என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை
    X

    உயிரிழந்த முகேஷ்

    திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை - நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை

    • மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசினர்.
    • சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே நாட்டுவெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது25). வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் அதே பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசினர். இதில் ஒரு குண்டு மட்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிர் தப்பிக்க ஓட முயன்றனர்.

    ஆனால் மர்ம கும்பல் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தீபன், ஜாவித்துக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தீபனின் கை, தோள் பட்டையிலும் காயம் ஏற்பட்டு இருந்தது.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது முகேஷ் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான முகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த தீபனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், ஜாவித்துக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. முகேசின் தம்பி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாசுடன் பழகி வந்து உள்ளார். ஆகாசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து முகேஷ் தனது தம்பியை ஆகாசுடன் பழகுவதை தவிர்க்க கூறினார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாசுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவரது காது அறுந்தது.

    இதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போது கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை திருவள்ளூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு, தமிழரசி, மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் பார்வையிட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த முகேசின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மோப்பநாய் நிக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? இதில் ரவுடி கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×