என் மலர்
நீங்கள் தேடியது "viduthalai siruthai katchi"
- இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர்.
- ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் பாராளுமன்றக் கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் பாராளுமன்றப் புதிய கட்டடத்தை பிரதமரே திறக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத்தலைவர் ஆகிய இருவரும் விழாவுக்கு அழைக்கப்படவில்லை.
அது மட்டுமின்றி தீவிர சனாதன பாசிசப் பற்றாளர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட-உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையே ஆகும்.
இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர். சாவர்க்கரின் கருத்தியலால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே என்பவன் துப்பாக்கியால் சுட்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான்.
அந்தப் படுகொலை வழக்கில் சாவர்க்கரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அது குறித்து நேருவுக்கு 1948-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி சர்தார் பட்டேல் எழுதிய கடிதத்தில் மகாத்மா காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்டது சாவர்க்கரின் கீழ் இயங்கும் நபர்கள்தான் எனக் குறிப்பிட்டிருந்தார். நேரடியாக சாவர்க்கரின் கீழ் இருந்த இந்து மகாசபையின் வெறித்தனமான பிரிவுதான் சதித்திட்டத்தை தீட்டி அதை நிறைவேற்றியது" என அதில் அவர் எழுதியிருந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் புகழ் பெற்றவையாகும்.
ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் பாராளுமன்றக் கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் புதிய பாராளுமன்றக் கட்டடம் திறக்கப்படும் மே 28-ம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் இல்லந்தோறும் கறுப்புக்கொடி ஏற்றவேண்டும், கறுப்பு உடை அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்திகளும் தமது கண்டனத்தைப் பதிவு செய்திட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது.
- சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், "பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைவரும் சினிமா புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திரையுலகினர் அவர்களுடைய வேலையை மட்டுமே செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து மார்கெட் போனதும் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து எளிய முறையில் மக்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான எண்ணத்தோடு இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். ஒரு முற்போக்கு கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். இது தான் இன்று தமிழ்நாட்டில் தேவையான ஒன்றாக இருக்கிறது" என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிராக நான் பேசவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று சொன்னபோது நான் வரவேற்றேன். தற்போது விஜய் அரசியலுக்கு வருவார் என்று யூகங்களால் எழுதியபோதும் அதை நான் வரவேற்றேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல மேடைகளில் கலைஞர்கள் கூட பாடியிருக்கிறார்கள். 'தமிழர்கள் தங்கள் முதல்வர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள்' என்று. அதற்கு காரணம் தமிழக அரசியல் நீண்ட காலமாகவே திரையுலகத்தை சார்ந்ததாக இருக்கிறது.
திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. அந்திராவில் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார். மற்ற மாநிலங்களில் சூப்பர் ஸ்டார்கள், யாரும் கடைசி காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் கிடைத்த செல்வாக்கு மூலம் அரசியலுக்கு வரலாம், அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்கிற கணக்குகளில் மற்ற மாநிலங்களில் யாரும் செயல்படவில்லை. இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேன். இது நடிகர் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் இல்லை. பொதுவான விமர்சனம்.
நல்லகண்ணு போன்ற தலைவர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் விடுதலை போராட்ட காலத்தில் சந்தித்த கொடுமைகள் மற்றும் சிறைச்சாலை சென்றது பற்றி நாம் அறிவோம். 98 வயதிலும் அரசியல் மேடைகளில் பேசுகிறார். அவர் தொடாத பிரச்சனை இல்லை. அவர் போராடாத களங்கள் இல்லை. இதுபோன்ற எந்த பங்களிப்பும் இல்லாமலேயே ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற உளவியலை நான் சுட்டிக்காட்டுகிறேன்" என்று கூறினார்.
- பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு நீலமேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
- கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீலமேகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னேரி:
விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீலமேகம் பொறுப்பேற்றதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் மீஞ்சூர், பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அவருடன் தொகுதி செயலாளர் சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் உமாபதி, மீஞ்சூர் நகர செயலாளர் சந்திரசேகர், பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் வினோத், ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது மீஞ்சூர் மற்றும் பொன்னேரி வட்டாரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்து கொண்டனர்.
கட்சி நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள நீலமேகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- 1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததில் இருந்து மூத்த திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது.
- வருகிற தேர்தல்களில் விடுதலை சிறுத்தை தனது செல்வாக்கை மேலும் நிலைநிறுத்தி கொள்ள தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கான களப்பணிகளில் இறங்கி உள்ளது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தங்கள் பலத்தை வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது தேர்தல் களப்பணிகளை தொடங்கி உள்ளது. தேர்தலின்போது முக்கிய பங்கு வகிக்கும் தங்கள் பூத் ஏெஜண்டுகளுக்கு பயிற்சி அளித்து பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு சில தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தோல்வியையும் சந்தித்தன. அதுபோன்ற நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலில் உருவாகக்கூடாது என்பதற்காக தங்களுக்கு செல்வாக்கு மிக்க பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த 2 கட்சிகளிலும் உள்ள தலைவர்கள், கூட்டணியின் வெற்றிக்கு பங்களிக்கும் இளம் வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க. ஏற்கனவே இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் முன்னிலையில் உள்ளது.
1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததில் இருந்து மூத்த திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு கட்சி 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டு எழுந்தது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 9 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் 2021 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி தனது பலத்தை நிரூபித்தது. ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் 4 இடங்களை தனது சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து வருகிற தேர்தல்களில் விடுதலை சிறுத்தை தனது செல்வாக்கை மேலும் நிலைநிறுத்தி கொள்ள தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கான களப்பணிகளில் இறங்கி உள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு மண்டலங்கள் மற்றும் 4 பாராளுமன்ற தொகுதிகளில் பூத் ஏஜெண்டுகளை தயார்படுத்தும் வகையில் 2 நிகழ்ச்சிகளை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நடத்தி உள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கூறும்போது, ஒரு கட்சி அதிக ஆசைப்படுவது இயற்கையானது. அடிமட்டத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மட்டுமே உள்ளன. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் நமக்கு எத்தனை பலன் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு கூட்டணியின் வெற்றிக்கு நாமும் பங்களிக்க வேண்டும். மற்ற கட்சிகளுக்கு மத்தியில் விடுதலை சிறுத்தை தனித்து நிற்க வேண்டும். இதற்கு முன் எங்களிடம் 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தது இல்லை. எங்கள் கட்சியில் தொண்டர்களின் பங்களிப்பு அதிகம். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் இந்த உற்சாகத்தை எங்களால் பயன்படுத்தி வாக்குகளாக மாற்ற தெரியவில்லை. அந்த வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம், திண்டுக்கல், திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தை நடத்தி உள்ளதாகவும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
2 திராவிட கட்சிகளும் வாக்குச்சாவடிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் மற்ற கட்சியினர் அதுபோல இல்லை. இந்த வேறுபாடு களையப்பட வேண்டும். பூத் ஏஜெண்டுகள் தயாரிப்பதில் நாங்கள் சற்று பின்தங்கி உள்ளோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
- ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
- போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.
சென்னை:
டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
- மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
விசிக சார்பில் 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம் என திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள்.
அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல "அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்" என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.
அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்...வாய்மையே வெல்லும்" என்று எழுதியுள்ளார்.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867
சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686
முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குறித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட செயலாளர்கள் செல்வம், வி.கோ.ஆதவன், செல்லத்துரை, அம்பேத்வளவன், அன்புச்செழியன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திடீரென அவர்கள் கோயம்பேடு 100 அடி சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews






