search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே 28-ந்தேதி வீடுதோறும் கறுப்பு கொடி ஏற்றுவோம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
    X

    மே 28-ந்தேதி வீடுதோறும் கறுப்பு கொடி ஏற்றுவோம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

    • இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர்.
    • ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் பாராளுமன்றக் கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் பாராளுமன்றப் புதிய கட்டடத்தை பிரதமரே திறக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத்தலைவர் ஆகிய இருவரும் விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    அது மட்டுமின்றி தீவிர சனாதன பாசிசப் பற்றாளர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட-உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையே ஆகும்.

    இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர். சாவர்க்கரின் கருத்தியலால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே என்பவன் துப்பாக்கியால் சுட்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான்.

    அந்தப் படுகொலை வழக்கில் சாவர்க்கரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அது குறித்து நேருவுக்கு 1948-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி சர்தார் பட்டேல் எழுதிய கடிதத்தில் மகாத்மா காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்டது சாவர்க்கரின் கீழ் இயங்கும் நபர்கள்தான் எனக் குறிப்பிட்டிருந்தார். நேரடியாக சாவர்க்கரின் கீழ் இருந்த இந்து மகாசபையின் வெறித்தனமான பிரிவுதான் சதித்திட்டத்தை தீட்டி அதை நிறைவேற்றியது" என அதில் அவர் எழுதியிருந்தார்.

    பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் புகழ் பெற்றவையாகும்.

    ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் பாராளுமன்றக் கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.

    இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் புதிய பாராளுமன்றக் கட்டடம் திறக்கப்படும் மே 28-ம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் இல்லந்தோறும் கறுப்புக்கொடி ஏற்றவேண்டும், கறுப்பு உடை அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்திகளும் தமது கண்டனத்தைப் பதிவு செய்திட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×