search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தை கட்சி"

    • கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
    • வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சிக்கு தி.மு.க. 2 தனி தொகுதிகளை ஒதுக்கி தொகுதி உடன்பாடு செய்துள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை கடந்த முறை போல ஒதுக்கி இருப்பதால் அடிப்படையான தேர்தல் பணிகளை அங்கு தொடங்கிவிட்டனர்.

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் மூத்த நிர்வாகிகள் சிலர் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கட்சியில் எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

    இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத் தமிழன் விழுப்புரம் தொகுதியில் தன்னை போட்டியிட அனு மதிக்க வேண்டும் என்று தலைவர் திருமாவளவனிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    அப்போது அவர் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். கட்டாயம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.

    ரவிக்குமார் ஒருமுறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.பி.யாக இருந்துவிட்டார். இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். எல்லோருக்கும் தேர்தலில் நிற்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.

    விழுப்புரம் தொகுதி நன்கு அறிந்த தொகுதியாகும். வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சங்கத்தமிழனை போல மேலும் சிலர் போட்டியிட மனு கொடுக்க தயாராக உள்ளனர். வக்கீல் எழில் கரோலினை நிறுத்த வேண்டும் என்று மகளிர் அணி சார்பில் வலியுறுத்தப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சியில் விருப்பமனு வாங்கும் நடைமுறை பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இருந்தது இல்லை. ஆனால் இந்த முறை கட்சி நிர்வாகிகள் சிலர் விருப்ப மனுக்களை தாங்களாகவே முன் வந்து கொடுக்கின்றனர்.

    இதனால் ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? புதிதாக ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது கட்சியின் உயர்நிலைக் குழுவில் தான் முடிவு செய்யப்படும்.

    எனவே விழுப்புரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் யார்? என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது.
    • சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி, கால்கோல் விழா ஆகியவற்றை ஒன்றிணைத்து 'வெல்லும் ஜனநாயக மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா, தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைவதால் இதனை எழுச்சியுடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் திருமாவளவன் செய்து வருகிறார். சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்கிறார்கள்.

    மாநாட்டையொட்டி சமத்துவச் சுடர் ஓட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு திருமாவளவன் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடக்கும் சுடர் ஓட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் த.பார்வேந்தன் தலைமை தாங்குகிறார். 4 நாட்கள் சுடர் ஓட்டம் ஓடி மாநாட்டு பந்தலில் அதனை திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார்.

    இதனை வழக்கறிஞர்கள் பார்த்திபன், வேல்முருகன், காசி, சொக்கலிங்கம், உதயகுமார், சத்தியமூர்த்தி, கராத்தே பாண்டியன், தினேஷ், திலீபன், செஞ்சுடர் ராமதாஸ், பிரபுவளவன், செல்வகுமார், சரிதா, அன் பழகன், முருகையன், ரத்தினவேல், மணிமாறன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உன்னாவிரதம் இருந்து வருகின்றனர்.
    • சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டம் மூலம் வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் சூரப்பள்ளி, குப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் பெரிய கிணறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கும் என்றும், இந்த திட்டத்தை மாற்று நீர் வழிப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் ஜலகண்டாபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வயது குழந்தை உள்பட குப்பம்பட்டியை சேர்ந்த பாக்கியம் (வயது 53), லோகாம்மாள் (65) ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். இதில் சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாக்கியம், லோகாம்மாள் ஆகியோர் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை குடியிருப்பு பகுதியில் அமுல்படுத்தாமல் மாற்று நீர் ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார்

    உடுமலை

    திருமாவளவனின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்குமாவட்டம் சார்பில் நடைபெற்றது.

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட எலையமுத்தூர்,செல்வபுரம், கல்லாபுரம், பூளவாடி, கண்ணவ நாயக்கனூர் ,தளி, தீபாலப்பட்டி, வல்லகுண்டபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம் தலைமையில் விழா நடைபெற்றது .கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார் . சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் , மாநில நிர்வாகிகள் கிப்டன் டேவிட் பால், சத்தியமூர்த்தி,உடுமலை ஒன்றிய பொருளாளர் சக்திவேல்,எல்லை முத்தூர் ராமலிங்கம் ,செல்வபுரம் மாரிமுத்து ,தீபாலபட்டி திருமூர்த்தி, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, கடத்தூர் குணசேகரன், மாதவராஜ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு நீலமேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
    • கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீலமேகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீலமேகம் பொறுப்பேற்றதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் மீஞ்சூர், பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அவருடன் தொகுதி செயலாளர் சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் உமாபதி, மீஞ்சூர் நகர செயலாளர் சந்திரசேகர், பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் வினோத், ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது மீஞ்சூர் மற்றும் பொன்னேரி வட்டாரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்து கொண்டனர்.

    கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீலமேகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது.
    • சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து, விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், "பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைவரும் சினிமா புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திரையுலகினர் அவர்களுடைய வேலையை மட்டுமே செய்கின்றனர்.

    தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து மார்கெட் போனதும் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து எளிய முறையில் மக்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான எண்ணத்தோடு இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். ஒரு முற்போக்கு கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். இது தான் இன்று தமிழ்நாட்டில் தேவையான ஒன்றாக இருக்கிறது" என்று கூறினார்.

    இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிராக நான் பேசவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று சொன்னபோது நான் வரவேற்றேன். தற்போது விஜய் அரசியலுக்கு வருவார் என்று யூகங்களால் எழுதியபோதும் அதை நான் வரவேற்றேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல மேடைகளில் கலைஞர்கள் கூட பாடியிருக்கிறார்கள். 'தமிழர்கள் தங்கள் முதல்வர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள்' என்று. அதற்கு காரணம் தமிழக அரசியல் நீண்ட காலமாகவே திரையுலகத்தை சார்ந்ததாக இருக்கிறது.

    திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. அந்திராவில் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார். மற்ற மாநிலங்களில் சூப்பர் ஸ்டார்கள், யாரும் கடைசி காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் கிடைத்த செல்வாக்கு மூலம் அரசியலுக்கு வரலாம், அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்கிற கணக்குகளில் மற்ற மாநிலங்களில் யாரும் செயல்படவில்லை. இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேன். இது நடிகர் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் இல்லை. பொதுவான விமர்சனம்.

    நல்லகண்ணு போன்ற தலைவர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் விடுதலை போராட்ட காலத்தில் சந்தித்த கொடுமைகள் மற்றும் சிறைச்சாலை சென்றது பற்றி நாம் அறிவோம். 98 வயதிலும் அரசியல் மேடைகளில் பேசுகிறார். அவர் தொடாத பிரச்சனை இல்லை. அவர் போராடாத களங்கள் இல்லை. இதுபோன்ற எந்த பங்களிப்பும் இல்லாமலேயே ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற உளவியலை நான் சுட்டிக்காட்டுகிறேன்" என்று கூறினார்.

    • பள்ளியின் பெயர் பலகை மீது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
    • போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூரை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியின் பெயர் பலகை மீது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் தலைமையில் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

    போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி சுவர் மீது சினிமா விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது. ஆனால் இங்கு பள்ளியின் பெயர் பலகை மீது 2 போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். இந்த சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமாவளவன் முன்னிலையில் ஆர்.ஆர். முத்தையன் அந்தக் கட்சியில் இணைந்தார்.
    • திருமாவளவன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    திருப்பூர் :

    அகில இந்திய பிரியங்கா ராகுல் காந்தி பேரவையின் மாநில தலைவர் ஆர்.ஆர்.முத்தையன். இவர் நேற்று அந்த அமைப்பில் இருந்து விலகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலையில் ஆர்.ஆர். முத்தையன் அந்தக் கட்சியில் இணைந்தார். அவருடன் அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை மாவட்ட நிர்வாகிகள் சிவஞானம், பார்த்தீபன் உள்ளிட்டோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். ஆர்.ஆர்.முத்தையன் தலைமையில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை தலைவர் திருமாவளவன் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் துரைவளவன், மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் வாடகை கார்களை இயக்க ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.
    • இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இதில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று வர 2 வாடகை கார்களை பயன்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் வாடகை கார்களை இயக்க ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நாயினார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ஜீவா, இளங்கோ, ராமமூர்த்தி, மதன், ஆல்பர்ட், தென்னரசு உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் வட்டார மருத்துவ அலுவலர் பால மணிகண்டன், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுகாதார பணிகளில் துணை இயக்குனரை சந்தித்து இதுகுறித்து முறையிடுமாறு ஆலோசனை வழங்கினர். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணி தொடங்கி உள்ளது.
    • கட்சிக்கு நற்பெயரை பெற்று தரக்கூடிய நிர்வாகிகளை நியமிப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்து வருகிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 70 மாவட்ட செயலாளர்கள் தற்போது செயலாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் புதிய மாவட்ட செயலாளர் நியமனம் தள்ளிப் போனது.

    இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணி தொடங்கி உள்ளது. இதற்காக 40 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினை கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் நியமித்துள்ளார்.

    இந்த குழுவில் உள்ள தலைமை நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மாவட்ட செயலாளர்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு யாரை இந்த பொறுப்புக்கு பரிந்துரைப்பது என்ற அறிக்கையை கட்சி தலைவரிடம் வழங்கு வார்கள். அதனை திருமாவளவன் இறுதி செய்து சிறப்பாக செயல்படக் கூடியவர்களை அறிவிக்கிறார்.

    அந்த வகையில் கட்சிக்கு நற்பெயரை பெற்று தரக்கூடிய நிர்வாகிகளை நியமிப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கட்சி அறிவித்துள்ள போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று கொண்டு செல்லக்கூடியவர், தொண்டர்களிடமும், தோழமைக் கட்சி நிர்வாகிகளிடமும் பரஸ்பர நட்புறவு கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.

    கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடபடக்கூடிய மாவட்ட செயலாளர்கள் "களை" எடுக்கப்படுகிறார்கள். 2 முறை மாவட்ட செயலாளர்களாக தொடர்ந்து இருக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    அந்த வகையில் தலைமைக்கு திருப்திகரமாக செயல்படாத, உள்ளூர் மட்டும் மாவட்டங்களில் நற்பெயர் இல்லாத மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    மீண்டு ஒருமுறை அவர்களுக்கு பணி தொடர வாய்ப்பு இருந்தாலும் கூட தலைமைக்கு தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் 2-வது வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

    அதனால் பல மாவட்டங்களில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னையில் 6 மாவட்ட செயலாளர்கள் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. பிற மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், மாவட்ட செயலாளர் பதவிக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்து தலைவருக்கு அறிக்கை வழங்குவார்கள். அவர் இறுதியாக அதில் யாரை நியமிப்பது என முடிவு செய்து அறிவிப்பார்.

    தலைவரின் 60-வது பிறந்த நாள் விழா ஆகஸ்டு 17-ந்தேதி வருவதால் அதனை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முன்னதாக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பவார்கள் என்றார்.

    ×