search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூத் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி அளிக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் தீவிரம்
    X

    பூத் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி அளிக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் தீவிரம்

    • 1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததில் இருந்து மூத்த திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது.
    • வருகிற தேர்தல்களில் விடுதலை சிறுத்தை தனது செல்வாக்கை மேலும் நிலைநிறுத்தி கொள்ள தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கான களப்பணிகளில் இறங்கி உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தங்கள் பலத்தை வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது தேர்தல் களப்பணிகளை தொடங்கி உள்ளது. தேர்தலின்போது முக்கிய பங்கு வகிக்கும் தங்கள் பூத் ஏெஜண்டுகளுக்கு பயிற்சி அளித்து பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு சில தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தோல்வியையும் சந்தித்தன. அதுபோன்ற நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலில் உருவாகக்கூடாது என்பதற்காக தங்களுக்கு செல்வாக்கு மிக்க பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்.

    இந்த 2 கட்சிகளிலும் உள்ள தலைவர்கள், கூட்டணியின் வெற்றிக்கு பங்களிக்கும் இளம் வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க. ஏற்கனவே இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் முன்னிலையில் உள்ளது.

    1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததில் இருந்து மூத்த திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு கட்சி 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டு எழுந்தது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 9 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையில் 2021 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி தனது பலத்தை நிரூபித்தது. ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் 4 இடங்களை தனது சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து வருகிற தேர்தல்களில் விடுதலை சிறுத்தை தனது செல்வாக்கை மேலும் நிலைநிறுத்தி கொள்ள தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கான களப்பணிகளில் இறங்கி உள்ளது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு மண்டலங்கள் மற்றும் 4 பாராளுமன்ற தொகுதிகளில் பூத் ஏஜெண்டுகளை தயார்படுத்தும் வகையில் 2 நிகழ்ச்சிகளை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நடத்தி உள்ளார்.

    இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கூறும்போது, ஒரு கட்சி அதிக ஆசைப்படுவது இயற்கையானது. அடிமட்டத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மட்டுமே உள்ளன. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் நமக்கு எத்தனை பலன் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு கூட்டணியின் வெற்றிக்கு நாமும் பங்களிக்க வேண்டும். மற்ற கட்சிகளுக்கு மத்தியில் விடுதலை சிறுத்தை தனித்து நிற்க வேண்டும். இதற்கு முன் எங்களிடம் 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தது இல்லை. எங்கள் கட்சியில் தொண்டர்களின் பங்களிப்பு அதிகம். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

    ஆனால் இந்த உற்சாகத்தை எங்களால் பயன்படுத்தி வாக்குகளாக மாற்ற தெரியவில்லை. அந்த வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கும்பகோணம், திண்டுக்கல், திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தை நடத்தி உள்ளதாகவும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    2 திராவிட கட்சிகளும் வாக்குச்சாவடிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் மற்ற கட்சியினர் அதுபோல இல்லை. இந்த வேறுபாடு களையப்பட வேண்டும். பூத் ஏஜெண்டுகள் தயாரிப்பதில் நாங்கள் சற்று பின்தங்கி உள்ளோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×