search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal katchi"

    • மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
    • மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டிஇ ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார்,

    திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ.,

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு மற்றும் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.

    முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார்.

    பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் சிலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவார் என கூறப்படுகிறது. இதை போன்று மாநாட்டில் பங்கேற்கும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் இருந்து திருச்சி புறப்பட்டு வருகிறார்.

    மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    முதல்வர் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    மாநாடு மேடை மற்றும் பந்தள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது.
    • சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி, கால்கோல் விழா ஆகியவற்றை ஒன்றிணைத்து 'வெல்லும் ஜனநாயக மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா, தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைவதால் இதனை எழுச்சியுடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் திருமாவளவன் செய்து வருகிறார். சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்கிறார்கள்.

    மாநாட்டையொட்டி சமத்துவச் சுடர் ஓட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு திருமாவளவன் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடக்கும் சுடர் ஓட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் த.பார்வேந்தன் தலைமை தாங்குகிறார். 4 நாட்கள் சுடர் ஓட்டம் ஓடி மாநாட்டு பந்தலில் அதனை திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார்.

    இதனை வழக்கறிஞர்கள் பார்த்திபன், வேல்முருகன், காசி, சொக்கலிங்கம், உதயகுமார், சத்தியமூர்த்தி, கராத்தே பாண்டியன், தினேஷ், திலீபன், செஞ்சுடர் ராமதாஸ், பிரபுவளவன், செல்வகுமார், சரிதா, அன் பழகன், முருகையன், ரத்தினவேல், மணிமாறன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    • தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் பேச்சு தி.மு.க மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

    பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

    விடுதலை சிறுத்தைகள் சார்பில் டிசம்பர் 29-ந்தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.

    அதன்படி திருச்சியில் ஜனவரி 26-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாநாட்டுக்கு முதல்- அமைச்சரிடம் தேதியை முடிவு செய்வதற்காக இன்று அவரை சந்தித்தேன். அவரும் வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் பேச்சு தி.மு.க மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

    தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை விட தமிழ்நாட்டில் தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்பதில் தான் அவர் குறியாக இருக்கிறார்.

    இதனால் தொடர்ந்து இப்படி கருத்துக்களை முன் வைத்து வருகிறார். அவர் மட்டுமல்ல பா.ஜ.க.வை சேர்ந்த அனைவருமே இந்த அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க தான் எதிர்சட்சி என்பதை என்பதை காட்டிக்கொள்ளும் முனைப்பும், முயற்சியும் தான் அவர்களின் நடவடிக்கை மேலோங்கி இருக்கிறது.

    மாநில அரசு கோரிய 21 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    மதுரை:

    மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29-ந்தேதியன்று திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

    தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைப்பதாக அமையும் என்று நம்புகிறோம். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமையும். ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்துகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைகின்ற சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சென்னையில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள முடியவில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ரூ. 5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற தருணங்களில் மாநில அரசை விமர்சிப்பதை அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் கைவிட வேண்டும் என்றார்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    • எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.
    • அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம். என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.

    மத்திய அரசு ரூ.1,000 கோடி மட்டுமே பேரிடர் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ரூ.5,000 கோடி வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் அதில் ஐந்தில் ஒரு பங்கு என்கிற வகையில் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்க முன் வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசு அல்லது பிரதமரை வலியுறுத்தி ரூ.5,000 கோடி பெறுவதற்கு ஆதரவு தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மண்டல கூட்டத்திலும் பங்கேற்று வரும் திருமாவளவன், பொறுப்பாளர்களிடம் முக்கியமாக ஒரு சில கேள்விகளை கேட்டு வருகிறார்.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்களில் இருந்து 3 லட்சம் பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' என்னும் மாநாடு 23-ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் அகில இந்திய அளவில் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    தமிழக அரசியலில் மட்டுமின்றி பிற மாநிலங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநாடு எழுச்சியுடன் நடைபெற தேவையான ஆயத்த பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கு குறையாமல் தொண்டர்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதற்காக மண்டலம் வாரியாக மாவட்ட செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    பெரம்பலூர், திருவண்ணாமலை, கோவை மண்டல கூட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. இன்று சேலத்தில் நடைபெறுகிறது.

    இதையடுத்து விழுப்புரத்தில் நாளை (3-ந்தேதியும்) அதனை தொடர்ந்து 4-ந்தேதி சென்னை தாம்பரம் கேம்ப் ரோட்டில் மண்டல கூட்டம் நடக்கிறது.

    சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்டல தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒவ்வொரு மண்டல கூட்டத்திலும் பங்கேற்று வரும் திருமாவளவன், பொறுப்பாளர்களிடம் முக்கியமாக ஒரு சில கேள்விகளை கேட்டு வருகிறார்.

    எத்தனை வாகனங்களில் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்கள். பகுதி, பேரூர், நகரம், மாவட்டம் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்களில் இருந்து 3 லட்சம் பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட செயலாளர்கள் மூலம் திருமாவளவன் முடுக்கி விட்டுள்ளார்.

