    படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் திவாகரன் (55) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பட்டாசு விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த அனில்(49), மதுசூதனன்(60), ஆதர்ஷ்(29), ஆனந்தன்(69) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தேவசம் அதிகாரிகள் சதீஷ்குமார், சசிகுமார், ஒப்பந்த தொழிலாளர்கள் வினித், வினோத் ஆகிய 4 பேரை ஹில்பேலஸ் போலீசார் இன்று கைது செய்தனர்.

    சஜேஷ்குமார், தேவசம் செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சத்யம், ஒப்பந்ததாரர்கள் ஆதரஷ் உள்ளிட்ட சிலர் மீதும் 305, 308, 427, 337 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    • இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
    • இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதையடுத்து அந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.

    இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யா ராணுவத்தில் இருந்த கேரள வாலிபர் பலியாகி இருக்கிறார்.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருச்சூர் நாயரங்கடி பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சந்தீப்(வயது36). இவர் உள்பட 7 பேர் கடந்த ஏப்ரல் மாதம் சாலக்குடியில் இருந்து ஒரு ஏஜென்சி மூலமாக ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்றனர். அங்கு சென்ற சந்தீப் மாஸ்கோவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்வதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    பின்பு ரஷ்ய ராணுவ முகாமில் உள்ள கேண்டீனில் வேலை பார்ப்பதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ ரோந்து குழுவுடன் சந்தீப் சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நடத்திய தாக்குதலில் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த 12 பேரும் கொல்லப்பட்டனர்.

    அவர்களுடன் சந்தீப்பும் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.

    ராணுவ முகாமில் உள்ள கேண்டீனில் வேலை பார்த்ததாக கூறப்பட்ட சந்தீப், ராணுவ குழுவில் இணைந்தது எப்படி? என்பது தெரியவில்லை. ரஷ்யாவில் குடியுரிமை பெற ராணுவத்தில் சேரும் முறை இருக்கிறது. அதற்காக அவர் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஆனால் அதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தீப் ரஷ்ய குடியுரிமை பெற்றிருந்தால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் பிரச்சினை ஏற்படும். அதே நேரத்தில் இந்திய தூதரகம் தலையிட்டு சந்தீப் உடலை கேரளாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.
    • 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    ஓச்சேரி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன், விஜயகணபதி. இவர்களுக்கும் திருமால்பூரை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடை பிரேம், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.

    இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பிரேம் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    நெல்வாய் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் திருமால்பூர் மற்றும் நெல்வாய் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது.

    • ஆம்னி பஸ் ,பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கால் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட சாத்தனூர் பஸ் நிறுத்தத்தின் சாலை ஓரமாக நேற்று நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று சென்றது. அப்போது சாத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நடந்து சென்ற அந்த வாலிபர் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலே அந்த வாலிபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசின் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர். ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
    ராணிப்பேட்டை:

    சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில், சென்னையிலிருந்து, ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது அடையாளம் செய்த வாகனம் மோதி உள்ளது. 

    இதில் படுகாயமடைந்த வினோத் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கரசமங்கலம் சிங்கா ரெட்டியூரில் சிலர் இன்று காலை கானாறு வழியாக நடந்து சென்றனர். அப்போது கானாறு பள்ளத்தில் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

    மேலும் அவரது ஒரு கையில் 5 விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என தெரியவில்லை.

    இறந்தவர் சிகப்பு கலரில் டி-சர்ட்டும், சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோத தகராறில் கொலை செய்து இங்கு வீசி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த அக்கச்சிகுப்பம் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட நண்பர்களும் நேற்று முன்தினம் இரவு பெரியக்குடி கொண்டா திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது சின்னக்குடி கொண்டா கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், வினோத்குமார் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாஸ்கரின் தம்பி பிரதாப் (21) திரவுபதி அம்மன் கோவிலுக்கு டிராக்டரில் தண்ணீர் ஏற்றி அச்கச்சிக்குப்பம் வழியாக ஓட்டிச்சென்றார்.

    இதனைக்கண்ட வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் டிராக்டரை மடக்கி நிறுத்த முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பிரதாப் வேகமாக டிராக்டரை ஓட்டினார்.

    வினோத்குமார் ஓடிச்சென்று டிராக்டரின் பின்பகுதியில் ஏறி டிரைவர் இருக்கையை நோக்கி சென்றார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். டிராக்டரின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது.

    இதில் படுகாயமடைந்த வினோத்குமார் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை விக்டர்ராஜா சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

    வினோத்குமார் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×