search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி மாநாட்டிற்கு தொண்டர்களை திரட்ட திருமாவளவன் சுற்றுப்பயணம்
    X

    திருச்சி மாநாட்டிற்கு தொண்டர்களை திரட்ட திருமாவளவன் சுற்றுப்பயணம்

    • ஒவ்வொரு மண்டல கூட்டத்திலும் பங்கேற்று வரும் திருமாவளவன், பொறுப்பாளர்களிடம் முக்கியமாக ஒரு சில கேள்விகளை கேட்டு வருகிறார்.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்களில் இருந்து 3 லட்சம் பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' என்னும் மாநாடு 23-ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் அகில இந்திய அளவில் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    தமிழக அரசியலில் மட்டுமின்றி பிற மாநிலங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநாடு எழுச்சியுடன் நடைபெற தேவையான ஆயத்த பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கு குறையாமல் தொண்டர்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதற்காக மண்டலம் வாரியாக மாவட்ட செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    பெரம்பலூர், திருவண்ணாமலை, கோவை மண்டல கூட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. இன்று சேலத்தில் நடைபெறுகிறது.

    இதையடுத்து விழுப்புரத்தில் நாளை (3-ந்தேதியும்) அதனை தொடர்ந்து 4-ந்தேதி சென்னை தாம்பரம் கேம்ப் ரோட்டில் மண்டல கூட்டம் நடக்கிறது.

    சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்டல தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒவ்வொரு மண்டல கூட்டத்திலும் பங்கேற்று வரும் திருமாவளவன், பொறுப்பாளர்களிடம் முக்கியமாக ஒரு சில கேள்விகளை கேட்டு வருகிறார்.

    எத்தனை வாகனங்களில் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்கள். பகுதி, பேரூர், நகரம், மாவட்டம் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்களில் இருந்து 3 லட்சம் பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட செயலாளர்கள் மூலம் திருமாவளவன் முடுக்கி விட்டுள்ளார்.

    இதற்கிடையில் மாநாடு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திருமாவளவன் தலைமையில் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முகநூல், எக்ஸ் தளம், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் களமாடுவோர் அனைவரும் பங்கேற்க வேண்டும என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×