    இதற்கிடையில் மாநாடு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திருமாவளவன் தலைமையில் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முகநூல், எக்ஸ் தளம், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் களமாடுவோர் அனைவரும் பங்கேற்க வேண்டும என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    • கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

    சேலம்:

    திருச்சியில் வருகிற 23-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

    இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. முத்துமகால் திருமண மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.

    • 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.
    • கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமையும்.


    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதமாக வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டியது போல 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.

    இந்தியா கூட்டணி, பா.ஜ.கவை அப்புறப்படுத்த ஒருங்கிணைத்துள்ளது. தி.மு.க அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் பல்கலைக்கழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் இந்திரா நகரில் ஜாதி வெறியர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உன்னாவிரதம் இருந்து வருகின்றனர்.
    • சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டம் மூலம் வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் சூரப்பள்ளி, குப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் பெரிய கிணறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கும் என்றும், இந்த திட்டத்தை மாற்று நீர் வழிப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் ஜலகண்டாபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வயது குழந்தை உள்பட குப்பம்பட்டியை சேர்ந்த பாக்கியம் (வயது 53), லோகாம்மாள் (65) ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். இதில் சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாக்கியம், லோகாம்மாள் ஆகியோர் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை குடியிருப்பு பகுதியில் அமுல்படுத்தாமல் மாற்று நீர் ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • விளம்பரங்கள் செய்யும்போது இந்த வாசகங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார் திருமாவளவன்.
    • அண்ணன் ஏதோ திட்டத்தோடுதான் இதை கட்டாயப்படுத்தி இருக்கிறார் என்று தம்பிமார் பேசிக் கொள்கிறார்கள்.

    விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டுக்கு தயாராகி வரும் நிலையில் விளம்பரங்கள் செய்யும்போது இந்த வாசகங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார் திருமாவளவன்.

    அதாவது "வெல்லும் ஜனநாயகம் மாநாடு, சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்" என்பதுதான் அந்த வாசகங்கள்.

    அடுத்த பாய்ச்சல் என்றால் எதை நோக்கி...? அண்ணன் ஏதோ திட்டத்தோடுதான் இதை கட்டாயப்படுத்தி இருக்கிறார் என்று தம்பிமார் பேசிக் கொள்கிறார்கள்.

    • கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கட்சியினர் ஈடுபட்டு இருந்தனர்.
    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் அருந்தியர் காலனி கிராமத்தில் சுமார் 45-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் தங்களது ஊரின் எல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நட்டு விழா காலங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கட்சியினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு வந்த மத்தூர் போலீசார் கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை போலீசார் கிராம மக்களை விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் முகாமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குபேந்திரன், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல துணை செயலாளர் மோகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்சியினர் கூறுகையில்:- கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், நேற்று இரவு கிராமத்தில் இருந்த பெண்களை சமூக பெயரை கூறி போலீசார் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தை புதுப்பித்து நடும் பணியில் ஈடுபட்டதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இது என்னுடைய சொந்த தொகுதி, இந்த தொகுதியில் போட்டியிடவே எனக்கு ஆர்வம்.
    • ஒவ்வொரு நாளும் மக்களோடு தான் இருக்கிறேன். சொந்த வேலைக்காக நான் முடங்கவில்லை.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார், அவர் தொகுதி மாறுகிறார், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவில்லை என்ற தகவல்கள் அரசியல் களத்தில் பரவி வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தை இந்த முறையும் அதே கூட்டணியில் நீடித்து கூடுதல் இடங்களை பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் கட்டமைப்பு பணிகளை கடந்த மாதமே தொடங்கி விட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி வெற்றி பெற்று திருமாவளவனும், ரவிக்குமாரும் பாராளுமன்றத்திற்குள் சென்றனர். இந்த முறை கூடுதலாக ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.விடம் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறுகிறார் என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மனம் திறந்தார். சிதம்பரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் திருமாவளவன் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியதாவது:-

    இது என்னுடைய சொந்த தொகுதி, இந்த தொகுதியில் போட்டியிடவே எனக்கு ஆர்வம். இந்த தொகுதியில் ஏற்கனவே 5 முறை போட்டியிட்டு இருக்கிறேன். 2 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். யார் ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும், வெற்றி பெற செய்தாலும், வெற்றி பெறும் வாய்ப்பை மறுத்தாலும் இந்த தொகுதியை நான் நேசிக்கிறேன்.

    இந்த தொகுதிக்கு எதிராக செயல்பட்டது இல்லை. மக்களுக்கு எதிராக செயல்படவில்லை. 24 மணி நேரமும் அரசியல் செய்கிறவன் நான். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பாக, தென் இந்திய மாநிலங்களுக்கு சென்று வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மக்களோடு தான் இருக்கிறேன். சொந்த வேலைக்காக நான் முடங்கவில்லை. தனிப்பட்ட எனக்காக நேரத்தை எடுத்து கொண்டது இல்லை.

    ஆகவே நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன். இதில் மாற்று கருத்து இல்லை. எனக்கு எதிரானவர்கள் வதந்தியை பரப்புகிறார்கள். அது அவர்களது ஆசை, விருப்பம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×